இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்பும், பின்னணியும் இருக்கும். அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் என்ற இடத்திற்கே பெருமை சேர்த்துள்ளன அங்குள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலும் பச்சையம்மன் கோயிலும்.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது இந்த மாசிலாமணீஸ்வரர் கோயில். இந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 50,000 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இக்கோயிலின் வரலாற்று பின்னணி குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மாசிலாமணீஸ்வரர் கோயில் குறித்த ஒரு விரிவான தொகுப்பை பார்க்கலாம்.

கோயில் வரலாறு!

காஞ்சிபுரத்தில் தொண்டைமான் என்ற அரசன் ஆட்சி செய்தபோது அண்ணன் தம்பியான ஓனன், வானன் என்ற இரண்டு கொள்ளையர்கள் தீய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தொண்டை மண்டலமான புழல் மற்றும் தற்போதைய ஆவடி பகுதிகளில் இவர்கள் கொள்ளையடித்தே பிரபலமாகியுள்ளனர். இதனையறிந்த ஊர் மக்கள் மன்னனிடம் சென்று இதுகுறித்து முறையிட்டனர். உடனடியாக மன்னன் ஒரு படையுடன் அவர்களை பிடிக்கச் சென்றார். இந்த இரண்டு திருடர்களும் தங்களது குலதெய்வமான வைரவர் என்ற தெய்வத்தை வணங்கி, அதிக சக்தியைப் பெற்று மன்னனுடன் போர் தொடுத்தனர். இந்த போரில் தொண்டை மண்டல மன்னன் தொண்டைமான் பரிதாபமாக தோல்வி அடைந்தார்.


தோல்வியின் சோகத்தில் இருந்த மன்னன் காஞ்சிபுரத்திற்கு தனது யானையில் புறப்பட்டார். செல்லும் வழியில் யானையின் கால்களை முல்லைக்கொடிகள் சுற்றி பற்றிக் கொண்டதால் யானையால் அவ்விடத்திலிருந்து நகர முடியவில்லை. உடனே தொண்டை மன்னன் தேரிலிருந்து கீழே இறங்கி யானையின் காலில் சிக்கி இருந்த முல்லைக் கொடிகளை வெட்டி வீசினார். அப்போது அந்த முல்லைக் கொடிகளிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பயந்துபோன மன்னன் அம்முல்லைக் கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டார். பரவசமடைந்த மன்னன் அந்த சிவலிங்கத்தை கைகூப்பி வணங்கினார். சிவனையே தனது வாளால் வெட்டிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தொண்டைமானின் கண்முன் காட்சியளித்தார் சிவபெருமான். 'மன்னனே வாளால் வெட்டினாலும் யாம் மாசிலாமணி ஆக இருப்போம்' என்று கூறி மறைந்தார்.

திருமுல்லைவாயல் பெயர்க் காரணம்

இதனையடுத்து மன்னன் மீண்டும் படையெடுத்துச் சென்று ஓனன், வானனை வென்று, அதற்குச் சான்றாக அவர்களிடம் இருந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை பறித்து வந்தார். அந்தத் தூண்களைக் கொண்டு ஒரு கோயிலும் கட்டினார். அதுதான் இன்று திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணீஸ்வரர் கோயில். இதனாலேயே அந்தப் பகுதிக்கு திருமுல்லைவாயல் என்ற பெயரும் வந்தது.


திருத்தலத்தின் சிறப்பு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன. தேவாரம் பாடிய சுந்தரர், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகியோரால் பாடல் இயற்றப்பட்ட தலம் இது. மேலும் பெரிய புராணத்தில் இந்த கோயில் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக சிவன் கோயிலில் நந்தி பகவான் சிவனை நோக்கி இருப்பார். ஆனால் இக்கோயிலிலோ நந்தீஸ்வரர் கிழக்கு திசையை நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும்.

இதற்கான காரணம், மன்னன் போருக்கு செல்லும்பொழுது சிவபெருமானே மன்னனுக்கு துணையாக நந்தீஸ்வரரை அவருக்கு முன் அனுப்பி வைத்தார் என்பதுதான். அதோடு இக்கோயில் தோன்றுவதற்கு காரணமாக இருந்த முல்லைக்கொடியையும் அங்கு இன்றளவும் வளர்த்து வருகின்றனர். 276 தேவார பாடல் பெற்ற ஸ்தலம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது மாசிலாமணீஸ்வரர் கோயில்.


இக்கோயிலில் கொடியிடையம்மன் சிவனின் வலதுப்புறத்தில் அமைந்திருப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும். இங்குள்ள லிங்கத் திருமேனி ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பில்தான் காட்சிதரும். ஆனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திர நாளில் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு லிங்கத் திருமேனி தரிசனம் பக்தர்களுக்கு கிட்டும். இக்கோயிலுக்கென தனிக் குளமும் உண்டு. அக்குளத்தை அக்னி தீர்த்தமாகவும், கல்யாண தீர்த்தமாகவும் கருதுகின்றனர்.

அதேபோல் இக்கோயில் தூண்களில் ஒன்றில் பல்லி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் துணி அல்லது நாப்கினின் மீது பல்லி விழுந்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ திருமணம் தள்ளிப்போகும். அந்த பெண்கள் இந்த சிலையை தொட்டு வழிபட்டால் அந்த சாபம் நீங்கி திருமணம் கைகூடி வரும் என்று நம்புகின்றனர்.

மாதாமாதம் பௌர்ணமி தினத்தன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன், மேலூர் திருவுடையம்மன், திருமுல்லைவாயல் கொடியிடையம்மன் என்று மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் தரிசித்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிட்டும் என்று பல சித்தர்களும் கூறியுள்ளனர். இந்த மூன்று அம்மன்களின் சிலைகளும், அதன் கோபுரங்களும் ஒரே உயரத்தில் அமைந்திருப்பதும் தனிச் சிறப்பு.


சிவன் மற்றும் பார்வதி தேவி சன்னதிகள் தவிர இக்கோயிலில் பிரசன்ன விநாயகர், முருகன், நடராஜர், பிச்சாண்டவர், ஸ்ரீதேவி - பூதேவி சமேத மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள் உள்ளன. சமயக்குறவர்கள் நால்வர், மன்னர் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார் ஆகியோரின் சிலைகளையும் மாடவீதிகளில் காணலாம். தாழ்வாரங்களில் ஸ்ரீ குசலபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ சோழபுரீஸ்வரர் ஆகியோருக்கான தனிச் சன்னதிகள் உள்ளன. மேலும் இந்த லிங்கங்கள் ராமரின் மகன்களான லவ மற்றும் குசா ஆகியோரால் வழிபட்டதாக நம்பப்படுகிறது.

மாசிலாமணீஸ்வரரும், கொடியிடையம்மனும் வீற்றிருக்கின்ற இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும், வேலையில்லாதவர்களுக்கு வேலையும், வீடு கட்ட நினைப்போருக்கு சொந்தவீடும் அமைவது நிச்சயம். இதுபோன்ற பல சிறப்புகளை பெற்ற இந்த தலம் திருமுல்லைவாயல் என்ற இடத்திற்கே பெருமை சேர்க்கின்றது.

Updated On 1 Aug 2023 11:37 AM GMT
ராணி

ராணி

Next Story