இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒரு சிறப்பு இருந்தாலும் ஆறாவது மாதமான புரட்டாசி மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று சொல்வார்கள். இந்த மாதத்தில் எங்கு திரும்பினாலும் பெருமாள் கோவில்களில் கொண்டாட்டங்களும், சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் அப்படி என்ன சிறப்பு என்று பார்த்தோமானால், சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய காலகட்டம் இது. சூரிய பகவானுக்கு விவசாயிகளை வாழவைக்கூடிய சூரியன் என்று பொருள்படுகிற விவஸ்வான் ஆதித்யன் என்று பெயர். விவசாயிகள் செழித்தால் நாடே செழிக்கும் என்ற கருத்து இருக்கிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருமாலுக்கு பூஜை செய்வதோடு, அன்னதானம் செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருப்பர். மேலும், சனியால் பாதிப்பு இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாளை பூஜித்து வழிபட்டால் அதிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த மாதத்தில் விரதம் இருப்பதன்மூலம் முன்னோர்களின் சாபங்களிலிருந்தும் விடுபட முடியும் என்பது ஐதீகமாக இருக்கிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுவது ஏன்? பெருமாளின் வடிவத்திற்கான விளக்கம் என்ன? புரட்டாசியில் போகவேண்டிய முக்கிய கோவில்கள் என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.

பெருமாளின் நெற்றியில் நாமம், கையில் சங்கு - சக்கரம் இருக்கும். அத்துடன் பாம்பு படுக்கையின்மேல் இருப்பார். இதற்கு விளக்கம் என்ன?

‘நாமம்’ என்பதற்கு பெயர் என்று பொருள். நாமத்தை தலையிலே ஒரு குறியீடு போல போட்டிருக்கிறார். அதில் இருபுறமும் இருக்கும் வெள்ளைக்கோடுகளை எடுத்துக்கொள்வோம். உணர்வு நிலையிலேயே சூழ்நிலையை கையாள்வதை இந்த குறியீடு ஒருபுறம் உணர்த்தினாலும், மற்றொருபுறம், அறிவு நிலையிலேயே ஒரு சூழ்நிலையை கையாள்வதை குறிக்கிறது. அப்படித்தான் நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு சூழலையும் அறிவு நிலையிலும், உணர்வு நிலையிலும் கையாண்டுகொண்டிருக்கிறோம். நடுவில் இருக்கும் சிவப்பு கோடானது பொருளாதார மேன்மையை அல்லது ஆன்மிக நன்மையை உணர்த்துவதாக பார்க்கப்படுகிறது. கைவிரல் ரேகையை எடுத்துக்கொண்டோமானால் ஒன்று சங்கு போன்றோ அல்லது சக்கரம் போன்றோதான் இருக்கும். அது வட்ட வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ இருக்காது. சங்கு என்றால் ஓசையை குறிக்கக்கூடியது. இதற்கு கடல் என்றும் அர்த்தம் உண்டு. கடலிலிருந்துதான் அனைத்து செல்வங்களுமே தோன்றியதாக சொல்கிறார்கள். நிசப்தமாக இருக்கும் ஒரு இடத்தில் ஓசை வந்துவிட்டால் அங்கிருக்கும் சூழல் மாறிவிடும். இருப்பு நிலைக்கும் இல்லாநிலைக்கும் நடுவிலே ஒரு ஓசை வந்தால் அதை சங்கீதம் என்கிறோம். அதேபோல, ஒரு இடத்தில் நிசப்தம் நிலவும்போது அங்கு மீண்டும் ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காக உருவாக்ககூடிய நிலைகளை உணர்த்துவதுதான் சங்கு.


