ஆடி என்றால் அம்மன், கார்த்திகை என்றால் ஐயப்பன், புரட்டாசி என்றால் பெருமாள் என்று 12 தமிழ் மாதங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு விசேஷமானதாக இருக்கிறது. அவ்வகையில் புரட்டாசியான இம்மாதத்தில் பலரும் அசைவம் சாப்பிடாமல் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு தழை போட்டு வணங்குவதை காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட பல சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்..
புரட்டாசியில் பெருமாள் ஏன் ஸ்பெஷல்?
புரட்டாசியில் தான் விஷ்ணு பகவான் இவ்வுலகில் மனித அவதாரமாக உருவெடுத்து பின்னர் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் தான் கலியுகத்தின் காக்கும் கடவுளாக இருக்கிறார். பத்மாவதி தாயாரை கரம்பிடிக்க ஸ்ரீனிவாச பெருமாள் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரமாகும். வாரத்தின் கடைசி நாட்களில் ஒன்றான சனிக்கிழமையை பலரும் ஒதுக்கி வந்த காரணத்தினால் சனிபகவான் பெருமாளிடம் 2 வரங்களை பெற்றார். ஹிரண்யன், ஹோலிகா துவாபர யுகத்தில் விஷ்ணு பகவான் கண்ணனாக பிறந்திருப்பதை அறிந்து அவரை கொலை செய்ய முயற்சித்த போது சனிபகவானின் பார்வை பட்டு ஹோலிகா எரிந்து சாம்பலாகி விடுவாள் . இதன் பொருட்டு சனி பகவான் கிருஷ்ணரிடம், சனிக்கிழமையை விஷ்ணுவை போற்றும் நாளாக அறிவிக்க வேண்டும் என்று வரம் கேட்டார். இதன் பொருட்டு சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக வழிபடப்படுகிறது.
இதனை இன்னொரு விதமாகவும் கூறுகின்றனர். அது என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் திருமலையில் அவதரித்த பிறகு ஒரு முறை நாரதர் சனிபகவானிடம் நீ பூலோகத்தில் யாரை வேண்டுமானாலும் துன்பப்படுத்து, ஆனால் திருமலைக்கு மட்டும் சென்று விடாதே என்று தூண்டி விடுவது போல கூறியுள்ளார். உடனே அதை கேட்டா சனிபகவானும் எப்படியாவது நாம் அங்கு சென்று விட வேண்டும் என்று எண்ணி திருமலை மீது கால் வைக்க, அப்போது அவர் விஷ்ணுவின் கோபத்திற்கு ஆளாகி அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் விஷ்ணுவின் சக்தியை நன்கு அறிந்திருந்த சனிபகவான் அவரிடம் மன்னிப்பு கேட்டார். சனிபகவானின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான் என்னையே நம்பி வாழும் எம் மக்களுக்கு இனி ஒரு போதும் துன்பம் வழங்க கூடாது என்று அறிவுறுத்தினார். பின்னர் சனி பகவான், விஷ்ணுவிடம் நான் பிறந்தது புரட்டாசி மாதம் சனிக்கிழமை. இந்த நாளை உங்களுக்கு உகந்த நாளாக மாற்றி உங்கள் பக்தர்கள் உங்களை சிறப்பாக வணங்கி வழிபட்டால் அவர்கள் வேண்டியதை வழங்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். விஷ்ணுவும் சனி பகவான் கேட்ட வரத்தை அருளி சனிக்கிழமை விஷ்ணுக்கு உகந்த நாளாக அமைத்துக்கொண்டார். அன்று முதலே புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சனி பகவான் பிறந்த இந்த மாதம் முழுவதும் எள்ளு தீபம் ஏற்றி விஷ்ணுவை மனதார வழிபட்டால் சனி தோஷம், அஷ்டம சனி, ஏழரை சனி எல்லாம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. வெங்கடாசலபதி அமைந்திருக்கும் திருமலையில் பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகுந்த பெருமாள் பக்தர். ஆனால் திருமலையில் இருக்கும் பெருமாளை வணங்கவும், பூ வாங்கவும் கூட பணம் இல்லாமல் வறுமையில் உள்ளவன். அதனால் அவன் செய்யும் பானையின் களிமண்களாலேயே ஒரு பெருமாள் சிலையை செய்தும், அதே களிமண்களிலேயே பூக்கள் செய்தும் பெருமாளுக்கு போட்டு வணங்கி வந்தான். அதே சமயம் திருமலையை ஆண்டு வந்த தொண்டைமானும் மிகுந்த பெருமாள் பக்தர். இந்த தொண்டைமான் அரசன் திருமாலுக்கு தங்க பூக்கள் போட்டு வணங்கி வந்த நிலையில், திடீரென்று தங்க பூக்களெல்லாம் மறைந்து களிமண் பூக்களாக மாறிவிட்டது. அதிர்ச்சியடைந்த தொண்டை மன்னனின் கனவில், பெருமாளே வந்து என் குயவன் பக்தனின் பூக்களையே நான் ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார். பீமனின் பக்தியை கௌரவிக்கும் விதமாக இன்றளவும் திருமலையில் மண் சட்டியில் தான் நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் வெறும் பெருமாளுக்கு மட்டும் உகந்ததல்ல சிவன், பார்வதி, துர்க்கை அம்மனுக்கும் உகந்ததாக இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகள், மகாளய அமாவாசை, நவராத்திரி மிக விசேஷமாக வழிபடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தின் தளிகை
சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் என்று 5 வகையான சாதங்களும் அவற்றுடன் கருப்பு அல்லது வெள்ளை சுண்டல், வெங்காயம் சேர்க்காமல் மிளகு சீரகம் சேர்த்த உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து பெருமாளை வணங்கலாம். இது தவிர பானகம், மாவிளக்கையும் நைவேத்தியமாக சேர்த்து கொள்ளலாம். இந்த புரட்டாசி மாதம் பெருமாளின் திரு உருவப் படத்துக்கு துளசி, சம்பங்கி, சாமந்தி, தாமரை போன்ற மலர்களால் அலங்கரித்து வழிபடுவது சிறந்தது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து பெருமாளுக்கு தளிகை போட்டு மேற்கூறிய நைவேத்தியங்களை படைத்து துளசி தீர்த்தம் வைத்து தீப தூப ஆராதனை காட்டி கோவிந்த நாமம் உளமார கூறி ஸ்ரீ வெங்கடாசலபதியை வழிபடலாம்.
புரட்டாசி மாதத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை
காதுகுத்து, வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றை செய்யலாம். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்கலாம். கல்வி அல்லது கலைகளில் சேரலாம். ஆனால் இந்த புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. இது காக்கும் கடவுள் விஷ்ணுவுடைய மாதமாக இருந்தாலும் இது மஹாளய பக்ஷ காலமாகும். இந்த மஹாளய பக்ஷ காலத்தில் 15 நாட்களுக்கு விண்ணுலகத்தில் இருக்கிற நம் முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து நாம் செய்யும் வழிபாடுகளை பெற்று 15 நாட்களுக்கு தங்குவர். அதனால் பித்ருக்களுக்கு செய்யும் வழிபாடுகளிலேயே இந்த மாதத்தின் 15 நாட்கள் ஓடிவிடும். மீதம் இருக்கும் 15 நாட்களில் நவராத்திரி ஆரம்பமாகிவிடும். நவராத்திரிக்கான வழிபாடுகளில் அதிக வேலை இருக்கும் போது திருமண ஏற்பாட்டிற்கான போதிய நேரம் இருக்காது என்பதால் தான் இம்மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இந்த முழு மாதமும் வழிபாட்டிற்கு என்று ஒதுக்கப்படுகிறது. இந்த மாதம் வாஸ்துக்குரிய சரியான மாதமாக இல்லாததால் திருமணம் தவிர இம்மாதத்தில் கிரகப்பிரவேசம், பூமி பூஜை, புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவது போன்ற நிகழ்ச்சிகளை செய்யக்கூடாது.
