இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பார்கள். அப்படிப்பட்ட கர்ம வினையிலிருந்து தப்பிக்க வழிகள் இருக்கிறதா? என்பது குறித்தும், வாழ்க்கையில் வெற்றிபெற நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும், நம்முடன் உரையாடுகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். மேலும், ஒவ்வொருவரும் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே வாழ்க்கையில் எத்தகைய வெற்றியை அடையலாம்? என்னென்ன நன்மைகளை பெறலாம்? என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்கி நம்பிக்கையூட்டுகிறார்.

வயது மூப்பு மூட்டிலிருந்துதான் தொடங்கும் என சொல்கிறீர்கள். அப்படியென்றால் மூட்டுகளை பாதுகாப்பது எப்படி?

தினமும் நடக்க பழகவேண்டும். நிறையப்பேர் ட்ரெட்மில்லில் நடக்கிறேன், கடுமையான உடற்பயிற்சி செய்கிறேன் என்பார்கள். ஆனால் தினசரி புல்தரையில் 10 -15 நிமிடங்கள் நடந்தாலே போதுமானது. வாழ்க்கையில் இருளும் இருக்கும், வெளிச்சமும் இருக்கும் என்பதுதான் போகரின் தத்துவம். அதாவது அலாஸ்கா போன்ற எப்போதும் வெப்பம் மட்டுமே இருக்கும் இடத்திலும் மனிதர்கள் தங்கமுடியாது, அண்டார்டிகா போன்ற குளிர்பிரதேசத்திலும் மனிதர்கள் தங்கமுடியாது. அதுபோலத்தான் வாழ்க்கை என்பதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் என்கிறார். அதுபோல் உணவில் பெரிய கட்டுப்பாடுகளை ஒரேநாளில் கொண்டுவந்திட முடியாது. எனினும் சிறு சிறு உடற்பயிற்சிகளை தினமும் தொடங்கிவிட்டாலே வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் அகன்றுவிடும் என்பதுதான் தாவோயிசத்தின் கருத்து.

நடைபயிற்சி என்றால் வெறுங்காலில்தான் நடக்கவேண்டுமா?

இப்போது ஆங்காங்கே தேவையற்றவை கிடக்கும் என்பதால் முடிந்தவரை ஷூ அணிந்துகொண்டு நடப்பது நல்லது. ஆனால் வெறுங்காலில் நடப்பதாக இருந்தால் மெதுவாக நடக்கவேண்டும். அப்படி நடக்கும்போது இது என் கால், என் பாதம், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று உணர்ந்து நடக்கவேண்டும். நடைபயிற்சியைகூட ஒரு தியானமாக செய்யும்போதுதான் அதில் பலன் அதிகமாக கிடைக்கும். நான் எடை குறையவேண்டும் அல்லது ஒரு இலக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் அடையவேண்டும் என்று செய்யத் துவங்கினால் பெரும் பலன் கிடைக்காது. தாவோயிசத்தை பொருத்தவரை எந்த செயலாக இருந்தாலும், ‘நீ பாதையாக இருந்து, மெதுவாக இலக்கை அடைய முயற்சிசெய்தால், வாழ்க்கை நீண்டுகொண்டே இருக்கும், வெற்றியும் வந்துகொண்டே இருக்கும்’.


மேஷம் முதல் மீனம்வரை 12 ராசிகள்

ஊழ்வினை பாதிப்பை ஏற்படுத்துமா?

‘பதவி பூர்ண புண்யானாம்’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. பராசுராகு என்ன சொல்கிறாரென்றால், ஒரு ஜாதகத்தில் 1, 4, 7, 10 என்று சொல்லக்கூடிய கேந்திர கோணம், மகா விஷ்ணுவின் இடம் என்பார். அங்கு ஒரு நபர் தனது உழைப்பை போடவேண்டும். 1, 5, 9 என்பது மகாலட்சுமியின் இடம். இது ஏற்கனவே சேர்த்துவைத்திருக்கும் புண்ணியம். இதில் 5ஆம் இடமென்பது பூர்வ புண்ணியஸ்தானம், புத்திர ஸ்தானம். 9ஆம் இடமென்பது பாக்கியஸ்தானம் என்பார்கள். ‘ஊழ்வினை வந்து உருத்தும்’ என்பதுதான் சிலப்பதிகாரத்தின் கருத்தே. இது உண்மையா? இதிலிருந்து விடுபட என்ன வழி? என்பதை பார்க்கவேண்டும். சிலருக்கு எல்லாம் சுலபமாக கிடைத்துவிடுகிறது. சிலருக்கு பிறந்தவுடனே சிரமங்கள் தொடங்கிவிடுகின்றன. சிலர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் தோல்விமேல் தோல்வி வந்துவிடுகிறது. கர்மா என்ற கட்டுப்பாட்டு சூழலிலிருந்து தப்பிக்கவே முடியாதா? அதற்காக காசிக்குத்தான் செல்லவேண்டுமா? அப்படியே சென்றுவந்தாலும் கவலையில் பிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள்.

