இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்….’ என்று வீதிகள் எங்கும் பஜனைகள் ஒலிக்க…அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் வண்ண வண்ண கோலங்கள் போட்டு… திருப்பாவை பாடி தன் மனதிற்கு பிடித்தவரை கணவனாக கரம்பிடித்த ஆண்டாளையும், திருமாலையும் போற்றி வழிபடும் புண்ணிய மாதம்தான் மார்கழி. புண்ணிய மாதமாக கருதப்பட்டாலும் சுப விசேஷங்கள் நடத்தப்படாத பீடை மாதமாகவும் இந்த மார்கழி மாதம் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இம்மாதம் முழுவதும் இறைவனுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுவதுதான். எனவே இம்மாதத்தில் வீடு புகுதல், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம் நடத்துதல் என்று வீடு சம்பந்தப்பட்ட விசேஷங்களை தவிர்த்துவிட்டு, புது வாகனம் வாங்குதல், வளைகாப்பு நடத்துதல் போன்ற விசேஷங்களை நடத்தலாம். இந்த தமிழ் ஆண்டின் மார்கழி மாதமானது 17.12.2023 தொடங்கி 14.01.2024 நிறைவுபெறுகிறது. புண்ணியம் மற்றும் இறை வழிபாடு நிறைந்த இந்த மார்கழி மாதத்தின் வரலாறு என்ன? சிறப்புகள் என்ன? மார்கழியின் பலன்கள் என்ன? மார்கழியின் அறிவியல் காரணங்கள் என்ன? போன்ற ஸ்வாரசியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

மார்கழியின் வரலாறு

மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என்றால், தேவர்களுக்கு அது வெறும் ஒரு நாள் மட்டுமே. 12 மாதங்களில் முதல் 6 மாதம் தேவர்களுக்கு பகலாகவும், அடுத்த 6 மாதம் தேவர்களுக்கு இரவாகவும் இருக்கிறது. அப்படி தேவர்கள் கண்விழித்து பகவானை வணங்கும் பிரம்ம முகூர்த்தம்தான் நமக்கு இந்த மார்கழியாக அமைந்திருக்கிறது. தேவர்கள் மார்கழியில் அதிகாலை வேளையில் கண்விழித்து இறைவனை வழிபடுவது போல, மனிதர்களாகிய நாமும் தேவர்களைப்போல அதிகாலையில் எழுந்து இறைவனை பிரார்த்திப்பதன் மூலம் 1000 வருடங்களுக்கு இறைவனை வழிபட்டால் கிடைக்கும் புண்ணியமானது இந்த ஒரே மாதத்தில் கிடைக்குமாம்.

புராணங்களின் படி வைணவ சமயத்தை பெரிதும் பரப்பிய பன்னிரு ஆழ்வார்களில் விஷ்ணு சித்தர் என்னும் இயற்பெயர் கொண்ட பெரியாழ்வாரின் ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசி செடியின் கீழ் ஒரு குழந்தை இருந்தது. பெரியாழ்வாருக்கு குழந்தை இல்லாததால் அந்த குழந்தையை தத்தெடுத்து ‘கோதை’ என்னும் பெயர் சூட்டினார். திருமாலின் வைணவ சமயத்தை எங்கும் பரப்பியவர் தனது மகள் கோதைக்கும் திருமாலின் அருமை பெருமைகள் சொல்லி வளர்க்கவே, கோதை திருமாலின் மேல் காதல் கொண்டு திருமாலை தனது கணவனாக எண்ணியே வாழ ஆரம்பித்துவிட்டாள்.


