தமிழகத்தில் ஏராளமான அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், ஆதிபராசக்தி என்றதும் முதலில் நம் மனதில் தோன்றுவது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்தான். ஓம்சக்தி கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மற்ற கோயில்களை போல அல்லாமல், பெண்களே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிவதன் மூலமே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் மகிமையை நாம் உணர முடியும்.

கோயில் அமைவிடம்

சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூர் என்ற ஊரில் ஓம் சக்தி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி, இரு கரம் கொண்டு, வலது திருக்கரத்தில் தாமரை மொட்டுடனும், இடது திருக்கரத்தில் சின்முத்திரையுடனும், வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டு, ஆயிரம் இதழ் தாமரை பீடத்தில் அமர்ந்தவாரு காட்சியளிக்கிறார். அன்னையின் தலையில் ஜடாமுடியே கிரீடம் போல் அமைந்திருக்கும் இந்த திருவுருவ சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். இந்த சிலைக்கு கீழே சுயம்பு காணப்படுகிறது. இங்குள்ள அம்மன் சித்தர்களின் தலைவி என்று போற்றப்படுகிறாள். மேலும் எண்ணற்ற சித்தர்கள் இத்தலத்தில் உறைந்துள்ளதாக நம்பப்படுவதால், இத்திருத்தலம் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெண்களை சிறப்பிக்கும் ஆலயம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் மூலஸ்தானம்வரை பெண்கள் சென்று வழிபடலாம். மேலும் இந்த கோயிலில் உள்ள விக்ரகங்களுக்கு பெண்களே பூஜைகளையும் செய்கின்றனர். மேலும் மகத்தான விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட அம்மனின் கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.


தல வரலாறு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தற்போது அமைந்துள்ள இடத்தில், 1960 ஆண்டுகளில் ஒரே ஒரு வேப்பமரம் மட்டுமே இருந்ததாம். வேப்பமரங்களில் வழக்கமாக காய் கசப்பு தன்மையுடன்தான் இருக்கும். மேலும் வேப்பமரத்தில் வடியும் பாலும் கசப்பு தன்மை உடையதாகவே இருக்கும். ஆனால் இந்த வேப்ப மரத்தின் காய்களும், வடியும் பாலும் இனிப்பு சுவையுடன் இருந்ததாம். இந்த மரத்தை கடந்து செல்லும் அனைவரும் மரத்தை அதிசயமாக பார்த்து, அந்த இனிப்பு சுவையை சுவைத்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வேப்பமரத்தின் காயையும், வடிந்த பாலையும் உட்கொண்டவர்களுக்கு உடலில் இருந்த நோய்கள் அனைத்தும் குணமானதாம்.

இந்த வேப்ப மரம் குறித்த தகவல் ஊர் முழுக்க பரவிய நிலையில், 1966-ம் ஆண்டு தமிழகத்தில் வீசிய புயலில் இந்த வேப்பமரம் அடியோடு சாய்ந்துள்ளது. அப்போது மரத்தின் வேர் பகுதியில் இருந்து சுயம்புவாக கல் ஒன்று வெளிப்பட்டதை பார்த்த அப்பகுதி மக்கள், சுயம்புவிற்கு மேல் சிறிய குடில் அமைத்து பூஜை செய்து வழிபட தொடங்கினர். பல ஆண்டுகளாக சுயம்பு உருவம் வழிபடப்பட்டு வந்தநிலையில், 1977-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி, சுயம்புவிற்கு அருகில் 3 அடி உயர பீடத்தின் மீது அன்னை ஆதிபராசக்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆலயத்தின் சிறப்பு

ஒரே தாய், ஒரே மனிதகுலம் என்பதே ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அடிப்படை கொள்கை. அதாவது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே விளக்கம். இந்த கோயிலின் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை செய்யலாம் என்ற முறையை பங்காரு அடிகளார் கொண்டுவந்தார். மேலும் அடிகளாரின் உருவில் அன்னை அருள்வாக்கு கூறி வந்தார். இதனால் பக்தர்கள் பங்காரு அடிகளாரை 'அம்மா' என்றே அழைத்தனர். கோயிலின் நுழைவு வாயிலில் ஓம் சக்தி என்ற மந்திரமும், திரிசூலமும் இருக்கும். இங்கு வரும் பக்தர்கள் இந்த திரிசூலத்தை வலம் வந்த பிறகே, உள்ளே சென்று அம்மனை தரிசிக்கின்றனர்.

புற்று மண்டபம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் புற்று மண்டபத்தில் உள்ள புற்றில் அம்மன் பாம்பு வடிவில் வசிப்பதாக நம்பிக்கை. இந்த மண்டபத்தில் இரவு நேரங்களில் தங்குபவர்களுக்கு பாம்பின் உருவில் அன்னை பராசக்தி காட்சி தரும் அதிசயமும் நிகழ்வதாக கூறப்படுகிறது. புற்று மண்டபத்தின் வலப்பக்கம் சப்த கன்னியர் சன்னதி உள்ளது. இது 1974-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

ஆடியில் சிறப்பு

வழக்கமாக ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்கள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்கும். அதன்படி ஆடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திலும் ஏராளமான விழாக்கள் வடைபெறும். குறிப்பாக ஆடிபூரத்தின் போது இங்கு அங்கபிரதட்சணம் செய்ய ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் குவிகின்றனர். ஆடி வெள்ளிக்கிழமைகளில், சுயம்பு வடிவில் இருக்கும் அன்னையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேல்மருவத்தாளை தரிசனம் செய்தால் மேன்மையான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதுவும் சக்தி மாதமான ஆடியில் ஆதிபராசக்தியை தரிசனம் செய்வது, நம் பாவங்களை எல்லாம் போக்கி புண்ணியத்தை கூட்டும் என்பது ஐதீகம்.

Updated On 5 Aug 2024 4:13 AM GMT
ராணி

ராணி

Next Story