வருடத்தில் எத்தனையோ விரத நாட்கள் இருந்தாலும், சில விரத நாட்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் இந்து பெண்கள் கட்டாயம் அனுஷ்டிக்கும் விரதங்களில் முக்கிய விரதமாக வரலட்சுமி விரதம் இருக்கிறது. ஏனென்றால் வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு எப்போது வருகிறது? அன்றைய வழிபாட்டு நேரம் என்ன? விரதம் கடைப்பிடிக்கும் முறை என்ன? என்பது குறித்தெல்லாம் இந்த பதிவில் பார்ப்போம்.
வரலட்சுமி விரதம் வரலாறு
அற்புதம் நிறைந்த வரலட்சுமி விரத மகிமையை விளக்கும் வகையில் பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானதை இங்கே காணலாம். அக்காலத்தில் மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை இறைவனுக்கு நிகராக கருதி பணிவிடைகளை செய்து வந்தாள். அவளின் மனத்தூய்மையும், செயலும் லட்சுமிதேவிக்கு மகிழ்ச்சியை அளித்தது. சாருமதியின் அன்பான மனதைக் கண்டு அவளின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அருள்பாலித்ததுடன், அந்த விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். அந்த விரதம் குறித்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பணியையும் அவளிடம் ஒப்படைத்தார். சாருமதியும், லட்சுமிதேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். மேலும் சாருமதி வரலட்சுமி விரதம் இருந்து பல நன்மைகள் பெற்றதைப் பார்த்த மற்ற பெண்களும், அந்த விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். இதனால் மகத நாடே செழிப்பாக மாறியதாம். மேலும், பார்வதி தேவி வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப் பெற்றாராம். விக்ரமாதித்தன் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றானாம்.
எப்போது வரலட்சுமி விரதம்?
ஆண்டுதோறும் ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமை அன்று சகல வரங்களையும் அருளும் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட வரலட்சுமி விரதம், ஆடி மாதத்தின் கடைசி நாளும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையுமான ஆகஸ்டு 16ம் தேதி வருகிறது.
வரலட்சுமி பூஜைக்கு உகந்த நேரம்
வரலட்சுமி பூஜை என்பது 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது, வரலட்சுமி பூஜைக்கு முதல் நாளன்று வரலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதும், வரலட்சுமி பூஜை முடிந்த மறுநாள் புனர்பூஜை செய்வதும் என 3 நாட்களுக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில் வரலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் பூஜையை செய்ய ஆகஸ்டு 15ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி பூஜைக்கு, ஆகஸ்டு 16ம் தேதி காலை 9 மணி முதல் 10.20 மணி வரையும், மாலை 6 மணிக்கு பிறகும் உகந்த நேரமாக கூறப்பட்டுள்ளது. புனர்பூஜை செய்ய ஆகஸ்டு 17ம் தேதி காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரை மிகச்சிறந்த நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விரதத்தை யார் யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம்?
திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதனால் சுமங்கலிகளுக்கு திடமான தாலி பாக்கியத்துடன், குழந்தைப்பேறு, செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி என சகல நன்மைகளும் கிடைக்குமாம். அத்துடன் வீடு சுபிட்சம் அடையும் என்றும் கூறப்படுகிறது. திருமணமாகாத கன்னி பெண்களும் விரதம் இருந்து மஞ்சள் சரட்டைக் கட்டிக்கொள்ளலாம். இதனால் நல்ல திருமண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. ஒருவேளை வரலட்சுமி விரதத்தன்று மாத விலக்கான பெண்கள், அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்யலாம்.
பூஜை பொருட்கள்
லட்சுமி தேவி எந்தெந்த பொருட்களில் எல்லாம் வாசம் செய்கிறாளோ அந்த பொருட்களை பூஜைக்கு பயன்படுத்தலாம். அதன்படி மஞ்சள், குங்குமம், பூ, அரிசி, பருப்பு, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு, பச்சை கற்பூரம், வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள், முந்திரி, பாதாம், அரிசி, பருப்பு, இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த பழங்கள், வளையல், கண்ணாடி, நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
வரலட்சுமி பூஜை வழிபாட்டு முறை
லட்சுமி தேவியின் அம்சமான கலசத்தை வைத்து வழிபட வேண்டும். கலசத்தை பூக்களால் அலங்கரித்து, நமக்கு தெரிந்த லட்சுமி மந்திரங்களையும், 108 போற்றிகளையும் உச்சரித்து, அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து, லட்சுமி தேவிக்கு பிடித்த நைவேத்தியம் படைத்து, நோன்பு கயிற்றை கையில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு பின்னர் நைவேத்தியத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்களைச் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். கலசம் வைத்து வழிபட முடியாதவர்கள், சாதாரண படத்தை வைத்தும் வழிபடலாம்.
தவறாமல் செய்ய வேண்டியது
வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு அழைத்து, அவளது மனம் மகிழும் வகையில் பூஜை செய்து, வழிபடும் தினம். எனவே இந்த தினத்தில் மகாலட்சுமி, நமக்கு அளித்த செல்வத்தை நாம் எவ்வாறு நல்வழியில் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமான ஒன்று. லட்சுமி தேவியின் செல்வத்தில் சிறிய அளவையாவது தானதர்மம் செய்கிறோமா என்பதை வைத்து நம் மனதின் தர்ம குணம் தெரியவரும். நம் மனதில் உள்ள தர்ம குணத்தை தெரிந்து கொள்வதற்காகவே மகாலட்சுமி நம்முடைய வீட்டில் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே, வரலட்சுமி விரதத்தன்று நம்மால் முடிந்த அளவுக்கு, ஏழை எளியோருக்கு உணவோ, பொருளோ வாங்கி கொடுத்தால், லட்சுமி தேவியின் மனது குளிர்ந்து, நம் வாழ்க்கை மென்மேலும் சிறக்குமாம்.