இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த வருடம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் "தயவு செய்து ஹைதராபாத் அணியில் நல்ல வீரர்களை தேர்வு செய்யுங்கள், காவ்யா மாறன் சோகமாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது" என்று விளையாட்டாக கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுக்கு ஏற்றார்போல் தற்போது ஹைதராபாத் அணி படுபயங்கரமாக ஆடி வருகிறது. சராசரியாக 180 ரன்களுக்கு மேல் குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளில் 250 ரன்கள் தொடுவது என்பது ஏதாவது ஒரு சீசனில் நடக்கும். ஆனால் இந்த சீசனில் மட்டும் ஹைதராபாத் அணி மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளது. அதன்பிறகு டெல்லி அணிக்கு எதிராக பவர்பிளேயில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்துள்ளது. பவர்பிளேயில் ஓர் அணி அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்குமுன் 2014ஆம் ஆண்டு சென்னை அணி அடித்த 100 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. தற்போது பேட்டிங்கில் அசுர பலத்துடன் இருக்கும் ஹைதராபாத் அணி கடந்த 4, 5 சீசன்களாக படுமோசமாக சொதப்பி வந்தது. அணிக்குள்ளயே பல அரசியல்கள் நடந்தன. முக்கியமாக வீரர்கள் அணியை விட்டு வெளியேறினார்கள். இதுபோல் பல தடைகளை தாண்டித்தான் ஹைதராபாத் அணி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இக்கட்டுரையில் ஹைதராபாத் அணியின் வீழ்ச்சியையும், அதன் வெற்றி பாதையையும் பற்றி விரிவாக காணலாம்.


வார்னர் தலைமையின்கீழ் கோப்பையை வென்றபொழுது

வார்னரின் தலைமையில் எழுச்சி கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

சன்ரைசர்ஸ் அணியின் ஆரம்பத்தில் பல கேப்டன்கள் இருந்தனர். ஷிகர் தவான், சங்ககாரா, டரென் சமி என்று பல பேர் போராடியும் ஹைதராபாத் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டுவர முடியவில்லை. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை எடுத்து கேப்டனாக அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் அணியில் பல இளம் வீரர்களையும், அஸோசியேட் அணி வீரர்களையும் ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 2016 ஐபிஎல்லின் ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை ஹைதராபாத் அணி கோப்பையை வென்று சாதனை படைக்குமென்று. ஏனென்றால் அந்த அணியின் துருப்பு சீட்டாக இருந்தவர்கள் அஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ரஷீத் கானும், முகமது நபியும்தான். அதுமட்டுமில்லாமல் பங்களாதேஷின் முஸ்தபிஸுர் ரஹ்மானை வைத்து இறுதி ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை தடுப்பார்கள். இப்படி ஒவ்வொரு அணியையும் தனது பந்துவீச்சு படையை வைத்து துவம்சம் செய்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சொதப்பிய தருணங்கள்

சறுக்கலை சந்தித்த ஹைதராபாத் அணி :

இவ்வாறாக 2017ஆம் ஆண்டுவரை சிறப்பாக செயல்பட்டுவந்த ஹைதராபாத் அணி, திடீரென சறுக்கலை சந்தித்தது. அதற்கு காரணம் கேப்டன் டேவிட் வார்னரின் தடைதான். சாண்ட் பேப்பர் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக வார்னருக்கும், ஸ்டீவ் ஸ்மித்திற்கும் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது ஐசிசி. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியை வில்லியம்சன் வழிநடத்தினார். அந்த சீசனில் நன்றாக விளையாடிய ஹைதராபாத் அணி, மீண்டும் தடைகாலம் முடிந்து வார்னர் திரும்பி வந்ததும் பயங்கரமாக சொதப்ப ஆரம்பித்தது. அணியிலிருந்து முக்கியமான வீரர்கள் வெளியேற ஆரம்பித்தனர். அதிலும் 2021 சீசனின் பாதியில் கேப்டன் வார்னரை பெஞ்சில் உட்காரவைத்தது. மேலும் அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ரஷீத்கான் உள்ளிட்டோரை வெளியேற்றி அனைவரையும் ஆதிர்ச்சி அடைய செய்தது. அதன்பிறகுதான் ரசிகர்கள் ஹைதராபாத் அணி நிர்வாகம் மீது கோபம் கொள்ள ஆரம்பித்தனர். அணிக்குள்ளே நடந்த அரசியலால் கடைசி இரண்டு சீசன்களில் கடைசி இடத்தை பிடித்து ஹைதராபாத் அணி ரசிகர்ளை ஏமாற்றியது.


புதிய அணி நிர்வாகத்துடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

முழுவதுமாக அணி நிர்வாகம் மாற்றம்

அணியின் மோசமான செயல்பாடு காரணமாக மொத்த பயிற்சியாளர் குழுவும் மாற்றப்பட்டது. முதலாவதாக தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரியை நியமித்தது. அதன்பிறகு பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும், தமிழக வீரருமான ஹேமங் பதானியை நியமித்தது. அதுமட்டுமில்லாமல் உலகின் தலைசிறந்த வேகபந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினை வேகபந்துவீச்சு பயிற்சியாளராகவும், உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமித்து தனது மொத்த வியூகத்தையும் மாற்றி அமைத்தது. இதன்பிறகுதான் ஹைதராபாத் அணியின் எழுச்சி ஆரம்பித்தது.


தற்போதைய வலுவான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

அதிரடி காட்டும் ஹைதராபாத் :

இம்முறை ஹைதராபாத் அணி புது வியூகத்துடன் களமிறங்கியது. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்சை 20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அதுமட்டுமில்லாமல் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த டிராவிஸ் ஹெட்டையும் ஏலத்தில் எடுத்து புது அணியாக இந்த சீசனில் களமிறங்கியது. முதல் போட்டியிலிருந்தே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே வருகிறது. ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு ஓரளவு எடுபடாமல் போனாலும், பேட்டிங்கில் அசுர பலத்தோடு நிற்கிறது. பேட்டிங் செய்யும் அனைவரும் 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு கீழ் ஆடுவதில்லை. தற்போது புள்ளிப்பட்டியலில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 6 May 2024 11:44 PM IST
ராணி

ராணி

Next Story