
நவராத்திரி தொடர்பான நமது முந்தைய பதிவில், நவராத்திரியின் முதல் நாளில் வழிபடப்படும் சைலபுத்ரி அன்னையைப்பற்றி பார்த்தோம். நவராத்திரியின் இரண்டாம் நாள் கொண்டாட்டங்களைத் தொடரும்போது, துர்க்கா தேவியின் இரண்டாவது வடிவமான பிரம்மச்சாரிணியை வணங்குகிறோம். அந்தவகையில் மாதா பிரம்மச்சாரிணி குறித்து இன்று பார்ப்போம்.
மாதா பிரம்மச்சாரிணிக்கு உரிய பாடல் :
அபிராமி அந்தாதி (பாடல் 40)
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
பிரம்மச்சாரிணி (வாணுதல் கண்ணி) யார்?
பிரம்மம் எனும் அனைத்தும் ஆகிய தன்மையை உணர கடும் தவம் புரிந்து அடையும் நிலைக்கு பிரம்மச்சாரிணி என்று சொல்லப்படுகிறது. பிரம்மா என்ற சொல் கடினத்தன்மையையும், சாரிணி என்ற சொல் இறைவனின் பெண் பக்தியையும் குறிக்கிறது. எனவே பிரம்மச்சாரிணி என்பது, கடினமான தவச்செயலின் சுருக்கமாக கூறப்படுகிறது. சைலபுத்ரி என்ற மலைமகள், தவத்தின் தன்மையினால் பிரம்மச்சாரிணி என்ற வாணுதல் கண்ணி ஆனதை நவராத்திரி இரண்டாம் நாளில் கொண்டாடுகிறோம்.
இமயமலையில் பிறந்த பார்வதி என்று பெயரிடப்பட்ட அன்னை தனது குழந்தைப் பருவத்தை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் கருணை மிகுந்த வகையில் வாழ்ந்து வந்தார். அவரது கடந்த கால நினைவுகள் எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. ஒரு நாள், இமயமலை வழியாகச் சென்றபோது அன்னை பார்வதியை தரிசனம் செய்து வணங்கினார் நாரத முனிவர். இதைப்பார்த்து இமயமலையும், அவரது மனைவியும் ஆச்சரியப்பட்டனர். உடனே நாரத முனிவர், இதுதான் அன்னை சதி என்றும், அன்னை பார்வதியாக மறுபிறவி எடுத்ததாகவும் உணர்த்தினார். இதைக்கேட்டதும், அவரது கடந்தகால வாழ்க்கையின் நினைவுகள் அனைத்தும் அன்னை பார்வதிக்கு ஏற்பட துவங்கியது. அன்னை பார்வதி சிவ பஞ்சாட்சர மகிமையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். அதனை அறிந்த நாரதர், அன்னைக்கு தவத்திற்கு தேவையான சூழலை உண்டாக்கித்தர அவளது தந்தை இமவானிடம் கூற, அவ்வாறே செய்யப்பட்டது.
இதையடுத்து பிரம்மச்சாரிணி காட்டில் வெறுங்காலுடன் நடந்து சென்றார். சகல வசதிகளையும் தவிர்த்து உலக நன்மை ஏற்படும் வகையில் கானகத்தின் நடுவினில் மாதா பிரம்மச்சாரிணி, சிவ நாம தியானத்தை தொடங்கினார். மேலும், பல ஆண்டுகள் பழங்களையும், மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளையும் மட்டுமே உண்டு மிகக் கடுமையான விரதம் மேற்கொண்டார். விரதத்தின் இறுதி நாட்களில் நீரை மட்டுமே பருகினார். பிரம்மச்சாரிணியின் உடல் மெலிந்தாலும் மனம் சலிக்காமல் ஆத்ம பலத்தை துணையாக கொண்டு, குறிக்கோள் மீது குறியாக இருப்பது கண்டு தேவர்களும் வியந்தனர். இதையடுத்து அனைத்து தேவகணங்களும் ஈசன் முன் தோன்றி உலக நன்மைக்காக மீண்டும் சிவசக்தி வடிவமாக அருள வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்தநிலையில், துறவி வாழ்க்கை மீதான பிரம்மச்சாரிணியின் ஈடுபாடு சிவபெருமானை அவரிடம் ஈர்த்தது. சிவசக்தி திருமணம் நடைபெற்றது. இதன்மூலம் உணர்த்தப்படுவது, அருளை தேடினால் பொருளும் கிடைக்கும் என்பதே ஆகும்.
மாதா பிரம்மச்சாரிணி குறித்த தகவல்கள்
சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்புடையர் மாதா பிரம்மச்சாரிணி. நவராத்திரி முதல் நாள் வழிபாட்டின் பயனாக மூலாதார சக்கரம் விழிப்புணர்வு பெற்றிருக்கும். அது நம் அனைவருக்கும் உலகியில் சார்ந்த பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை தர துவங்கும். அதற்கு அடுத்த நிலையிலான இரண்டாம் நாள் வழிபாடு, நம்மை சூழ்ந்துள்ள சூழலை நமக்கு சாதகமாக கட்டுப்படுத்தவும், அமைதி நிலவவும், தூய்மையான எண்ணங்கள் ஏற்படவும், தன்னம்பிக்கை பெருகவும் உலகின் சோதனைகளை எதிர்கொள்ளும்போது நமது சிந்தனையை சீர் அமைக்கவும் உதவுகிறது.
அம்மா பிரம்மச்சாரிணி வெள்ளை ஆடைகளை அணிந்திருப்பாள். வலது கையில் மணிகள் கொண்ட ஜெபமாலையையும், இடது கையில் தண்ணீர் பாத்திரத்தையும் வைத்திருப்பாள். வெள்ளை நிறம், மூலாதார சக்கரத்தின் சிவப்பு நிறத்துடன் கலந்து ஆரஞ்சு நிறத்தை உருவாக்குகிறது.
பிரம்மச்சாரிணி வழிபாடு :
அம்மா பிரம்மச்சாரிணிக்கு தாமரை மற்றும் செம்பருத்தி மலர்களை போட்டு, வெல்லம் மற்றும் பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபடலாம். எதுவுமே முடியாதவர்கள், தங்களால் முடிந்ததை செய்து எளிமையாக வழிபட்டாலும் மாதா பிரம்மச்சாரிணி இனிமையான பலனை தருவாள். கடுமையான தவத்திற்கு உதாரணமான பிரம்மச்சாரிணியை இந்நன்னாளில் மனதார வேண்டி, இலக்கை நோக்கி இறை நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், நாம் விரும்பிய வகையில் வெற்றியை பெறலாம்.
- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்
