அறிவியல் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், விஞ்ஞானிகளுக்கே சவால்விடும் மர்மங்களும், ஆச்சர்யங்களும் இன்றும் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பல மர்மங்கள் சூழ்ந்த கோயில்தான் ஒடிஷா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகன்நாதர் ஆலயம். இன்றும் பகவான் கிருஷ்ணரின் இதயம் துடிக்கும் இடமாக பூரி ஜெகன்நாதர் கோயில் நம்பப்படுகிறது. கிருஷ்ணரின் இதயத்தை பாம்புகள் பாதுகாப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோயிலின் "ரத்ன பந்தர்" என்று அழைக்கப்படும் "பொக்கிஷ அறை" பல ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்துவந்த நிலையில், பல பூஜைகள் செய்யப்பட்டு, கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. அந்த பொக்கிஷ அறையில் என்னதான் இருக்கிறது? உண்மையாகவே கிருஷ்ணரின் இதயத்தை பாம்புகள் பாதுகாக்கின்றனவா என்பது குறித்தெல்லாம் விரிவாக பார்க்கலாம்...
சகோதரிகள் பாலபத்ரா மற்றும் சுபத்ரா உடன் பூரி ஜெகன்நாதர்
கிருஷ்ணரின் உறைவிடம்
பகவான் கிருஷ்ணரின் வடிவமான ஜெகன்நாதருக்கு பூரியில் புனித உறைவிடம் அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பகவான் தனது உடன்பிறந்த சகோதரிகளான பாலபத்ரா மற்றும் சுபத்ராவுடன் பிரார்த்தனை செய்யப்படுகிறார்.
கோயில் வரலாறு
பூரி ஜெகன்நாதர் கோயில், 949 முதல் 959 வரையிலான காலகட்டத்தில் ஜஜாதி கேசரி மன்னரால் கட்டப்பட்டது. 1078 முதல் 1147 வரையிலான காலக்கட்டத்தில் கங்க வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் அனந்த வர்மன் சோடகங்க தேவரால் புனரமைக்கப்பட்டது. 1190 முதல் 1198 வரையிலான காலகட்டத்தில் அனங்கபீம தேவாவால் கோயில் முழுமையாக கட்டப்பட்டது. எனவே தற்போதைய கோயில் அமைப்பு சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. மேலும் இக்கோயில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
பூரி ஜெகன்நாதர் கோயிலின் அழகிய கோபுர காட்சி
கோயிலின் கட்டிடக்கலை
கோயிலின் கட்டிடக்கலை ஒரிசான் மற்றும் கலிங்க பாணிகளின் இணக்கமான கலவையாக காட்சி தருகிறது. உயர்ந்த கோபுரங்கள், சிக்கலான வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் பரந்த வளாகத்துடன் கோயில் ரம்யமாக காட்சியளிக்கிறது. கோயில் வளாகத்தில் சிறிய கோயில்கள், முற்றங்கள் மற்றும் அழகான தோட்டங்கள் உள்ளன. பிரதான கோயில், இந்து புராணங்களில் இருந்து பல்வேறு அத்தியாயங்களை சித்தரிக்கும் வகையில் நேர்த்தியான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் இதயம் துடிக்கிறதா?
கோயிலுடன் தொடர்புடைய பொதுவான புராண நம்பிக்கை என்னவென்றால், கிருஷ்ணரின் இதயம் இக்கோயிலின் சுவர்களுக்குள் இன்னும் துடிக்கிறது. இது பக்தர்கள் நம்பும் நம்பிக்கையாக இருப்பதுடன், உலகம் முழுவதிலுமிருந்து மக்களையும் ஈர்க்கிறது.
இந்து புராணங்களில் இருந்து பல்வேறு அத்தியாயங்களை சித்தரிக்கும் வகையிலான சிற்பங்கள்
உயிர் உள்ள சிலைகள்?
கோயிலின் முதன்மை தெய்வங்களான ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் சிலைகள் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது! இந்த சிலைகள் மர வடிவில் வழிபடப்படுகின்றன. சிலைகள் அவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாமல், அவற்றை உயிர்ப்பிக்கும் கைவினைத் திறனுக்காகவும் போற்றப்படுகின்றன.
பூரி ரத யாத்திரை
பூரி ஜெகன்நாதர் கோயிலில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று ரத யாத்திரை. ரத யாத்திரையின்போது, ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா ஆகிய தெய்வங்களின் சிலைகள், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டு பக்தர்களால் கோயில் பகுதியில் உள்ள பரந்த வீதிகள் வழியாக இழுத்து செல்லப்படுகின்றன. இந்த ரத யாத்திரையை காண லட்சோப லட்சம் மக்கள், உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் பூரியில் குவிகின்றனர்.