நம் உடலிலேயே காசி இருக்கிறது. நாம் எப்போது கண்ணைமூடி யோசிக்கும்போதும், ஒரு காட்சியை காணும்போதும் நம் எண்ணங்கள் அனைத்தும் நெற்றியில் புருவப்பொட்டில்தான் குவிகின்றன. அங்கு செல்லக்கூடிய ஒரு நாசிக்கு கங்கை என்றும், மற்றொரு நாசிக்கு யமுனை என்றும் பெயர். ‘பழவினை தீர சுழுமுனை நாடு’ என்றார் போகர். அப்படியென்றால் சுழுமுனை என்று சொல்லக்கூடிய நெற்றிப்பொட்டு சக்கரத்தை தேடு என்றார். நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்மா அனைத்துமே எண்ணப்பதிவுகளாகத்தான் இருக்கிறது. இதையே இன்றைய விஞ்ஞானம் மறுபிறவி குறித்து கூறுகையில் ‘குவாண்டம் இயற்பியல்’ பற்றி பேசுகிறது. குவாண்டம் ஈர்ப்புவிசையை மனிதர்கள் ஆத்மா என்று சொல்கிறார்கள். அதாவது அவர்களுடைய எண்ணப் பதிவு எங்கோ இருக்கிறது. அது நம் வாழ்க்கையில் மீண்டும் நடைபெற துவங்குகிறது. அதனால்தான் சில இடங்களுக்கு சென்றாலோ அல்லது சில மனிதர்களை பார்த்தாலோ ஏற்கனவே பார்த்ததுபோன்று இருக்கும். ஒரு ஜாதகத்தில் 5ஆம் இடமும் 11ஆம் இடமும் தொடர்புபெற்றிருந்தால் அவர்கள் போன பிறவியில் ஏற்கனவே பார்த்தவர்களைத்தான் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.


பாவ ஜாதகம் என்று சொல்லப்பட்டதை சாதகமாக மாற்றி வெற்றிபெற்ற எலான் மஸ்க்

இதிலிருந்து விடுபட மனதை முதலில் தியானத்தில் லயிக்க வைக்க வேண்டும். நிறைய சித்தர்கள் முந்தைய பிறவியில் செய்த கர்ம வினையின் காரணமாகத்தான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள். வாய்ப்புகள் இருக்கக்கூடிய புண்ணியமான ஜாதகம் என்பது வாழ்க்கையில் எதையும் பெரிதாக சாதித்துவிடாது. வாழ்க்கையில் சோதனையில் ஜெயித்த அப்துல்கலாம் போன்றோர்தான் நமக்கு இன்று வழிகாட்டியாக இருக்கிறார்கள். செவ்வாய் - ராகு சேர்ந்திருந்தாலே அதை கொடிய பாவஜாதகம் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஜாதகம் கொண்ட எலான் மஸ்க்கின் கண்டுபிடிப்பான ஸ்டார்லிங்க்தான் உலகில் எங்கெல்லாம் யுத்தம் நடக்கிறதோ அங்கெல்லாம் உதவக்கூடியதாக இருக்கிறது. ஒரு ஜாதகம் நமக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது நாம் அதை எந்த கண்ணோட்டத்தில் உபயோகப்படுத்துகிறோம் என்பதை பொருத்துதான் இருக்கிறது. விலையுயர்ந்த ஒரு கோடி ரூபாய் காராக இருந்தாலும், சாதாரண 4 லட்ச ரூபாய் காராக இருந்தாலும், சாலையில் திறமையாக வண்டி ஓட்ட பழகிவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தலைவரான எம்.ஜி.ஆர் பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அவருடைய அம்மாவை பற்றிக்கொண்டதால் வாழ்க்கையில் வெற்றிபெற்றார். அதேபோல்தான் கலைஞரும். ஒரு ஜாதகத்தில் சூரியன் என்றால் அப்பாவையும், சந்திரன் என்றால் அம்மாவையும் குறிக்கும்.

