யூடியூப், இன்ஸ்டா என்று பல சமூக ஊடகங்களில் பல ரீல்ஸ்கள் பிரபலமாக இருந்து வந்தாலும் ஆன்மீக ரீதியாக ட்ரெண்டாகி வருவது என்னவோ கருங்காலி, செங்காலி மாலைதான். அதிலும் குறிப்பாக தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல நடிகர்கள் இந்த மாலை அணிந்ததால்தான் பிரபலமானார்கள் என்ற கருத்தும் வைரலாகி வருகிறது. அப்படி இந்த கருங்காலி, செங்காலி மாலையில் என்ன இருக்கிறது? யார் இதை அணியலாம்? அணியக்கூடாது? அணிவதால் ஏற்படும் பயன்கள் என்ன? அணிபவர்கள் அசைவம் சாப்பிடலாமா? கூடாதா? என்பதை இப்பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
கருங்காலி மாலை
கருங்காலி, செங்காலி மாலை இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் ட்ரெண்டாக இருந்தாலும் இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த மரமாகும். அடர்த்தியாக, வலுவாக இருக்கும் இந்த மரத்தை எகிப்திலிருக்கும் மக்கள் ஆபரணங்கள் பரிசளிக்கும் பெட்டி, சவப்பெட்டி, மன்னர்கள் அமரும் ராஜ நாற்காலி, செங்கோல், வயலின், வீணை என்று பல இசைக்கருவிகள் செய்வதற்கு பயன்படுத்தி வந்தனர். இதுதவிர இதை பயன்படுத்தி பாலிஷ் போட்டால் பொருட்கள் மினுமினுக்கும். அடக்கம் செய்யும் உடல்களின் மேனி அவ்வளவு எளிதில் கெடாது. எகிப்து நாட்டில் இந்த கருங்காலியை பல வருடங்களாக பயன்படுத்திவந்தாலும் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது என்னவோ 1995 ஆம் ஆண்டுதான். இதன் பயன்பாடு அதிகரித்ததனாலேயே 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு இம்மரத்தை வெட்டுவதற்கு தடை விதித்தது. அப்படி மீறி இந்த மரத்தை வெட்ட நினைத்தாலும் இந்திய அரசின் அனுமதியை பெற்றே ஆக வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. கருங்காலி மரமானது எகிப்து, இலங்கை மற்றும் இந்தியாவில் கேரளாவிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் அதிகமாக வளர்கிறது.
கருங்காலி மரம் மற்றும் வெட்டப்பட்ட கருங்காலி மரம்
கருங்காலியை யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக்கூடாது?
பரம பவித்ரம் நிறைந்த இந்த கருங்காலியை 12 ராசிக்காரர்களும் பயன்படுத்தலாம். ஆனால், இதை பயன்படுத்துவதற்கு முன்னர் நம்முடைய குலதெய்வத்தின் மூலமந்திரத்தை உச்சாடனம் செய்து உரு ஏற்றிய பிறகே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் மட்டுமே அதற்கு சக்தி உண்டு. உரு ஏற்றுவதன் மூலம் கருங்காலியில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். கருங்காலி மாலையை அனைவரும் அணியலாம் என்றாலும் அதை வாங்க நினைத்தால் ஜாதக ரீதியாக அவர்களுக்கு தொடர்பு வர வேண்டும். அப்படி தொடர்பு வந்தால் மட்டுமே அந்த கருங்காலி மாலையை வாங்க முடியும். நல்ல திசை, நல்ல புத்தி நடக்கும் போது அனைத்தும் நன்றாகவே நடக்கும். அப்படி நல்ல திசை நல்ல புத்தி நடக்கும் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அவர்களின் ஜோதிடர்களை ஆலோசித்து அணிந்திருக்கலாம். அப்படி அணிந்ததினாலோ என்னமோ அவர்கள் வெற்றி கண்டிருக்கலாம். இவர்கள் அணிந்து வெற்றி கண்டதாலேயே பலரும் இந்த கருங்காலி மாலையை அணிந்து வருகிறார்களே தவிர, இந்த கருங்காலி மாலை பிரபலமாக வேறு காரணங்கள் இல்லை.
இந்த கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் என்று இருபாலினரும் பயன்படுத்தலாம். ஆனால், பெண்கள் கருங்காலியை பயன்படுத்தும் போது மாதாந்திர நாட்களில் அதாவது 6 நாட்களுக்கு அணிய கூடாது. இதுதவிர தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் போது அணிய கூடாது. இரவு உறங்குவதற்கு முன்னர் இம்மாலையை தண்ணீர், பால் அல்லது பன்னீரில் போட்டு காலையில் குளித்து முடித்து சுத்தபத்தமாகி உரு ஏற்றிய பிறகே அணிய வேண்டும். அதேபோல ஜோதிட சாஸ்திரப்படி தீட்டாக கருதும் இறப்பு, பிறப்பு, பூப்பெய்தல் விசேஷங்களுக்கு செல்லும் போது கருங்காலி மாலை அணிவதை தவிர்க்க வேண்டும். உரு ஏற்றிய கருங்காலி மாலையை அணிவதால் பலவிதமான நன்மைகள் ஏற்படுமே தவிர இவற்றால் எந்த ஒரு தீமையும் ஏற்படுவதில்லை. பரம பவித்ரமான இந்த கருங்காலியை நாம் பயன்படுத்தும் முறையில்தான் நன்மையும், தீமையும் உண்டு.
கழுத்தில் அணியப்படும் கருங்காலி மாலை
கருங்காலி மாலையை பயன்படுத்துவது எப்படி?
