ஆந்திர மாநிலம் லேபக்ஷி என்னும் கிராமத்தில் உள்ள ஒரு பழங்கால கோயில், கட்டிட கலைகளுக்கு மிகவும் பிரபலமானது. கோயிலில் உள்ள கலைகள், காண்போரை வியக்க வைக்கின்றன. அதே நேரம் அதில் ஒரு விஷயம் மட்டும் எல்லோருக்கும் மர்மமாகவே இருக்கிறது. அந்த விஷயம் எப்படி சாத்தியம் என யாருக்கும் தெரியவில்லை. கோயிலில் உள்ள சுமார் 70 தூண்களில், ஒன்றே ஒன்று மட்டும் தனியாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகளையும் வியக்கவைக்கும் இது எப்படி சாத்தியம்?
சிவனின் சடாமுடியிலிருந்து பிறந்த வீரபத்திரரின் ஆலயம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லேபக்ஷி என்ற பகுதியில் ஆமை வடிவிலான கூர்ம மலை ஒன்று உள்ளது. இந்த மலையின் மீது, சிவனின் சடாமுடியிலிருந்து பிறந்த வீரபத்திரருக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் பிரம்மாண்ட நந்தியும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் சிலையும் உலகப்புகழ் பெற்றவை. நம் முன்னோர்களின் சிற்பக்கலை, கட்டிடக்கலை மற்றும் ஓவியக்கலையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இவ்வாலயம், வீரபத்திரர் கோயில் என்றும், லேபக்ஷி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
லேபக்ஷி கோயிலின் தூண்கள்
வீரபத்திரர் கோயில் வரலாறு
ராமாயண காலத்தில் ராவணனிற்கும் ஜடாயுவிற்கும் சண்டை நடந்த இடமாக இந்த இடம்தான் குறிப்பிடப்படுகிறது. ராமனின் மனைவியான சீதையை ராவணன் தூக்கிச் சென்றபோது, ஜடாயு வழிமறித்ததாகவும், அப்போது ராவணன் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த ராமன், ஜடாயுவின் நிலைகண்டு எழுந்திருக்கும்படி சொன்னதாகவும், தெலுங்கில் லே என்றால் எழுந்திரு என்றும், பட்சி என்றால் பறவை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஊருக்கு லேபக்ஷி என்று பெயர் வந்ததாம். இந்த கோயிலை விஜயநகரப் பேரரசரான அச்சுத நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் அவரது அரசில் பணியாற்றிய விரூப்ண நாயக்கர் - வீரண நாயக்கர் ஆகியோர் சேர்ந்து 16ம் நூற்றாண்டில் கட்டியதாக கூறப்படுகிறது.
வீரபத்திரர் ஆலயத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய நந்தி சிலை
சிவனின் வீரபத்திரர் அவதாரம்
இந்த கோயில் பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 27 அடி நீளமும், 15 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியின் சிலை இங்குள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய நந்தி சிலை இதுதான். அதுமட்டுமில்லாமல், 24 அடி நீளமும் 14 அடி அகலமும் கொண்ட ஒரு சுவரில் பிரம்மாண்ட சுவர் ஓவியங்களும் கோயிலில் உள்ளன. அதில் சிவன், வீரபத்திரர், யோகதட்சிணாமூர்த்தி, ஹரிஹரர், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட 14 அம்சங்களில் வரையப்பட்டுள்ளார்.
கோயிலை பற்றி இன்னொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. கோயில் இருக்கும் இடத்தில்தான் சிவபெருமான் தக்ஷன் என்ற ஆணவம் கொண்டவனின் யாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரர் அவதாரம் எடுத்தாராம். இதனால் இந்த கோயிலில் உள்ள சிவன் சிலை மண்டை ஓட்டு மாலையுடன் அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றது.
கோயிலில் தீட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட சுவர் ஓவியங்கள்
அந்தரத்தில் தொங்கும் தூண்
கோயிலின் நுழைவு வாயிலில் பெரிய நடன அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் பெரும் அதிசயமும் இருக்கிறது. அந்த இடம் முழுவதும் பெரிய பெரிய கல்தூண்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. அங்கு சுமார் 70 தூண்கள் இருக்கும் நிலையில், அவற்றில் ஒரு மூலையில் இருக்கும் ஒரே ஒரு தூண் மட்டும், மேற்கூரை மற்றும் தரையில் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த தூணை தரையில் தொடவைக்க பல முயற்சிகள் நடந்தும் எந்த பலனும் கிட்டவில்லை. ஒரு கட்டத்தில் தூணின் நான்கு முனைகளில் ஒரு முனை மட்டும் லேசாகத் தரையைத் தொடவைக்கப்பட்டது. அந்த நொடியே மண்டபத்தின் மேற்கூரையில் கடும் விரிசல் ஏற்பட துவங்கியது. மற்ற தூண்கள் எல்லாம் லேசாக சாயத் தொடங்கி, பலம் இழந்தது போல மாறின. உடனடியாக, அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த தூணை, தரையை தொடவைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தூண் பழைய நிலைக்கே வந்தது.
மேற்கூரையையும் தரையையும் தொடாமல் அந்தரத்தில் தொங்கும் தூண்
இந்தத் தூண் குறித்து பிரிட்டன் பொறியாளர்கள் ஆராய்ச்சி செய்தும் இன்னும் அவர்களால் எப்படி இந்த அதிசயம் சாத்தியம் என்று கண்டறிய முடியவில்லை. அனைவரும் திகைத்து நிற்கின்றனர். மொத்தமுள்ள 70 தூண்களும் இந்த ஒற்றைத் தூணின் பலத்தில்தான் நிற்கின்றன என்று அவர்கள் நம்புகின்றனர். அந்தரத்தில் தொங்கும் தூணுக்கு கீழே ஏதாவது ஒரு பொருளை நுழைத்து மறுபக்கம் எடுத்தால், அவர்களது வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது!
பிரிட்டிஷ் பொறியாளரின் ஆய்வு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உலகிலிருந்து பல்வேறு கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து இந்த தூணை ஆய்வு செய்தனர். அவர்களால் இந்த தூண் எப்படி தொங்குகிறது? எதற்காக தொங்குகிறது? என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில் 1910ம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளரான ஹாமில்டன் என்பவர், இந்த தூண் தரையில் நின்றால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க விரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் தனது ஆய்வு குறித்துத் தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதியளித்த பின்பு தூணைத் தரையில் நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.
குறிப்பிட்ட மண்டப மேற்கூரையின் மொத்த எடையில் பாதியை ஒரே தூண் தாங்குகிறது - பிரிட்டிஷ் பொறியாளர்கள்
ஆய்வின் முடிவில், குறிப்பிட்ட மண்டப மேற்கூரையின் மொத்த எடையில் பாதியை இந்த தூண்தான் தாங்கிக்கொண்டிருக்கிறது என்றும், மீதி பாதி எடையை மற்ற தூண்கள் எல்லாம் தாங்கிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த தூண் தரையை தொட்டால் ஒட்டு மொத்த மண்டபமும் இடிந்து விழுந்துவிடும் என்றும் கண்டுபிடித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது எப்படி ஒரு பெரிய கல் மண்டபமே ஒரு தொங்கும் தூணில் நிற்கிறது? இந்த கட்டிடக்கலை எப்படி வடிவமைக்கப்பட்டது? இதை வடிவமைத்தவர் யார்? என பல்வேறு கேள்விகளுக்கான விடை மர்மமாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல், பல்வேறு வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு தூணை நம்மால் வடிவமைத்துவிட முடியுமா? என்றும் விஞ்ஞானிகள் வியந்து நிற்கின்றனர்!