ஏன் சாப்பிட வரல? காலையில 4 மணிக்கே சாப்பிட்டியா? இதோட நைட்தான் சாப்பிடுவியா? நாள் முழுக்க சாப்பிட மாட்டியா? தண்ணிக்கூட குடிக்க மாட்டியா? எச்சிகூட முழுங்க மாட்டியா? உனக்கு பசிக்காதா? தாகம் அடிக்காதா? டயார்டா இருக்காதா? நான் வேணும்னா உன் பைய தூக்கிட்டு வரவா? என பள்ளி நாட்களில் நாம் சிறியவர்களாக இருந்தபோது, ரமலான் பற்றியெல்லாம் பெரிதாக தெரியாதபோது, இஸ்லாமிய நண்பர்களிடம் ஆச்சர்யமாகவும், அன்பாகவும் இப்படியெல்லாம் கேட்டிருப்போம். "இந்த அன்புதான் 'இந்தியாவை' வேற்றுமையில் ஒற்றுமையாக, மற்ற நாடுகளைவிட வித்தியாசப்படுத்தி, மேன்மைப்படுத்தி காட்டுகிறது". இதுவே நாம் கொஞ்சம் வளர்ந்த பிறகு, ரமலான் மாதம் வந்தால் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று தெரிந்துவிடும். அப்போது நண்பனிடம் கேள்விகள் மாறிவிடும். காலையில என்ன சாப்பிட்டே? நைட்டு போய் என்ன சாப்பிடுவ? ரமலானுக்கு எனக்கு பிரியாணி தருவியா எனக் கேட்க ஆரம்பித்து விடுவோம்! சரி, ரமலான் நோன்பு என்றால் என்ன? எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நோன்பின்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது? இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு எப்படி வந்தது? இதை பற்றியெல்லாம் விரிவா பார்க்கலாம் வாங்க...
இறைவனுக்காக நோன்பு
மெக்கா அல்லது மதீனாவில் இஸ்லாம் பரப்பப்படுவதற்கு முன்பே நோன்பு இருப்பது வழக்கமாக இருந்ததாம். ஆனால் தொடக்கத்தில் நோன்பு, இன்று உள்ளது போல் இருக்கவில்லை. நபி ஹஸ்ரத் முகமது, மெக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த இரண்டாம் ஆண்டு, அதாவது கி.பி. 624-ல், ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது. அன்று முதல் உலகம் முழுவதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், முகமது நபிக்கு வெளிப்பட்டதை இம்மாதம் குறிக்கிறது.
முகமது நபிக்கு திருக்குர்ஆன் அருளப்பட்ட ரம்மிய மாதமே ரமலான்!
இஸ்லாத் நாட்காட்டியில் வரும் மாதங்களில் ரமலான் மாதமே மிகவும் புனித மாதமாக கருதப்படுகிறது. இறைவனுக்காகப் பசியை பொருட்படுத்தாமல், தூக்கத்தை விடுத்து நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம் முடிந்தபின் வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தெரிந்த மாலையே ஈகைத் திருநாள் கொண்டாட்டம் தொடங்கிவிடும்.
உலகம் முழுவதிலும் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள்
உலகம் முழுக்க கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிருந்து வருகின்றனர். இந்த மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, சுஹூர் அல்லது செஹ்ரி என அறியப்படுகிறது. பின்னர் நாள் முழுதும் நோன்பிருந்து சூரியன் மறையும்வரை எதையும் உண்ண மாட்டார்கள். தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். சூரியன் மறைந்த பின்னரே உணவு உட்கொள்வார்கள். இது இஃப்தார் அல்லது ஃபிதூர் எனப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களே ரமலான் நோன்பிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் உள்ளிட்டோருக்கு நோன்பிலிருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.
அதேநேரம் ரமலான் நோன்பு இருப்பவர்கள், அதனை நேர்மையாகவும், கண்ணியமாகவும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலை முதல் மாலைவரை உண்ணாமல், நீர் அருந்தாமல், தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். நேர்மையும் கண்ணியமும் இல்லையென்றால், இஸ்லாமியர்களின் நோன்பானது வெறும் பட்டினி என்ற அளவில் மட்டுமே கருதப்படும்.
நேர்மையுடனும், கண்ணியத்துடனும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது ரமலான் நோன்பு
இறைவன் வழங்கிய வெகுமதி
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது உள்ளத்தின் அழுக்குகளையும், மனதின் இச்சைகளையும் நீக்கிவிடும். உள்ளேயும் வெளியேயும் தூய்மை அடைவதற்காகவே இந்த நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள் மட்டுமே, சொர்க்கத்திலிருக்கும் ரய்யான் எனும் சொர்க்க வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்று குர்ஆன் சொல்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடித்தவர்கள், அதன் பலனை அடுத்து வரும் பதினோரு மாதங்களில் பெறுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவேதான் ரமலான் மாதத்தை, இறைவன் தங்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய வெகுமதியாக இஸ்லாமியர்கள் பார்க்கின்றனர்.