நந்தவனத்தில் துளசி செடியின் கீழ் குழந்தையை கண்டெடுத்து ‘கோதை’ என்னும் பெயர் சூட்டி வளர்த்த பெரியாழ்வார்

இந்த சூழலில், பெரியாழ்வார் நந்தவனத்திலிருந்து பூக்கள் பறித்து மாலை கட்டி தினமும் திருமாலுக்கு அணிவித்துவர, கோதையோ நாம் திருமாலுக்கு ஜோடியாக இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணிப் பார்த்து, பெரியாழ்வார் திருமாலுக்கு கட்டி வைத்திருக்கும் மாலையை தான் அணிந்து பார்த்து மகிழ்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். இதை அறியாத பெரியாழ்வார் கோதை அணிந்து வைக்கும் அந்த மாலையையே திருமாலுக்கு நாள்தோறும் சூடி வந்தார். ஒருநாள் இவ்விஷயத்தை கண்ட பெரியாழ்வார் கோதையை திட்டிவிட்டு புதியதொரு மாலையை கட்டி திருமாலுக்கு போட்டுள்ளார். புதுமாலை அணிந்த அந்நாள் இரவே திருமால் பெரியாழ்வார் கனவில் தோன்றி, ‘எனக்கு கோதை அணிந்த மாலைதான் வேண்டும், வேறு மாலைகளை நான் ஏற்க மாட்டேன்’ என்று கூறி மறைந்துள்ளார். இதனாலேயே கோதையாக விளங்கும் ஆண்டாளை ‘சூடி கொடுத்த சுடர்க்கொடி’ என்கின்றனர். திருமால் பெரியாழ்வாரின் கனவில் கூறியவாறே பெரியாழ்வாரும் கோதை சூடிய மாலையை திருமாலுக்கு சூடி வந்தார்.

திருமாலின் மேல் கொண்ட காதலாலும், பக்தியாலும் கோதையாக விளங்கும் ஆண்டாள், திருமால் குறித்து தமிழ் மொழியில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். திருமால் மேல் காதல் வயப்பட்டு கோதை எழுதிய 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையே மார்கழி மாதத்தில் பல கோயில்களில் பாடப்பட்டு வருகிறது. ஆண்டாள் எழுதிய இத்திருப்பாவையில் மார்கழி மாதத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவது எப்படி? மனிதனாக இருக்கக்கூடிய சாதாரண பெண் இறைவனோடு வாழ்வது எப்படி? கடவுள் மேல் காதல் கொண்டு எப்படி அவரையே கணவனாக அடைவது? என தன்னுடைய காதல் மன்னனை நினைத்து பாடலாக வர்ணித்து எழுதியுள்ளார். ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்….’ என அழகிய வரிகளை எழுதியது போலவே ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி அழகான உடை அணிந்து தலையில் கொண்டை போட்டு பூ வைத்து கையில் கிளி வைத்தவாறு தன்னை அழகுபடுத்திக்கொண்டு தினமும் திருமாலை வணங்கி வந்தார். ஆண்டாளுடன் இருந்த அவளது தோழிகளும் ஆண்டாள் செய்யும் அனைத்தையும் பின்பற்றினர்.


திருமால் மேல் காதல் கொண்ட ஆண்டாள் அவருடன் திருமண கோலத்தில் இருக்கும் காட்சி

ஒரு பக்கம் திருமால் மேல் காதல் அதிகரிக்க அதிகரிக்க கல்யாண வயதினை அடைந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் திருமண வரம் பார்க்க தொடங்கினார். ஆனால் ஆண்டாள், ‘நான் மணந்தால் திருமாலை மட்டும்தான் மணப்பேன்’ என்று உறுதிபட கூற, சிறுவயதில் விளையாட்டாக பேசுகிறாள் என்று நினைத்த பெரியாழ்வார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து எப்படி கடவுளை மனிதனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று குழம்பி கவலை அடைந்தார். கவலைக்கு பதிலளிக்கும் விதமாக திருமால் மீண்டும் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி கோதையை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து திருவரங்கத்திற்கு அழைத்து வரச்சொல்லி மறைந்தார். திருமால் கூறியது போலவே பெரியாழ்வாரும் கோதையை அழகான மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சென்றார். திருமாலின் ஆச்சரியம் அளிக்கும் செயலாக ஆண்டாள் அக்கோயிலின் கருவறைக்குள் சென்றவுடன் அங்கு வீற்றிருந்த அரங்கநாதருடன் ஒன்று சேர்ந்துவிட்டதாக ஆண்டாளின் காதல் வரலாறு கூறுகிறது.

மார்கழியில் அதிகாலையில் கோலம் போடுவது ஏன்?

