நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம்.

மாதா சந்திரகாண்டாவுக்கு உரிய பாடல் :

அபிராமி அந்தாதி (பாடல் 24)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

சந்திரகாண்டா பொருள் :

யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. காண்டா என்றால் கோவில் மணி என்று பொருள். அன்னை சந்திரகாண்டா மூன்றாம் பிறையை அணிகலனாக அணிந்துள்ளார்; அது மணி போன்ற வடிவத்தில் உள்ளது. எனவே சந்திரகாண்டா என்ற சொல்லுக்கு பிறை அணிந்த தேவி என்று பொருள்படும். இது எதை குறிக்கிறதென்றால், சரியான நேரத்தில் மதி எனும் அறிவு, கடிகார நினைவு தரும் ஒரு மணி ஓசையை போல் செயல்பட்டு நமக்கு விழிப்புணர்வு தந்தால் வாழ்வில் வெற்றி வந்தடையும்.

அம்மா சந்திரகாண்டா யார்?

அம்மா மலைமகள், மூன்றாம் நாள் நவராத்திரி அன்று அம்மா சந்திரகாண்டா எனும் நிலையில் அருளுகிறாள். சிவசக்தி திருமணம் நடைபெற துவங்குகிறது. அங்கே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பூத கணங்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் என பெரும் கூட்டம். இவர்கள் அனைவரையும் பெரும்திரள் என பார்த்து அன்னை பார்வதியின் தாயார் மைனா, மயங்கி விழுந்து விடுகிறார். தனது தாயை உயிர்ப்பிக்கவும், சிவபெருமானின் அருள் நிலையை அவர்களுக்கு உணர்த்தவும் அம்மா பார்வதி சந்திரகாண்டா வடிவத்தில் அருளுகிறார்.

மாதா சந்திரகாண்டா அன்னை பார்வதியின் திருமண வடிவமாகும். அவளுக்கு பத்து கைகள் உள்ளன. அவற்றில் திரிசூலம், கதை, வில், அம்பு, வாள், தாமரை, மணி, கும்பம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மீதம் உள்ள இரு கைகளில் அபய வரத முத்திரை காட்டி, கவலைப்படாதே அம்மா இருக்கிறேன் என நமக்கு உணர்த்துகிறாள். துணிச்சல் மற்றும் தைரியத்தைக் குறிக்கும் வகையில் புலி மீது சவாரி செய்கிறாள். அரை நிலவு அவரது நெற்றியில் அணிகலன். மூன்றாவது கண் அவரது நெற்றியின் நடுவில் ஞானத்தை தருகிறது. தங்க நிறத்தை கொண்டவர் நம் அன்னை.

மணிபூரக சக்கரத்தை ஆட்சி செய்யும் அம்மா சந்திரகாண்டா, ஆரஞ்சு ஆடைகளை அணிந்து இருக்கிறாள். அவளுடைய பக்தர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வணங்குகிறார்கள். பதட்டமான சூழலையும் அமைதியாக கையாளும் திறனை சுவாதிஷ்டான சக்கரம் நமக்கு தருகிறது. மணிப்புரா சக்கரம், நம் வழியில் வரும் அனைத்து எண்ண சிதறல்களையும் தவிர்த்து எண்ணம் ஒரு செயலில் ஒன்றுப்பட உதவுகிறது. அமைதியாக ஒன்றுப்பட்ட நோக்கத்துடன் எந்தவொரு செயலை செய்தாலும் நீங்கள் விரும்பிய இலக்கை அடைவீர்கள் என்பதனை இவை வலியுறுத்துகின்றன.

சந்திரகாண்டா வழிபாட்டு முறை

நம் வசதிக்கு ஏற்ப வழிபாடு செய்தாலே கட்டாயம் நல்ல பலன் உண்டு. அம்மா பார்வதிக்கு அன்பு மட்டுமே முக்கியம். அவரின் திருமண வடிவத்தை மனதார வணங்கினாலே மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மா சந்திரகாண்டாவை வணங்கும்போது மணி ஓசை ஒலித்தல் சிறப்பு. மணியின் சத்தத்தால், அன்னை சந்திரகாண்டா தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களைப் பொழிகிறார் என்பது நம்பிக்கை. முடிந்தால், பூக்கள், சிவப்பு ஆப்பிள் மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்புகளை, நவராத்திரி பூஜைக்காக வீட்டிற்கு வருவோருக்கு வழங்கலாம். அழகு, வசீகரம் மற்றும் கருணை கொண்ட அம்மா சந்திரகாண்டா பதம் பணிந்து அருளை பெறுவோம்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Updated On 5 Oct 2024 1:58 PM IST
ராணி

ராணி

Next Story