நோன்பின் முதல் 2 நாட்கள் கடினம்
ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கும் முதல் 2 நாட்கள் மிகவும் சிரமமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. திடீரென நாள் முழுவதும் உணவு இல்லாமல் இருப்பது உடலுக்கு அதிர்ச்சியை தரலாம். ஒரு நாளில் கடடைசியாக நாம் சாப்பிட்டதில் இருந்து, நம் உடல் உண்ணாவிரத நிலைக்கு செல்ல 8 மணிநேரம் வரை ஆகுமாம். இந்த 8 மணிநேரம் என்பது நம் குடல், உணவில் இருந்து ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம். 8 மணி நேரத்திற்குப் பிறகு, ஆற்றலுக்காக நமது உடல், கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸை நாடுகின்றது. குளுக்கோஸின் சேமிப்பு தீர்ந்துவிட்டால், உடலில் உள்ள கொழுப்பு நம் உடலுக்கான சக்தியாக மாறும். நம் உடல், தன் தேவைக்காக கொழுப்பை பயன்படுத்தத் தொடங்கும் போது, அது எடையைக் குறைக்க உதவும். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கிறது. எனவே ரமலான் நோன்பு நோற்பதால், இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்கில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளும் நோன்பிருப்பவர்களுக்கும் கிடைக்குமாம். அதேநேரம், உடல், தொடர்ச்சியான நோன்பிற்கு பழக ஒருவார காலமாவது எடுத்துக்கொள்ளுமாம். இருப்பினும், நோன்பின்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, உடல் பலவீனமாகி சோம்பல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ரமலான் நோன்புகால உணவை எடுத்துக்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
நோன்பின்போது என்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
சூரிய உதயத்திற்கு முன் உட்கொள்ளும் உணவு சுஹூர் - சூரியன் மறைந்தபின் சாப்பிடுவது இஃப்தார்
அதிகாலையில் என்ன சாப்பிடலாம்?
அதிகாலையில் சாப்பிடும் உணவுதான் நாள் முழுவதும் நோன்பைக் கடைபிடிப்பதற்குத் தயார் செய்யும். எனவே, சரியான உணவைச் சாப்பிடுவது, நாள் முழுவதும் உணவு மீதான கிரேவிங்கை குறைக்க உதவும். நாள் முழுக்க உடலுக்குத் தேவையான ஆற்றலையும், சத்துகளையும் பெற புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் உள்ளிட்டவை அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முழு தானிய உணவுகளை உண்ணலாம். இத்தகைய உணவுகளால் ஆற்றல் மெதுவாக வெளியாகும் என்பதால், நாள் முழுவதும் நோன்பைக் கடைபிடிக்க எளிதாக இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களையும் தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறிகளையும், முட்டைகளையும் உண்ணலாம் என்றும், ஆலிவ் எண்ணெயில் சமைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். போதிய அளவு தண்ணீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டுமாம்.
மாலை இஃப்தாரின்போது என்ன சாப்பிடலாம்?
நோன்பை முடிக்கும்போது இயற்கையான இனிப்பு கொண்ட நீர்ம உணவுகள், திட உணவுகளை அதிகமாக எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. நோன்பை முடித்து உணவு உண்பதற்கு, பேரீட்சையும், தண்ணீரும் சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. சூப் அருந்தியும் நோன்பை முடிக்கலாம். இஃப்தாரின்போது ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் சாப்பிடாமல், இருவேளை உணவாக பிரித்துக்கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதைவும், செரிமான பிரச்சினை ஏற்படுவதையும் தடுக்க உதவுமாம். முழு தானியங்கள் உள்ளிட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் பொருட்கள், புரதம் நிறைந்த இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ் உள்ளிட்ட சமவிகித உணவுகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காகவே ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்து
உணவில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது என்ன?
நோன்பு காலத்தில் உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உப்பு நிறைந்த உணவுகள் தாகத்தை ஏற்படுத்தும். தாகம் ஏற்படுவதைத் தவிர்க்க, அதிகாலை உணவில் காஃபினை தவிர்ப்பது முக்கியம். தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஆழமான வறுத்த பொருட்கள், சர்க்கரை தின்பண்டங்கள், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் அடங்கும். இவை அசௌகரியம், மந்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் கூர்மையை ஏற்படுத்தும்.
ரமலான் சிறப்பு - யாரும் இருக்கலாம் நோன்பு
ரமலான் மாதம் எத்தகைய சிறப்புடையது என்று மனிதர்கள் புரிந்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள் என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், அல்லாவை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் ரமலான் மாதம் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. எனவேதான் இறைவனின் அருள் நிறைந்த இந்த மாதத்தில் முழு மனதுடன், ஆசையுடன் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்கள் மட்டும்தான் என்பது இல்லை, மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதைபோல் யார் வேண்டுமானாலும் இந்த நோன்பை கடைபிடிக்கலாம். பேதங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்து பகிரப்படுவது இதற்கு சான்று.