முகமது நபிகளும் ‘தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது’ என்றுதான் சொல்லியிருக்கிறார். முதலில் பெற்றோரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நிறையப்பேர் தங்களுடைய பெற்றோரை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். என்னதான் கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும், நாம் முதன்முதலில் தங்கியிருந்த வீடு, பயணித்த வாகனம் அம்மா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சிவ என்ற வார்த்தையை திருப்பிப்போட்டால் வசி என்று வரும். வாசி என்று சொல்லக்கூடிய மூச்சுக்காற்றும் அதுதான். நாம் இந்த பூமியில்தான் வசிக்கிறோம். பூமிக்கு பெயர் வசுதா. வசுதா என்றால் வசதிகளை தருவது என்று பொருள். இதை தருபவள் தாய். எனவே எப்போது பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்கிறார்களோ, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார்களோ அப்போதே, ஜாதகத்திலிருக்கும் பாவ கர்மா நன்மையை தர தொடங்கிவிடும். வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி தானாக வரும். இருப்பதிலேயே பெரிய பரிகாரம் என்பது பெற்றோரை மதித்து நடப்பதுதான். பெற்றோரை மதித்து நடந்தாலே கர்மவினைகள் நீங்கும்.


ஆசிரியர்கள்போல் நம்மை சுற்றியிருக்கும் நவகிரகங்கள்

சிலருக்கு சனி திசை, சனி காலம் நடக்கும்போது ஆயுள் பாதிக்கும் என்று சொல்கிறார்களே? அது உண்மையா?

நாம் ஒரு பள்ளியில் படிக்கிறோம். அதில் 9 வகுப்பாசிரியர்கள். அவர்கள்தான் நவகிரகங்கள். கிரகங்கள் என்றால் கோள்கள் கிடையாது. ‘கிரக’ என்றால் பற்றுதல் என்று பொருள். அதனால்தான் கிரகப்பிரவேசம் என்பார்கள். அப்படியென்றால் அந்த இடத்திற்குள் செல்லும்போது அந்த இடம் என்னுள் மாற்றங்களை செய்கிறது என்று அர்த்தம். உதாரணமாக, 2 நிமிடங்கள் சுவரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் ஒருவித அழுத்தம் உண்டாகிவிடும். உடனே ஒரு வெட்டவெளியை பார்த்தால் புத்துணர்ச்சி உண்டாகும். நாம் இருக்கக்கூடிய சூழ்நிலை நம்முள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துமோ அதற்கு பெயர்தான் ‘கிரகம்’. நவம் என்று சொன்னால் புதுமையானது அல்லது ஒளி என்று எடுத்துக்கொள்ளலாம். நவகிரகங்களும் ஆசிரியர்கள் போல நம்மை சுற்றியிருக்கிறார்கள். ஒரு மனிதனின் ஆயுளை 3 விதங்களில் சொல்கிறார்கள். ஒன்று பிரம்ம ஆயுள் - நாமே நமக்கு உருவாக்கிக்கொள்ளக்கூடிய பிரம்மனது தலையெழுத்து. இரண்டாவது விஷ்ணு விதித்த ஆயுள் - யோகா, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் வரக்கூடிய ஆயுள். மூன்றாவது சிவபெருமான் தீர்மானிப்பது என்பார்கள்.