கருங்காலியை பொறுத்தவரையில் அது இறை தொடர்புடையது. உதாரணத்திற்கு கோயிலில் இருக்கும் சிலைகள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டவை. அந்த கருங்கற்கள் வெறும் கற்களாக இருந்த போது அதற்கு அவ்வளவு மதிப்பில்லை. அதுவே அந்த கருங்கற்களுக்கு உருவம் கொடுக்கும் போது அதன் மதிப்பும், பக்தியும் கூடுகிறது. அந்த உருவத்தை விக்கிரகமாக அமைத்து அஷ்டபந்தனம் செய்யும் போது அது கடவுளாக வணங்கப்படுகிறது. அஷ்டபந்தனம் செய்து கும்பாபிஷேகம் நடத்தி 48 நாட்களுக்கு உரு ஏற்றும் போதுதான் வெறும் கருங்கற்கள் இறை ஆகின்றன. அதேபோல்தான் மரமாக காணப்படும் இந்த கருங்காலியை உரு ஏற்றுவதன் மூலம் அது இறைக்கு தொடர்புடையதாக இருக்கிறது. உரு ஏற்றுதல் என்பது தண்ணீர், பால், பன்னீர், இளநீர் முதலியவற்றில் இந்த மாலையை போட்டு குலதெய்வத்தின் மூலமந்திரத்தை காலையில் பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் 108 அல்லது 1008 முறை சொல்லி அபிஷேகம் செய்வதாகும்.
ஒரிஜினல் கருங்காலியை கண்டறிவது எப்படி?
பொதுவாகவே மரத்தின் கிளைகளை தண்ணீரில் போட்டால் மிதக்கும். ஆனால், இந்த கருங்காலி மாலையை உடைத்து தண்ணீரில் போட்டால் மூழ்க வேண்டும். அப்படி உடைத்து போட்ட மாலை தண்ணீரில் மிதக்காமல், மூழ்கினால் மட்டுமே அது அசலான கருங்காலி மாலையாகும்.
அசைவம் சாப்பிடலாமா? கூடாதா?
இந்த கருங்காலி மாலை அணிவதால் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதில்லை. இது பரம பவித்ரம் நிறைந்த மாலை என்பதால் அசைவம் சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம். முடிந்தால் முழுவதுமாக தவிர்த்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பத்திற்கேற்றது. ஆனால், அசைவம் சாப்பிடாமல் இருந்தால் மிக சிறப்பானது. அசைவம் சாப்பிடும் போது அந்த மாலையை பூஜை அறையில் தண்ணீர், பால் அல்லது பன்னீரில் போட்டு வைத்து விட வேண்டும்.
செங்காலி மாலைகள்
கருங்காலி மாலையால் ஏற்படும் நன்மைகள்
இந்த கருங்காலியை பயன்படுத்துவதால் நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். பொறாமை, காத்து, கருப்பு, பில்லி, சூனியம், ஏவல், மந்திர, யந்திர, தந்திர, ஒளஷதம் ஆகிய துர்சக்திகளிடமிருந்து காக்கும் கருவியாக இந்த கருங்காலி மாலை இருக்கிறது. வெறும் ஸ்படிகை, துளசி, கருங்காலி மாலை அணிவதால் எந்தவொரு பலனும் இல்லை. அதற்கு உரு ஏற்றினால் மட்டுமே சக்தி கிடைக்கும். தினமும் உரு ஏற்றுவதை காட்டிலும் குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி, நவமி நாட்களில் உரு ஏற்றினால் அதிக சக்தி கிடைக்கும்.
கருங்காலி பொருட்கள்
கருங்காலி மணிகளை 54 அல்லது 108 எண்ணிக்கையில் வெள்ளி பூண் அல்லது தங்க பூண் போட்டு மாலையாக அணிவதுண்டு. இதுதவிர 21 எண்ணிக்கையில் ப்ரேஸ்லெட்டாக அணிவதும் உண்டு. கருங்காலி மோதிரமும் உண்டு. இதுதவிர கருங்காலியால் வேல், சூலம் ஆகியவற்றையும் செய்வதுண்டு. இதை அரைஞாண்கயிறாக பயன்படுத்துவதையும், கீ-செயினாக பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். கருங்காலி மாலையை எல்லோரும் பார்க்கும் விதமாகவும் அணியலாம், மறைத்தும் அணியலாம். உரு ஏற்றி விட்டால் அது எப்படி அணிந்தாலும் அதன் சக்தி வேலை செய்யும். இந்தியாவில் கருங்காலி மரம் வெறும் ஆபரணங்கள் செய்ய மட்டும் பயன்படாமல், மேசை, நாற்காலி, இசைக்கருவிகள், உத்திரம், வாசக்கதவு, பூஜை அறை, தீபங்கள், முக்காலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்படுகிறது.
செங்காலி மாலை
செங்காலி மாலையை ராகு, கேது தோஷம் இருப்பவர்கள் அணிவது வழக்கம். ஆனால், கருங்காலி மாலையை போலவே செங்காலி மாலையையும் அனைவரும் அணியலாம். அணிவதற்கு முன்னர் ஒருமுறை ஜோதிடர்களை அணுகி ஆலோசனை பெற்று அணிவது சிறந்தது. கருங்காலி மாலைக்கு எவ்வகை நன்மைகள் ஏற்படுகிறதோ அதேபோல்தான் செங்காலி மாலைக்கும் ஏற்படும். எந்த மாலையை பயன்படுத்தினாலும் அதை முறையாக பரம பவித்ரமாக பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குரிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருங்காலி மாலையை பற்றி பலரும் பேசியதால் அது பிரபலமானதை போல, செங்காலி மாலை குறித்தும் பேசினால் அதுவும் விரைவில் பிரபலமாகும்.