பகவான் கிருஷ்ணரின் இதயம் கோயிலின் சுவர்களுக்குள் இன்னும் துடிப்பதாக மக்கள் நம்பிக்கை
மர்மம் நிறைந்த பொக்கிஷ அறை
பூரி ஜெகன்நாதர் கோயிலுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல மன்னர்கள், வைர, தங்க நகைகளையும், விலை உயர்ந்த கற்களையும் தானமாகக் கொடுத்துள்ளனர். பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலுக்குள் அமைந்துள்ள `ரத்ன பந்தர்’ என்று சொல்லப்படும் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த பொக்கிஷ அறை, பிடார் பந்தர்(உள் அறை), பாஹர் பந்தர்(வெளி அறை) என இரண்டு அறைகளைக் கொண்டது. மிகவும் விலை உயர்ந்த நகைகள் பொக்கிஷ அறையின் உள் அறையில் வைக்கப்படுகின்றன. ரத யாத்திரை மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின்போது பயன்படுத்தப்படும் நகைகள் மட்டுமே பொக்கிஷ அறையின் வெளி அறையில் வைக்கப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொக்கிஷ அறையைத் திறந்து அதில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நகைகள் கணக்கெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறையை முழுமையாக திறக்க ஒடிஷாவில் எந்த அரசும் முயற்சி எடுக்கவில்லை. அது ஏன் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பொக்கிஷ அறைத் தொடர்பான பல புராணக் கதைகளும் மூடநம்பிக்கைகளும் நிலவியதே இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அறைக்குள் நகைகளை பாதுகாக்க விஷப்பாம்புகள் இருப்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.
உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின் ரத யாத்திரை காட்சி
அறையில் உள்ள பொக்கிஷ ஆபரணங்கள்
பொக்கிஷ அறையில் மொத்தம் 747 வகையான நகைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில், 12,838 தோலா(1,49,740 கிராம்) தங்க ஆபரணங்களும், 22,153 தோலா(2,58,388 கிராம்) வெள்ளி ஆபரணங்களும், அத்துடன் வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றனவாம்.
அறையை திறந்தால் ஆட்சிக்கு ஆபத்தா?
கடைசியாக 1978-ம் ஆண்டு பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. அறை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஒடிஷாவில் அப்போதைய ஜனதா கட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பல தலைவர்கள் பொக்கிஷ அறைத் திறக்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்று பேசத் தொடங்கினர். இதனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே, பொக்கிஷ அறையைத் திறக்க தயக்கம் காட்டியே இருந்துள்ளனர்.
கோயிலின் பொக்கிஷ அறையில் 747 வகையான நகைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன!
1978-க்குப் பிறகு, இந்த பொக்கிஷ அறை டிசம்பர் 1982 மற்றும் ஜூலை 1985 ஆண்டுகளில் திறக்கப்பட்டிருந்தாலும், அப்போது ஆபரணங்கள் மதிப்பிடப்படவில்லை. ஒடிஷா உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2018-ஆம் ஆண்டில், பொக்கிஷ அறையின் கையிருப்புகளைக் கணக்கிட மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழுவினர் பொக்கிஷ அறையின் உள்ளே சென்று, உள் அறையை திறக்க முயற்சித்த போது, பூட்டை திறக்க முடியாமல் திணறினர். எனவே வெளி அறை மட்டுமே அப்போது திறக்கப்பட்டது.
46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட பொக்கிஷ அறை
பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் உள்பகுதி 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஒடிஷா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ரத் உள்ளிட்டோர், பல்வேறு கட்ட பூஜைகளை செய்த பின்னர் கோயிலுக்குள் நுழைந்து பொக்கிஷ அறையின் உள்பகுதிக்கு சென்றனர். முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிப்போர், சிறப்பு அதிரடிப் படையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் இந்தப் பணிகள் அனைத்தும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பொக்கிஷ அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
பொக்கிஷ அறையை விஷ பாம்புகள் பாதுகாப்பதாக நம்பும் பக்தர்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக இந்த முறை நகைகளை மதிப்பிடும் பணி அதிக நேரம் எடுக்காது என்றாலும், இந்த செயல்முறையை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை சொல்வது கடினம் என்று தெரிவிக்கின்றனர். பொக்கிஷ அறை நகைகளை மதிப்பிடும் பணிக்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் நீதிபதி விஸ்வநாத் ரத், அனைத்து நகைகளையும் கணக்கிட்டு மதிப்பீடு செய்து அவற்றின் தரநிலை முடிவு செய்யப்படும் என்றும், அதன்பின் டிஜிட்டல் முறையில் பட்டியல் உருவாக்கப்பட்டு 1978ஆம் ஆண்டு பதிவான நகைகளின் பட்டியலுடன் ஒப்பிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
பாம்புகள் இருந்ததா?
அதேநேரம், பொக்கிஷ அறையில் பாம்புகள் ஏதும் இல்லை என்று கணக்கீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆபரணங்களை மதிப்பிட்டு அவற்றை டிஜிட்டலில் பதிவேற்றம் செய்துவரும் குழுவினர், மொத்த பணியையும் முடித்துவிட்டு வெளியே வந்தால்தான் கோயில் குறித்த முழு மர்மமும் விலகும்.