தமிழ் மாதமான கார்த்திகை என்பது விசேஷங்கள் பொருந்திய மாதங்களுள் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்நாளில் பக்தர்கள், கோயில்கள் மற்றும் அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டால், நமது வாழ்வில் இருக்கும் இருளானது விலகி ஒளி பெருகும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று திருக்கார்த்திகை தீபமானது விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கென்று ஒரு சில முறையும், வழக்கமும் இருக்கிறது. அதுமட்டுமின்றி அதற்கான பலன்களும் உள்ளன. அதாவது கிழக்கு நோக்கி விளக்கை ஏற்றினால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. அதேபோல மேற்கு திசை நோக்கி விளக்கை ஏற்றினால் நமக்கு இருக்கும் கடன் தொல்லையானது நீங்கும். வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் திருமணத் தடை இருப்பவர்களுக்கு தடை நீங்கி திருமணம் கை கூடும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவதை நாம் எப்பொழுதும் தவிர்க்க வேண்டும்.
கார்த்திகை தீப முகங்களும் அதன் பலன்களும்:
- ஒரு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
- இரு முகம் கொண்ட விளக்கின் பயனானது குடும்ப ஒற்றுமைக்காக ஏற்றப்படுவதாகும்.
- மூன்று முகம் கொண்ட விளக்கு என்பது புத்திர தோஷத்திலிருந்து விடுபட ஏற்றப்படுகிறது.
- நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் வீட்டில் உள்ள வறுமை நீங்கி செல்வமானது பெருகுமாம்.
- ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் சகல நன்மைகளும் உண்டாகுமாம்.
வீட்டில் விளக்கேற்ற உகந்த நேரம் எது?
கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். நாமும் அன்றைய நாளில் மாலை 5 மணி முதல் 5:30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் வழிபட்ட பின், வீடு முழுவதும் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும். பின் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றகூடிய அதே நேரத்தில் வீட்டின் வாசல் மற்றும் பிற இடங்களில் தீபங்களை ஏற்றுவது நல்லது.