புரட்டாசியில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
அனைத்து ஐதீகங்கள் பின்னும் ஒரு அறிவியல் காரணமும், நம்பிக்கை காரணமும் இருப்பதுண்டு. அந்த வகையில் புரட்டாசியில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் உண்டு.
முதலாவது அறிவியல் பார்வையில் புரட்டாசி மாதத்தில் தான் வெயில் குறைந்து, காற்று குறைந்து, மழை பெய்யத் தொடங்கும். அப்படி மழை ஆரம்பிக்கும் போது அது வரை வெப்பமாக இருந்த பூமி, தண்ணீரை ஈர்த்து சூட்டை வெளியிடும். வெயிலின் தன்மையை காட்டிலும் சூட்டின் தன்மை பெறும் மோசமான விளைவை தரக்கூடியது. இந்த வேளையில் அதிக சூட்டை தரக்கூடிய அசைவம் சாப்பிட்டால் இன்னும் அதிகமாக சூடாகி பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இதனாலயே இம்மாதத்தில் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இதுவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான அறிவியல் காரணமாகும்.
அதுவே ஆன்மிகம் படி பார்க்கும் போது கன்னி ராசிக்கு அதிபதியாக இருப்பவர் புதன். இந்த புதனானவர் விஷ்ணுவின் சொரூபம் என்பதால் இதுவே அவருக்கு ஏற்ற கிரகமாக அமைந்திருக்கிறது. புதன், கன்னி ராசியை ஆட்சி செய்யும் மாதம் தான் புரட்டாசி. அதிபதி புதன் சைவ பிரியர் என்பதாலே அவர் ஆட்சி செய்யும் இம்மாதத்தில் அசைவம் செய்யாமல் பலரும் சைவ உணவு செய்கின்றனர்.
இப்படி பல விசேஷங்கள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் அணைத்து பெருமாள் கோவில்களிலும் பிரமாண்டமாக பூஜை செய்து பெருமாளை வணங்குவர். பெருமாள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பதி கோவில் தான். திருப்பதியை தவிர காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சென்னை பார்த்தசாரதி கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் என்று பல பிரபலமான பெரிய கோவில்கள் இருந்தாலும் அற்புதம் வாய்ந்த பல சிறிய பெருமாள் கோவில் பற்றி அவ்வளவாக நாம் தெரிந்து கொள்வதில்லை. அப்படி இந்த புரட்டாசி மாதத்தில் அறிந்து கொள்ள இருக்கும் ஒரு சிறிய பெருமாள் கோவில் தான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்.
புரசைவாக்கம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
இக்கோவில் 1890 இல் வேணுகோபால செட்டியாரால் சிறிய பஜனை மண்டபமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அவருடைய சந்ததி 1952 இல் 16 கால் மண்டபமாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆண்டாள், பெருந்தேவி தாயார், லக்ஷ்மி நரசிம்மர், ஐகிரிவர், ஆஞ்சநேயர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் பிரம்மோட்ஷவம் போல இந்த வரதராஜ பெருமாளுக்கும் பிரம்மோட்ஷவம் நடத்தப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி 6 வாரம் தொடர்ந்து மஞ்சள் மாலை சார்த்தினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், திருமண தடை இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் இக்கோவிலில் பங்குனி உத்திரம், பெருந்தேவி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம், ஆண்டாளுக்கு திருவாதைப்புறமும், போகி பண்டிகையும், லஷ்மி நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனமும், அலங்காரமும் செய்யப்பட்டு மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இன்னும் சிறப்பாக மாதாமாதம் பௌர்ணமி தினத்தன்று சத்யநாராயணா பூஜை நடத்தப்படுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவை செய்வதும் உண்டு. காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள் அதே சிறப்பை பெற்ற இந்த புரசைவாக்கம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தும் வழிபடலாம். இந்த புரட்டாசியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை மனதார வணங்கினால் பல ஆசி பெற்று செல்வ செழிப்புடன் வாழ வைப்பார் ஸ்ரீ பெருமான்.