ஒருவரது வீட்டில் இருப்பதால் கண்டம் உருவாகுமா? என்றால், உதாரணத்திற்கு, 10ஆம் வகுப்பு சி செக்‌ஷன் என்றால், அங்கு, குறைந்த மதிப்பெண் முதல் அதிக மதிப்பெண்வரை வாங்கும் அனைத்து மாணவர்களையும் ஒன்றாகத்தான் போட்டிருப்பார்கள். ஆனால் அங்குள்ள குழந்தையின் பெற்றோர், குழந்தையின் ஜாதகம் சரியில்லாததால்தான் பிரச்சினை வந்திருக்கிறது என்று நினைப்பார்கள் அல்லது பெற்றோரின் ஜாதகம் சரியில்லாததால்தான் குழந்தை அங்கு செல்லவேண்டி இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் இதுபோன்று ஒரே சிந்தனையுடையவர்களை கடவுள் சேர்த்து ஒரே இடத்திற்கு அனுப்புகிறார். நிறையப்பேர் ‘என்னுடைய ஜாதகம் சரியில்லை, என்னுடைய குழந்தையின் ஜாதகம் சரியில்லை, அதை நான்கு வீடு தள்ளிவைத்தால் வாழ்க்கை மாறிவிடுமா?’ என்று கேட்பார்கள். அப்படி மாற்றுவதற்கு கடவுள் ஒன்றும் முட்டாள் கிடையாது. சிலர், ‘என் ஜாதகம் சரியில்லை, என் மனைவி பேரில் வியாபாரம் நடத்தினால் மீண்டுவிடலாமா?’ என்று கேட்பார்கள். ஆனால் மனைவிபேரில் வியாபாரம் நடத்தினாலும் கல்லாப்பெட்டியிலிருந்து இவர்தான் காசை எடுத்துக்கொண்டு போகிறார் என்பது கடவுளுக்கு தெரியுமல்லவா? எனவே அதுபோன்ற செயல்களுக்கு அங்கே தீர்வு கிடையாது. அப்படியெனில் ஒரு மனிதன் எப்படி தனது ஜாதகத்தில் வரும் கண்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்வது?


ஈசனின் பெயரை சொன்னால் வாழ்க்கையிலிருக்கும் கண்டங்கள் நீங்கும்

திருநீலகண்டன் என்று சொல்லக்கூடிய ஈசனின் பெயரை சொல்லத் தொடங்கிவிட்டால், வாழ்க்கையில் எப்படிப்பட்ட கண்டமாக இருந்தாலும் மீண்டுவிடலாம். அதனால்தான் ‘இரையை தேடுவதோடு இறையையும் தேடு’ என்பார்கள். ஆனால் பிரச்சினை வரும்போது இறைவனை தேடுவதால் பயன் கிடையாது. ஆபத்துக்காலத்தில் செய்யக்கூடிய எந்தவித பயிற்சியும் பலனை தராது. எப்போதும் இறைவன் பேரை சொல்லிக்கொண்டே இருந்தால், காலம் வரும்போதும், காலன் வரும்போதும் இறைவன் நம்மை காப்பாற்றி கரையேற்றிவிடுவான். உதாரணத்திற்கு, சுக மார்க்கண்டேய மகரிஷியை சொல்லலாம். அவருக்கு ஆயுள் 16 என்று சொன்னாலும், இன்றும் அவர் நீடித்திருக்கிறார். எனவே ஜாதகத்திலிருக்கும் தோஷத்தை கண்டு அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் ஒரு காலத்தில் தோஷம் என்று சொன்னதெல்லாம் இப்போது யோகமாகிவிட்டது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் கடல் கடந்துபோனால் தோஷம் என்றார்கள். ஆனால் இப்போது அப்படி போனால்தான் யோகம் என்கிறார்கள். ஒரு காலத்தில் கடன் வாங்கினால் தோஷம் என்றார்கள். ஆனால் இப்போது கடன் வாங்கினால்தான் வீடுவாங்க முடியும் என்கிறார்கள். மனிதனின் வாழ்வியல் கண்ணோட்டம் மாறிவிட்டது. எனவே ஜாதகத்தில் தோஷம் என்று சொல்லி வருந்தவும் வேண்டாம், யோகம் என்று சொல்லி வருந்தவும் வேண்டாம். ஜாதகத்தில் யோகம் நிறைய இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே மாட்டார்கள். ஏனென்றால் வாய்ப்புகள் நிறைய இருக்கும்போது அதை பயன்படுத்த தவறிவிடுவார்கள். எங்கே வாய்ப்புகள் இல்லையோ, சிரமம் இருக்கிறதோ அவர்கள் முன்னேறிவிடுவார்கள். எனவே தோஷ ஜாதகம் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருங்கள், யோக ஜாதகம் இருந்தால் கவனமுடன் இருங்கள்!

Updated On 27 Aug 2024 8:40 AM GMT
ராணி

ராணி

Next Story