பொதுவாகவே வீதியில் கோலம் போடுவது லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைத்து வருவதற்கு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இப்பழக்கத்தை காலங்காலமாக பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், இந்த கோலம் போடுவதிலும் மார்கழி மாதத்தில் மட்டும் வழக்கத்தை காட்டிலும் அதிகாலை எழுந்து கோலம் போடுவதால், மார்கழி பனிக் காற்று நம்மேல் பட்டு அந்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்போம் என்பதால்தான். இது தவிர நாம் அறியாமல் மிதிக்கும் எறும்புகளால் பெண்களுக்கு திருமணத் தடை ஏற்படுமாம். அந்த தடை நீங்க நாம் அரிசி மாவில் கோலம் போடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைத்து, அந்த தோஷமானது நீங்குவதாக நம்பிக்கை. அதேபோல கன்னிப்பெண்கள் காலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு கோலத்தின் நடுவில் பரங்கி பூ வைத்து வீட்டு வாசலை அலங்கரிப்பதன் மூலம், அவ்வழியில் செல்பவர்கள் இவ்வீட்டில் ஒரு கன்னி பெண் இருக்கிறாள் என்பதை அறிவார்கள் என்பதற்காகவும், மார்கழியில் வீதிகளில் கன்னிப்பெண்களால் கோலம் போடப்படுகிறது.


பெண்கள் கோலமிடும் காட்சி

மார்கழி சிறப்புகள்

ஆகாத மாதம் அல்லது பீடை மாதமாக கருதப்படும் இந்த மாதத்தில்தான் திருமாலின் வைகுண்ட ஏகாதசி, ஹனுமான் ஜெயந்தி, சிவனின் ஆருத்ரா தரிசனம், போகி என பல இறை விசேஷங்கள் வருகின்றன. இந்த விசேஷங்கள் தவிர தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது உண்டான விஷத்தை சிவபெருமான் உண்டு மக்களை காப்பாற்றியது, மகாபாரத யுத்தம் நடந்தது, திரேதா யுகத்தில் சீதா தேவியும், துவாபர யுகத்தில் ராதை, கோபியர்கள் மற்றும் ருக்குமணி கண்ணனை திருமணம் செய்ய காத்யாயினி தேவியை விரதம் இருந்து வழிபட்டதும் இந்த மார்கழி மாதத்தில்தான். முக்கியமாக இந்திரன் கோகுலத்தில் உண்டாக்கிய பெரும் மழையின்போது, கிருஷ்ணன் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காப்பாற்றியதும் இறை மாதமாக கருதப்படும் இந்த மாதத்தில் தான்.

மார்கழி பலன்கள்

பீடை மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் பலர் விசேஷங்கள் நடத்த முன்வராவிட்டாலும் தேவர்கள் கண் விழிக்கும் மாதமாக கருதப்படும் இம்மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 - 6 மணிக்குள் இறைவனை வேண்டுவது அத்தகு சிறப்பாகும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் வீட்டின் தலைவாசல் பகுதியில் பஞ்சு திரி மற்றும் விளக்கெண்ணெய் ஊற்றி 2 தீபங்களை ஏற்றி, பின்னர் பூஜையறையில் விளக்கேற்றி வீடு முழுவதும் சாம்பிராணி வாசனை காட்டி இறைவனை மனதார பிரார்த்தித்து வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும். அதேபோல இதுவரை கோயிலுக்கு செல்லவில்லை அல்லது இறைவனை வழிபடவில்லை என்றாலும் இம்மாதத்தில் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று அந்நாளின் முதல் அபிஷேகம் நடக்கும்போது குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அபிஷேக பொருளை வாங்கி கொடுப்பதன் மூலம் ஒரு வருடத்திற்கான பலன் ஒரே நாளில் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்ததாக அன்னதானம் அல்லது ஏதேனும் ஒரு பிரசாதத்தை, முதல் பூஜை நடந்த பின்னர் தானமாக வழங்குவதன் மூலம் பரம்பரைக்கே அண்ண குறைவு வராது என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக தனுர் மாதமாக கருதப்படும் இம்மாதத்தில் தனுர் பூஜையில் கலந்து கொள்வது அத்தகு சிறப்பாகும். மேலும் இம்மாதம் நம் வேண்டுதல்களின் முயற்சியின் மாதமாகவும் இந்த முயற்சி நிச்சயம் மார்கழியின் அடுத்த மாதமான தை மாதத்தில் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது. இதனாலேயே திருமண வரன்கள் மார்கழியில் பார்க்கப்பட்டு தை வந்தவுடன் பலரும் கல்யாணம் செய்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, நல்லெண்ணங்களை நிறைத்து செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபட வைக்கும் புண்ணிய மாதமாகவும் மார்கழி விளங்குகிறது.


