மஹிஷாசுரனை வதம் செய்ய ஒரு சக்தி மட்டும் போதாது என்ற காரணத்தினால் முப்பெரும் தேவிகளும் தங்களின் சக்திகளை ஒன்று திரட்டி, மஹிஷன் மட்டுமின்றி மற்ற அசுர கூட்டங்களையும் அழித்து வெற்றிகொண்டாட்டம் நடத்தியதே நவராத்திரி. துர்க்கா தேவி 9 வடிவங்களாக நமக்கு அருள்புரிவதே நவதுர்க்கை ரூபங்கள். அந்த வகையில் நவராத்திரியின் முதல் நாளில் வழிபடவேண்டிய மாதா சைலபுத்ரி குறித்து இன்று பார்ப்போம்.

மலை மகளான சைலபுத்ரிக்கு உரிய பாடல் :

அபிராமி அந்தாதி (பாடல் 93)

நகையே இது, இந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு,

முகையே முகிழ்முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த

வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,

மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

யார் இந்த சைலபுத்ரி?

முதல் சக்கரமான மூலதாரமாக திகழும் அம்மா சைலபுத்ரி இமயமலையின் மகள் ஆவார். சைலம் என்றால் மலை என பொருள். புத்ரி என்றால் மகள். சைலபுத்ரி என்ற சொல்லுக்கு சரியான தமிழ் வார்த்தை என்றால் பார்வதி தேவிதான்.

முற்பிறப்பில் தட்ச பிரஜாபதிக்கு சதி எனும் பெயரில் பராசக்தி மகளாக பிறந்தாள். பராசக்தி தனது பெற்றோரின் விருப்பம் பெற்றே சிவனை திருமணம் செய்திருந்தாலும், தந்தை தட்ச பிரஜாபதிக்கு சிறிது மனசங்கடம் இருந்தது. இந்தநிலையில், சிவபெருமானை மணந்து அவருடன் மலைகளுக்கு குடிபெயர்ந்தார் பராசக்தி. சிறிது காலத்திற்குப் பிறகு அவரது தந்தை தட்ச பிரஜாபதி ஒரு யாகத்தை ஏற்பாடு செய்தார். சிவபெருமானை தவிர அனைத்து முனிவர்களையும், தெய்வங்களையும் யாகத்திற்கு அழைத்தார் தட்சன். தன் கணவரை யாகத்திற்கு அழைக்கவில்லை என்று தெரிந்தும் அன்னை பராசக்தி, தன் பெற்றோர் மீது இருந்த பாசத்தால், சிவபெருமான் தடுத்தும் அந்த யாகத்திற்கு சென்றார். எனினும் தட்சன், அன்னை பராசக்தியின் எதிரிலேயே சிவபெருமானை அவமதித்தார். இச்சம்பவம் திருப்புமுனையாக அமைந்தது. சக்தி, தனது உடலைவிட்டு வெளியேறிய நிலையில், தீயில் அன்னையின் தேகம் மறைந்துவிட்டது.

அம்மா சக்தியின் கருணை மற்றும் செயல்கள் நம் கணக்கீட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. காலம், இடம், காரணம் என மூன்றையும் கடந்து செயல்படுபவள் நாராயணி. இந்நிகழ்வுக்கு பிறகு பார்வதி தேவி, உலக நன்மை கருதி இமவான் எனும் மலை அரசனுக்கு மகளாக மீண்டும் அவதாரம் செய்ய கருணை கொண்டாள். அந்த அவதாரமே சைலபுத்ரி.

சைலபுத்ரி பற்றிய தகவல்கள்

மலைமகள் எனும் சைலபுத்ரி, மூலாதார சக்கரத்தை தூண்டி தன்னை போற்றுபவர்களின் ஆன்மீக வளர்ச்சியின் அடித்தளத்தை உருவாக்குகிறாள். காளை வாகனத்தின் மீது அமர்ந்து அருளாட்சி செய்யும் அன்னை, சிவப்பு ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறாள். சிவப்பு என்பது மூலாதார சக்கரத்தின் நிறமாகும். அன்னை சைலபுத்ரி ஒரு கையில் திரிசூலத்தையும், மற்றொரு கையில் தாமரையையும் வைத்திருக்கிறாள். திரிசூலம் என்பது அறிவு, செல்வம், சக்தி ஆகிய மூன்றைக் குறிக்கிறது. தாமரை என்பது தூய்மை, அமைதி, இரக்கம், செல்வம், தீமையிலிருந்து விடுதலை ஆகியவற்றின் அடையாளமாகும். அதனால்தான் தாமரை எப்போதும் சேற்று நீரில் மலர்கிறது. அது முளைத்து, அனைத்து தீமைகளிலிருந்தும் விலகி அருளும் தன்மை கொண்டது. நம் மூலதார சக்கரமும் நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மூலம் குறிப்பிடப்படுகிறது.

சைலபுத்ரியை வழிபடும் முறை :

அன்னைக்கு வெள்ளை மலர்கள் மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்புகளை படைத்தல் சிறப்பு. சந்தன அபிஷேகம் மேலும் சிறப்பை தரும். நவராத்திரி முதல் நாள் காலையோ, மாலையோ உங்களால் இயன்ற அளவு அம்மா சைலபுத்ரி எனும் மலைமகளை சில நிமிடங்கள் நினைத்துக் கொண்டாலே வாழ்வில் செல்வம் மலைபோல் பெருகும்; துன்பம் பனிபோல் உருகும் என்பது பலரின் அனுபவம்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Updated On 4 Oct 2024 8:59 AM GMT
ராணி

ராணி

Next Story