இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய அணி சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார்கள். இவர்களது சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், முதல் இரண்டு இடங்களில் இவர்கள்தான் இருக்கின்றனர். தற்போது நடந்து கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர்களின் சாதனை பற்றியும், இருவரும் இணைந்து நிகழ்த்திய சாதனை பற்றியும் விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


அஸ்வின் மற்றும் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடியபோது

ஐ.பி.எல்.லில் தொடங்கிய நட்பு :

2012-ஆம் ஆண்டு ஏலத்தில் 10 கோடிக்கு சென்னை அணியால் ஜடேஜா வாங்கப்பட்டார். அதற்கு முன் 2008-ஆம் ஆண்டு ட்ராஃப்ட்டிங் முறையில் சென்னை அணியில் அஸ்வின் எடுக்கப்பட்டிருந்தார். இருவரது நட்பும் 2012-ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னை அணிக்காக இரு ஸ்பின் தூண்களாக இவர்கள் இருந்தனர். 2014-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கினர். ஜடேஜா எப்பொழுது சென்னை அணிக்கு வந்தாரோ அன்றையிலிருந்து இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். மூன்று ஃபார்மட்டிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆரம்பித்து பல போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக இருந்துள்ளனர்.


வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால்

தடுமாறிய இந்திய அணி :

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்திருந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தனியாளாக போராடிய ஜெய்ஸ்வால், அபாரமாக விளையாடி 56 ரன்களை விளாசினார். இருந்தபோதும், இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அசத்திய அஸ்வின் - ஜடேஜா கூட்டணி :

அதன்பின் இணைந்த அஸ்வின் - ஜடேஜா, 7-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய அஸ்வின், ஆட்ட நேர முடிவில் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் அடித்த 2-வது சதம் இதுவாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினின் 6-வது சதம் இதுவாகும். இதனால் அஸ்வினுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் அஸ்வின்

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதே ஸ்பெஷல் :

இதன்பின் வர்ணனையாளர் ரவி சாஸ்திரியுடன் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், "சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதே ஸ்பெஷல்தான். கடந்த முறை இதே மைதானத்தில் சதமடித்தபோது நீங்கள்தான் பயிற்சியாளராக இருந்தீர்கள். அதற்கு நன்றி கூற வேண்டும். அதிரடியாக ரன்கள் குவிக்க முடிந்ததற்கு டிஎன்பிஎல் தொடரில் இருந்து நேரடியாக இங்கு விளையாடியதே காரணம். அந்த தொடரில் எனது பேட்டிங்கை முன்னேற்ற பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியில் எனது பேட்டை நன்றாக வீசி ரன்களை சேர்த்து வந்திருக்கிறேன். அதனால் இம்முறை புதிய ஷாட்களை கற்றதால், விரைவாக ரன்கள் குவிக்க முடிந்தது. சேப்பாக்கம் பிட்சை பொறுத்தவரை கொஞ்சம் கடினமானது. பந்திற்கு பின்னால் நாம் சென்றால், ரன்கள் சேர்க்க முடியாது. ரிஷப் பண்ட் போல் அதிரடியாக விளையாடினாலே, ரன்கள் சேர்க்க முடியும். பழைய சேப்பாக்கம் மைதானத்தை போல் மீண்டும் இந்த பிட்சில் பவுன்ஸ் இருந்தது. ரெட் சாயில் பிட்சில் நம்மால் கூடுதலாக சில ஷாட்களை விளையாட முடியும்" என்று தெரிவித்தார்.


வங்கதேச அணிக்கு எதிராக 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா மற்றும் அஸ்வின்

தைரியம் தந்த ஜடேஜா :

"இந்த இன்னிங்ஸை நான் விளையாடுவதற்கு ஜடேஜா மிகவும் உதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் எனக்கு அதிகளவில் வியர்வை வெளி வந்ததோடு, சோர்வடைந்ததை ஜடேஜா கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி கொடுத்தது அவர்தான். கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜா இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் 2 ரன்களை 3 ரன்களாக மாற்ற வேண்டாம் என்று கூறினார். அதுவும் எனக்கு உதவியாக இருந்தது" என்றும் அஸ்வின் கூறினார்.


இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகத்தரத்திற்கு உயர்த்திய ஜடேஜா மற்றும் அஸ்வின்

ஜடேஜாவைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது - அஸ்வின்

"ஜடேஜா களத்தில் வேகமாக செயல்படுகிறார். என்னால் அதுபோல செயல்பட முடியவில்லை. ஆனால், அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. ஜடேஜா மிகவும் எளிமையாக சிந்திப்பவர். ஆனால், நான் அதிகம் சிந்திப்பேன், அதிக கேள்விகளை கேட்பேன். இது தான் எங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம்" என்றார் அஸ்வின். மேலும், "சில காரணங்களால், நீண்ட காலமாக, என்னால் இதை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் சமீபத்தில் அதற்கான வழியைக் கண்டுபிடித்தேன். மற்றவரைவிட யார் சிறந்தவர் என்பது குறித்தும் எங்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை உள்ளது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் எளிமையானவர். மிகவும் திறமையானவர். அதிகமாக சிந்திக்கவோ அல்லது ஆர்வமாகவோ இருக்கமாட்டார். ஆனால், நான் அதிகமாக சிந்திப்பேன். கேள்விகள் கேட்பேன்" என்றார் அஸ்வின்.

உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர்கள் :

அஸ்வின் டெஸ்ட் அணியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் நம்பர் 1 ஆல் - ரவுண்டராக இருக்கிறார். அஸ்வினை விட பேட்டிங்கில் ஜடேஜா ஒரளவு முன்னிலையில் இருக்கிறார். உலகின் சிறந்த ஃபீல்டர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார் ஜடேஜா. அதுமட்டுமில்லாமல் அஸ்வின் ஜடேஜா இருவரும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 800 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் இருவரும் இருப்பர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Updated On 1 Oct 2024 12:24 AM IST
ராணி

ராணி

Next Story