மார்கழி இறை வழிபாடு மற்றும் பிரசாதம்

மார்கழியின் அறிவியல் காரணங்கள்

ஆன்மிக ரீதியாக மார்கழியில் அதிகாலையில் எழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு இணையாக அறிவியல் ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. இந்த மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த படலத்திலிருந்து வீசும் கதிர்களிலிருந்து தூய ஆக்ஸிஜன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தூய ஆக்ஸிஜனை சுவாசிப்பதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கான ஆக்ஸிஜன் இந்த மார்கழி பனி மாதத்தில் கிடைக்கிறது. மேலும் மாசற்ற தூய்மை நிறைந்த இந்த பனியினால் பெண்களின் முகம் பொலிவு பெறும். நாடிகள் புத்துணர்ச்சி பெற்று மிக புத்துணர்ச்சியாக செயல்படுவார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளித்து பனிக் காற்றை சுவாசிக்க சொல்கிறார்கள்.

வெறும் இந்த பனிக் காற்றை சுவாசிப்பதற்காக யாரும் தூக்கத்திலிருந்து எழ மாட்டார்கள் என்பதாலேயே கோலம் போடுவதற்கும், பஜனை செய்வதற்கும், இறைவனை வழிபடுவதற்கும் என்று பல பணிகளை காரணமாக கொண்டு அதிகாலையில் எழ சொல்கின்றனர். குறிப்பாக கோலம் போடுவதற்கு முன்பாக, சாணம் தெளிப்பது அல்லது கோலம் போட்ட பிறகு கோலத்தின் நடுவில் சாணத்தை விநாயகராக பிடித்து வைப்பது வழக்கம். இது லட்சுமி கடாட்சமாக ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டாலும் தெய்வத்தின் ரூபமாக கருதப்படும் கோமாதாவின் சாணம் கிருமிகளை அழிக்கும் மிக சிறந்த கிருமி நாசினியாகும். எனவே வீட்டை எந்தொரு பாக்டீரியாக்களும், கிருமிகளும் தாக்காமல் இருக்க வாசலில் சாணம் தெளிக்கப்படுகிறது.


கோலம் போடுவதற்கு முன்பாக சாணம் தெளிப்பது மற்றும் கோலம் போட்ட பிறகு சாணத்தை பிடித்து நடுவில் பூ வைப்பது

கிராமங்கள் மற்றும் நகரங்களின் சில பகுதிகளில் வாசலில் சாணத்தை தெளிப்பதோடு சாணத்தை உருண்டையாக அல்லது விநாயகராக செய்து கோலத்தின் நடுவில் வைத்து அச்சாணத்தின் மேல் ஒரு பூவையும் வைப்பர். அது கோலத்தை அழகுபடுத்துவதற்கென்று சொல்லப்பட்டாலும் கோலத்தின் நடுவில் பூ வைப்பதன் மூலம் அப்பூ தேனீக்களுக்கு உணவாக அமைந்திருக்கிறது. மேலும் அது சாணத்தின் மேல் இருப்பதால் தேனீக்களின் விஷத்தன்மையும் அதில் அழிந்துவிடுகிறது.

இதுபோன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு ஆன்மிக காரணங்கள் அல்லது அறிவியல் காரணங்கள் மறைந்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, நம் பழக்க வழக்கங்களை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆன்மிகமாக, அறிவியலாக அதிக பலன் தரும் இந்த மார்கழி வழிபாட்டை சரியாக பின்பற்றி முழுப்பலனை அடைவோம்.

Updated On 15 Jan 2024 11:58 PM IST
ராணி

ராணி

Next Story