இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைவரது வாழ்விலும் நல்ல தொடக்கம் அமைந்து மென்மேலும் உயர, அனைத்து வளமும், நலமும் பெற்றிட விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

இந்து மக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதற் கடவுளாம் விநாயக பெருமானின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 1-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தீப ஆராதனைகளும், தெருவெங்கும் ஒலிக்கும் மேளதாள ஓசைகளும், கண்களைக் கவரும் வண்ணமிகு விநாயகரின் உருவச் சிலைகளும்தான். பொதுவாகவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை என்று பார்த்தால் வீடுகள்தோறும் சிறிய அளவு முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, ஒவ்வொரு நாளும் நைவேத்யம் செய்து படைத்து, வழிபட்டு பிறகு ஆரவாரத்துடன் அந்த சிலையைக் கடலில் கரைப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அனைத்துமே வியாபாரமயமாகிவிட்ட இக்காலத்தில் இதுபோன்ற பண்டிகைகள் மட்டும் விதிவிலக்கல்ல.

வணிகமாக மாறிய விநாயகர் சதுர்த்தி:

ஆரம்பத்தில் கோலாகலத் திருவிழாவாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தற்போது வணிகம் சார்ந்த பாதையில் செல்கிறது என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் எளியமுறையில் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலையை செய்து மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் தற்போது வளர்ந்துகொண்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தினால் பக்திக்காக வாங்கி வழிபடும் விநாயகர் சிலைகளில் கூட நிறம், வடிவம், புதுமை போன்றவற்றையெல்லாம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இது சிலை விற்பனையாளர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. அதனுடன் வியாபார யுக்திகளும் சேர்ந்துவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் புதுமையை எதிர்பார்ப்பது மட்டும்தான் சவாலாக இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. சிலை செய்யும் அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் சிக்கல்களும், சவால்களும் ஏராளம்.


களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

சிலை வடிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

வருடந்தோறும் சென்னையை பொருத்தவரையில் கோயம்பேடு, விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், அமைந்தக்கரை, அண்ணாநகர், ஆலந்தூர், கிண்டி உள்பட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை விதவிதமாக கண்களை கவரும் வகைகளில் விற்பனை செய்வர். இதில் ஊர்வலத்திற்காக செய்யப்படும் விநாயகர் சிலையை வடிவமைக்க பத்து நாட்களுக்கும் மேலாகலாம். சாதாரண களிமண் சிலை என்று பார்த்தால் நாள் ஒன்றுக்கு ஐம்பது பீஸ்கள் வரை சிலைகள் வடிக்கப்படுகின்றன.

இதுகுறித்து 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சிலை வடிவமைப்பாளர் சத்திய நாராயணன் தெரிவிக்கும்போது, “இந்த சிலைகள் அனைத்துமே முழுவதுமாக கைகளினாலே செய்யப்படுகிறதே தவிர வேறு எந்த ஒரு மெஷின்களும் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் சராசரியாக ஒரு சிலை செய்யும் மெஷினின் விலை ரூ. 80,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரையில் இருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு சாத்தியமே இல்லை. வருமானம் என்று பார்த்தால் மற்ற தொழில்களைப்போல மாத வருமானம் எங்களுக்கு இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருமானம் என்பதால் எங்களுக்கென்று சேமிப்பு ஏதும் இல்லை.


விநாயகர் சிலை வடிவமைப்பு

உணவு, அன்றாடச் செலவு மற்றும் பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கே அதுவும் சரியாக இருக்கிறது. அடுத்த தலைமுறையினர் இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவார்களா என்று கேட்டால் அதுவும் நிச்சயம் இல்லை என்பதே உண்மை. எனவே இதுபோன்ற கலைகள் அழியாமல் இருக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் உதவி நிச்சயம் எங்களுக்கு வேண்டும். எங்கள் தொழிலுக்கு தேவையான மெஷின்களின் விலை அதிகமாக இருப்பதால், அரசு அதை மானிய விலையில் எங்களுக்கு வழங்கினால், தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்கிறார்.

சமூக ஆர்வலர் கூறும் வழிமுறைகள்:

சமூக ஆர்வலர் ஆர்.எல். ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். “முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்திக்கு இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் இல்லை. மக்கள் மிகவும் எளிய முறையில் வீடுகள்தோறும் சிறு சிறு மண் பிள்ளையார்களை செய்துவைத்து வழிபட்டு பின்னர் அதை கடலில் கரைத்தனர். ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. பக்தி என்ற பெயரில் ரசாயனங்களை கலந்து சிலையாக வடித்து கடலில் கரைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். அதி பயங்கர ரசாயனங்கள் கலந்த சிலைகள் கடலில் கரைக்கப்படுவதால், அது கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.


நீர்நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்

அதுமட்டுமின்றி, கடலில் இறங்கி வேலை செய்யும் மீனவர்களுக்கும் கடலில் கலக்கும் ரசாயனப் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. நீர்நிலைகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை நம்பி ஏராளமான நடுத்தர மற்றும் அடித்தட்டுக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்த போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நமது அரசாங்கம் கொண்டுசெல்ல வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் ஸ்ரீனிவாசன்.

Updated On 19 Sept 2023 12:19 AM IST
ராணி

ராணி

Next Story