பாம்பு படுக்கையின்மேல் வீற்றிருக்கும் பெருமாளின் கையில் சங்கு, சக்கரம்

நாம் காணக்கூடிய பிரபஞ்சமானது 96 பில்லியன் ஒளிவருடங்கள் என்று சொல்கிறார்கள். இதை வைத்துத்தான் 96 தத்துவங்கள் என்று நாம் சொல்கிறோம். 96 பில்லியனில் 4% தான் மனிதன் ஓரளவு அறிந்திருக்கிறான். அதைத்தாண்டி அறிய இயலவில்லை. அவற்றை டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி என்றெல்லாம் இப்போது சொல்கிறார்கள். இது பெருமாளின் கையிலிருக்கும் சக்கரத்தை போன்ற தோற்றமுடையதாக ஒரு கருத்து நிலவுகிறது. நமது அண்டத்தை பால்வழி அண்டம் என்கின்றனர். பெருமாளும் பார்க்கடலில் படுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதேபோல் பெருமாளுக்கு 108 திருத்தலங்கள் இருக்கின்றன. அதுவும், பூமிக்கும் - சூரியனுக்கும், பூமிக்கும் - சந்திரனுக்கும் இடையிலான தூரங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. பெருமாளின் கையிலிருக்கும் சக்கரமானது காலத்தை குறிக்கிறது. காலம் எவ்வாறு செயல்படுகிறது? இரவு நாம் தூங்குகிறோம். அந்த படுக்கை பாம்புதான். நாம் அனைவரும் தூங்கும்போது நம்மிடம் இருப்பதை சேஷம் என்கிறோம். சேஷம் என்றால் பூஜ்ஜியம் - ஒன்றுமில்லை என்று அர்த்தம். அதாவது தூங்கும்போது நாம் நமது அடையாளங்களை விட்டு விலகிவிடுகிறோம். காலை எழுந்திருக்கும்போது ஆதி. அதாவது நமது பெயர் உட்பட நம்முடைய அடையாளங்களை மீண்டும் எடுத்துக்கொள்கிறோம். பல்வேறு வேலைகளை செய்யும்போது அதற்கான தோரணைகள் வரும். அதை அனந்தம் - எல்லையற்றது என்பார்கள். இது ‘8’ என அடையாளப்படுத்தப்படுகிறது. 1-0-8, ‘ஆதி - சேஷம் - அனந்தம்’ என மூன்று நிலையிலே செயல்படுகிறோம்.


மத்ஸ்ய அவதாரம் மற்றும் ராகு - கேது

அத்துடன் கிரகங்கள் மேலே ஏறுவதும், கீழே இறங்குவதும் ராகு, கேதுவை குறிக்கின்றன. ராகு, கேதுவானது பாம்பை குறிக்கிறது. அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலைக்கு நடுவே மனிதன் சென்றுகொண்டிருக்கிறான். கருடன் என்றால் பறவை. பறவைக்கு எப்படி 2 இறக்கைகள் இருக்கிறதோ அதேபோல் காலத்திற்கும் 2 இறக்கைகள் உண்டு. பறவையை பட்சி என்பதைப்போல், காலத்தின் வளர்பிறை, தேய்பிறையை பக்‌ஷம் என்பர். வாழ்க்கையின் உயர்வு, தாழ்வை சமமாக கருதத் தொடங்கும்போது வாழ்க்கையில் இலக்கு உருவாகிவிடும். அப்போது இலக்குமி(லட்சுமி) வந்துவிடுவார்.

பெருமாளை சேவிக்க புரட்டாசியை புனித மாதமாக கூறுவது ஏன்?

மகாலட்சுமி ஒருமுறை பெருமாளிடம் இப்படியாக ஒரு கருத்தை சொல்கிறாள். ‘மாதங்களில் நீ மார்கழி என்றுதானே சொன்னாய்! அப்படியிருக்கும்போது புரட்டாசி மட்டும் உனக்கு ஏன் சிறப்பு பெருமாளே?’ என்று நாரதர் ஒருமுறை பெருமாளிடம் கேட்க, அவர் மகாலட்சுமியிடம் இதுகுறித்து கேட்கச் சொல்கிறார். அதற்கு மகாலட்சுமி, “இங்கே கேள் நாரதா! இந்த காலகட்டத்தில் இயற்கை தனது செழுமையை ஆங்காங்கே காட்டும். மனிதர்கள் தன் வாழ்க்கையில் எந்த காட்சியை காண்கிறார்களோ அதுவே நிகழத் தொடங்குகிறது. எனவேதான் சுக்கிரன் என்ற கிரகம் மட்டும் கடிகார எதிர்திசையில் சுற்றும். அதுபோல, மனிதனின் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்க்கையில் வண்ணங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் பெருமாளை மணிவண்ண கண்ணா போற்றி! என்கின்றனர். புரட்டாசி மாதத்தில் இயற்கையாகவே செழுமை இருப்பதால், நானும் பெருமாளும் இருக்கும்போது என் கையிலே கண்ணாடி வைத்திருப்பேன்.


புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அலங்காரம்

பெருமாள் தனது கையிலே தாமரை போன்ற சர்வ அலங்காரங்களுடன் இருப்பார். அந்த அலங்காரத்தை அவ்வாறே கண்ணாடியில் பார்க்கும்போது அவரிடம் சிறப்புகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எனவே புரட்டாசி மாதத்தில் ஒருவன் ‘தான் நன்றாக இருக்கிறேன்! செழுமையாக இருக்கிறேன்’ என்று நினைக்க தொடங்கினாலே வாழ்க்கையில் செழுமை வந்துவிடும். இப்படி நேர்மறை எண்ணங்கள் பெருக உகந்த மாதம் இது. பெருமாளுக்கு அலங்கார பிரியன் என்று பெயர். நீங்களும் அலங்காரத்துடன் ஆலயத்துக்கு போகும்போது பெருமாள் சகல ரத்தினங்கள் பொருந்திய ஆடை, ஆபரணங்களை அணிந்துகொண்டு அழகாக இருப்பார். அந்த அழகை பார்த்துவிட்டு, வெளியே வந்து, பச்சை பசேலென்ற வயல்வெளியையும் பார்க்கும்போது, மனம் லயித்துவிடும், வாழ்க்கையில் செழுமை வரத் தொடங்கி வறுமை ஒழிந்துவிடும்” என்கிறாள்.

பெருமாளை எப்படி வழிபடுவது?

இந்த மாதத்தில் ஒருமுறை கிருஷ்ணரை அழைத்துச்செல்ல நாரதர் முயன்றார். கிருஷ்ணரை மீட்க சத்தியபாமா தங்கத்தால் எடை போட்டார். ஆனால் முடியவில்லை. ருக்மணி தாயார் சிறிது துளசியை வைத்து எடைபோட்டபோது பெருமாள் இறங்கிவிட்டார் என்பார்கள். இப்படி துளசிக்கு பெரும் மகத்துவம் உண்டு. அதனால்தான் வீட்டில் வைத்திருக்கும் துளசி வாடிவிட்டால்கூட அதை அப்படியே தூக்கிப்போடாமல் அதிலிருந்து சிறிது விதைகளை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த துளசியை காவிரியில் விட்டு வணங்கிவிட வேண்டும் என்றெல்லாம் விதி உண்டு. துளசிக்கு அவ்வளவு சிறப்பு இருப்பதால், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சிறிது துளசியையும், மகாலட்சுமிக்கு கொஞ்சம் பூவையும் வாங்கிக்கொண்டு சென்று வணங்கி வேண்டி வரவேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எளிய மந்திரத்தைக் கூறி வணங்கவேண்டும். இப்படி பெருமாளை வணங்க தொடங்கிவிட்டால், மகாலட்சுமி கடாட்சம் ஏற்பட தொடங்கிவிடும். அதேபோல் விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை யூடியூபிலேயே கிடைக்கின்றன. அவற்றை தினமும் காலை, மாலை 5 அல்லது 10 நிமிடங்கள் வீட்டில் ஓடவிட்டாலே போதும். வாழ்க்கையில் நல்லவற்றை கேட்கத் தொடங்கினால் லாபமும், ஐஸ்வர்யமும் தேடிவரும்.


சனிபகவானுடன் தொடர்புடைய புரட்டாசி சனி - தளிகை போட்டு வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் 2 கோவில்களுக்கு செல்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. ஒன்று, திருவள்ளூரிலிருக்கும் வீர ராகவ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புரட்டாசி மாதத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி தயிர்பாளையத்தில் மத்ஸ்ய அவதாரத்துக்கான சிறிய கோவிலுக்கு சென்று வழிபட்டாலே உடனடியாக தீர்வு கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது ஏன்? வீடுகளில் தளிகை போடுவதாக சொல்கிறார்களே! அது என்ன முறை?

சனிக்கிழமைக்கு ஒரு சிறப்பு உண்டு. சனீஸ்வரர் என்று சொன்னாலே எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவர் இவர். சனி என்பவரையும், குரு (பிரகஸ்பதி) என்பவரையும் ஜோவியன் ப்ளானட்ஸ் என்று கிரகங்களிலே சொல்வார்கள். ஜோவியன் ப்ளானட்ஸ் என்பதில் வாயுக்கள் அதிகம். உடலில் கர்மா எப்படி செயல்படுகிறதென்றால் வாயு மற்றும் வாயுபிடிப்பாக செயல்படுகிறது. சனிக்கிழமைகளில் உணவுக்கட்டுப்பாடுகளுடன் பெருமாளை வழிபடும்போது உடல்சார் ரோகங்களின் தன்மை குறையும். எப்போது உடற்சார் ஆரோக்கியம் மேம்படுகிறதோ புதன் என்று சொல்லக்கூடிய நரம்பு, சுக்கிரன் என்று சொல்லக்கூடிய மகாலட்சுமியின் ஹார்மோன்களும் செயல்படத் தொடங்கும். அப்போது ஆரோக்கியமும், ஆயுளும் மேம்படத் தொடங்கும். எனவே தினசரி முடியாவிட்டாலும் சனிக்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு, தளிகைபோட்டு, அந்த உணவுகளை பிரசாதமாக உண்ணும்போது பலன் கிட்டும்.

Updated On 7 Oct 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story