இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை தயாளன் ஹேமலதா, முதலில் இரயில்வே துறைக்காக விளையாடி பின்னர் தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணிக்காகவும் விளையாடினார். தற்போது குஜராத் ஜெயின்ட்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் தயாளன் ஹேமலதாவுடன் ஒரு நேர்காணல்…

கிரிக்கெட்டை கேரியராகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறியதும் உங்கள் குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருந்தது?

நான் கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய 18 வயதில்தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். முதலில் கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி வீட்டில் கூறியபோது, அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரையில்தான் விளையாடுவேன் என நினைத்திருந்தார்கள். ஓராண்டு கழித்துதான் நான் ‘கிரிக்கெட்’டை கேரியராகத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறினேன். அதற்கு குடும்பத்தினர் யாரும் பெரிதாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. `இப்போது விளையாடு பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டனர்.


டென்னிஸ் பந்திலிருந்து கார்க் பந்துக்கு பயணப்பட்டது எப்படி?

டென்னிஸ் பந்தில் விளையாடும்போதுதான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பந்தை வலிமையோடு அடிப்பது, பந்தை எதிர்கொள்ளும் லாவகம் என எல்லாவற்றையும் டென்னில் பந்தில் பயிற்சி செய்யும்போதே தெரிந்துகொண்டேன். டென்னிஸ் பந்திலிருந்து கார்க் பந்துக்கு மாறும்போது வலுவான பந்து மற்றும் பிற தொழில்நுட்ப விவரங்களை மட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதனால் அது எனக்குப் பெரிய சிரமமாக இருக்கவில்லை. ஆனால் ஆரம்பத்தில் எனக்கு தொழில்நுட்ப ரீதியாக மட்டும்தான் சிறிது சிரமம் இருந்தது.

குஜராத் அணியில் உங்களை ஏலத்தில் எடுத்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் உண்மையில் பயத்தோடுதான் இருந்தேன். முதலில் என்னை எடுக்கவில்லை. ஏலத்தில் எடுப்பார்களோ மாட்டார்களோ என்றுதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனது குடும்பத்தினரும் ஏலம் எடுக்கும்போது வந்திருந்தனர். அனைவரும் ஆவலுடன் எனது பெயரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஏலத்தில் எடுக்கப்பட்டதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோருமே என்னைவிட மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். நான் அதற்குத் தகுதியானவள்தான் என்று எல்லோருமே பாராட்டினார்கள்.


நீங்கள் முதன்முதலில் விளையாடியபோது அனைவருமே ஆர்வத்துடன் உங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

மைதானத்திற்குள் விளையாடும்போது சுற்றி நடப்பது எதையும் நான் கவனிப்பதில்லை. எனது கவனம் முழுவதும் விளையாட்டு மீதுதான் இருந்தது. பந்தை எப்படி எதிர்கொள்வது, எந்த மாதிரி விளையாடுவது என சிந்தனை முழுவதும் விளையாட்டில்தான் இருந்தது. முடிந்தளவு எனது பங்களிப்பை அளித்து அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காக இருந்தது. அதற்குப் பிறகு நான் விளையாடியதை மீண்டும் பார்த்தபோதுதான், ரசிகர்களின் கைத்தட்டல், ஆரவாரம் முதலியவற்றை கவனித்தேன். அது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது.

மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன் பிரீத் கெளர் ஆகியோரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன?

இருவரும் வெவ்வேறு விதமாக இருப்பார்கள். மிதாலி ராஜ் அமைதியாக இருப்பார். ஹர்மன் பிரீத் கெளர் துடிப்பாக இருப்பார். அணி என்று வரும்போது இருவரின் குணமும் பொருந்தி வந்தது. அவரவர் இலக்கில் அவரவர் சரியாக இருந்தனர்.


அந்த இருவரில் உங்களுக்குப் பிடித்தமான கேப்டன் யார்?

நான் அவர்கள் இருவரின் தலைமையிலும் விளையாடியிருக்கிறேன். இருவருமே பிடித்தவர்கள்தான். அவரவர் பாணியில் அவரவர் சிறப்பாக விளையாடுவார்கள். நான் அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

இந்திய பந்து வீச்சாளர், அயல்நாட்டு பந்து வீச்சாளர் யாரை எதிர்கொள்வது கடினம்?

அப்படியெல்லாம் கூற முடியாது. இடத்தின் சூழ்நிலை காரணமாக சிக்கல் ஏற்படலாம். பந்து வீச்சினை தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்வது ஒரே மாதிரியானதுதான். ஒவ்வொரு இடத்துக்குரிய சூழல் மாறுபாடுகள் வேண்டுமானால் சிறிது சிரமமாக இருக்கக்கூடும்.

பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்… எது உங்களுக்கு வசதியானது?

பீல்டிங் எனக்கு நிறைய பிடிக்கும். ஆனால் பேட்டிங், பெளலிங் இரண்டையும் நான் பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டேன். நான் இன்று தொழில்நுட்ப ரீதியில் ஆல் ரவுண்டராக இருப்பதற்கு எனது பயிற்சியாளர் பீட்டர் பெர்னாண்டஸ் அளித்த பயிற்சிதான் காரணம்.


கிரிக்கெட் துறைக்கு வராதிருந்தால் நீங்கள் வேறு எந்தத் துறைக்கு சென்றிருப்பீர்கள்?

நிச்சயமாகத் தெரியாது. ஒருவேளை நன்கு படித்து ‘ஐடி’ துறைக்குக் கூட சென்றிருக்கலாம். எனது அப்பா கபடி விளையாட்டு வீரர். அதனால் நான் கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுக்கும்போது அவர் அதை புரிந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்தினார். நானும் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறி வந்ததால் இந்தத் துறையில் நீடித்திருக்கிறேன்.

Updated On 3 Aug 2023 7:34 AM GMT
ராணி

ராணி

Next Story