ஓர் ஆண்டில் எத்தனை விரத நாட்கள் வந்தாலும் அவை அனைத்தையும் விட மிக முக்கிய நாளாக அமாவாசை கருதப்படுகிறது. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை. அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதேநேரம் மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஆண்டின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த 3 அமாவாசைகள் முக்கியம் என்று சொல்லப்பட்டாலும், அதிலும் மிக முக்கியமானதாக தை அமாவாசை பார்க்கப்படுகிறது. அது ஏன்? அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? போன்றவை பற்றியெல்லாம் விரிவாக பார்ப்போம்.
தை அமாவாசைக்கு ஏன் அவ்வளவு சிறப்பு?
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர் கூறுகின்றனர். சூரியனும் சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இது புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன், பக்தன் அபிராமி பட்டருக்காக அமாவாசை நாளில் அம்பிகை, முழு நிலவை காட்டியதும் தை அமாவாசை நாளில்தானாம். கேட்டதை எல்லாம் கொடுப்பதுடன் எப்படிப்பட்ட துன்பத்தையும் போக்கும் அபிராமி அந்தாதி பாடல் பாடப்பட்டதும் இதே தை அமாவாசை நாளில்தானாம்.
அமாவாசை மற்றும் தர்ப்பண காரியங்கள் செய்யும் நிகழ்வு
மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புகிறோம். பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள், ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து, புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச காலத்தில் நம்முடனேயே இருந்து, தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். எனவே அந்நாளில், தீர்த்த தலங்களுக்குச் சென்று எள் வைத்து, தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்.
‘பித்ரு’க்கள் யார்?
தாய், தந்தை, தாத்தா, பாட்டி உள்ளிட்டோரே பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைவதாக நம்பப்படுகிறது. அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். ஒருவன் தனது தாய், தந்தைக்கு பித்ரு கடன் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
இந்த ஆண்டு தை அமாவாசையின் நாள், நேரம்
2024 பிப்ரவரி 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருகிறது. அன்று காலை 7.53 மணி தொடங்கி, பிப்ரவரி 10ம் தேதி காலை 4.34 மணிவரை அமாவாசை திதி உள்ளது. இதனால் தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பவர்கள் 9ம் தேதி காலை 8 மணிக்கு பின்னர் கொடுக்கலாம். மேலும் பிப்ரவரி 9ம் தேதி, வெள்ளிக்கிழமை என்பதால் அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை ராகு காலம். எனவே ராகு கால நேரத்தை தவிர்த்து விட்டு, உச்சி பொழுதிற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து, படையல் போடுவது சிறப்பாகும். அத்துடன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரையிலான நேரம், திதி கொடுக்க நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித நதியில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு
தை அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும்?
தை அமாவாசை மாலை, சிவன் கோயிலுக்கு சென்று முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி வழிபடுவது நன்மையை பயக்கும். தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை இழந்த ஆண்கள் மட்டுமே உபவாசமாக அமாவாசை விரதம் இருந்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பெண்கள் படையல் போட்டு, அன்னதானம் வழங்கி மட்டுமே முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். கணவனை இழந்த பெண்கள் அமாவாசை அன்று சாப்பிடாமல் விரதம் இருந்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். மேலும், தை அமாவாசை தினத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவது பல ஜென்ம பாவங்களை போக்கும். வீட்டில் தர்ப்பணம் கொடுப்பதைவிட நீர் நிலைகளுக்கு அருகில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அப்படி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து, சூரிய பகவானை வழிபடலாம். மேலும் முன்னோர்களை நினைத்து படையலிட்டு, பின்னர் நாம் உணவருந்துவதே ஐதீகம்.
பித்ருக்கள் நம்மை வந்து எப்படி பார்ப்பார்கள்?
பித்ருக்கள், அமாவாசை தினத்தன்று காகம், பசு, எறும்பு, ஏழை மக்கள், விருந்தினர்கள் போன்ற வடிவில் நம் வீட்டிற்கு வருவார்கள் என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. காகங்கள் பித்ருலோகத்தின் வாசலிலேயே அமர்ந்திருக்குமாம். அவற்றின் வடிவங்களில் பித்ருக்கள் வந்து நாம் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வார்களாம். சிலரது வீட்டிற்கு கூப்பிடாமலேயே காகங்கள் வரும். காகங்களின் வடிவில் நம்முடைய வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு நாம் உணவளித்தால் அவர்கள் திருப்தி அடைந்து நம்முடைய குடும்பம் வளமாக இருக்க வாழ்த்துவார்களாம். அதேபோன்று வீட்டு வாசலுக்கு வரும் பசுக்களுக்கு உணவளிப்பதும், வீட்டில் திரியும் எறும்புகளுக்கு அரிசி மாவில் கோலமிட்டு உணவளிப்பதும் நல்லது. அத்துடன், விருந்தினர் அல்லது ஏழைகளின் வடிவில் பித்ருக்கள் நம் வீட்டிற்கு வரலாம். நம்மிடம் ஏதாவது உதவி கேட்கலாம். அப்படி வருபவர்களை அவமதிக்காமல், மனம் நோகும் படி நடக்காமல், வெறும் கையுடன் திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டும்.
பித்ருக்களுக்கான படையல் மற்றும் காகங்களின் வடிவில் முன்னோர்கள் வந்து உணவு உண்ணுவதாக நம்பப்படும் காட்சி
பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை எப்படி ஏற்பார்கள்?
மனிதர்கள் மரணத்திற்கு பிறகு அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பித்ருலோகம், கந்தர்வ லோகம், பசுலோகம் என ஏதாவது ஒரு லோகத்தில் அதற்கே உரிய வடிவில் இருப்பார்களாம். அவர்களுக்கு அமாவாசை தினத்தன்று நாம் அளிக்கும் உணவு, பிண்ட தானம், சிராத்தம் திருப்தி அடைய செய்யும். நம் முன்னோர்கள் தேவர்கள் வடிவில் இருந்தால் நாம் அளிக்கும் உணவை தேன் வடிவிலும், கந்தர்வ லோகத்தில் இருந்தால் அப்படியே உணவின் வடிவிலும், பசுலோகத்தில் இருந்தால் புற்களின் வடிவிலும், சர்ப்ப லோகத்தில் இருந்தால் காற்றின் வடிவிலும் ஏற்று திருப்தி அடைவார்களாம்.
தை அமாவாசை தினத்தில் செய்யக்கூடாதவை என்ன?
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையிலிருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.