இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முற்பிறவியில் செய்த பாவங்களையும், இப்பிறவியில் செய்த பாவங்களையும் போக்கும் ஸ்தலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடுமுடி என்னும் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஒரே இடத்தில் வீற்றிருக்கின்றனர். திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போலவே, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் என்று கருதப்படுவதாலேயே இது கொடுமுடி என்ற பெயரை பெற்றதாம். இங்கு காட்சி அளிக்கும் சிவன் மகுடேஸ்வரராகவும், அவரது துணைவி வடிவுடைய நாயகியாகவும் இருக்கின்றனர். எனவே இக்கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கோவில் வரலாறு

மகுடேஸ்வரரான சிவனின் திருக்கல்யாணத்தை காண்பதற்காக படைக்கும் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான விஷ்ணுவும் இந்த தலத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் ஒரு முறை ஆதிசேஷன் மற்றும் வாயு பகவானுக்கிடையில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது தங்களின் பலத்தை காண்பிக்க இருவருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்பட்டது. அப்போது இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி, , ஆதிசேஷன் மேரு மலையை பற்றிக்கொள்ள, வாயு பகவானோ தனது காற்றின் விசையால் ஆதிசேஷனை எதிர்த்து போரிட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, வாயு பகவான் தன் முழு பலத்தையும் செலுத்தி காற்றடிக்க மேருமலையின் ஒரு பகுதியானது சிறு சிறு துண்டுகளாக சிதறி தென் திசையின் பல பாகங்களில் வந்து விழுந்தது. . அவ்வாறு சிதறிய ஒவ்வொரு கல்லும் சிவலிங்கமாக காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று தான் இந்த கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் என்றும் வரலாறு விளக்குகிறது.


ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றை கூறும் புகைப்பட காட்சி

கோவிலின் அமைப்பு

இக்கோவில் காவிரி ஆற்றின் மேற்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில்

மகுடேஸ்வரர்

சிவன் கோவிலினுள் சென்ற உடனே கொடிமரமும், நந்தீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர். மேலும் இந்த சன்னதியில் நவகிரகங்கள், தக்ஷிணாமூர்த்தி, சூரியன், 63 நாயன்மார்கள், முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இன்னும் சிறப்பாக இந்த கோவிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் சன்னதியின் வலதுபுறத்தில் வடிவுடையம்மன் சன்னதி இடம்பெற்றிருக்கிறது. அம்பாள் சன்னதியின் உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விசுவேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் உள்ளனர்.


விஷ்ணு பெருமான் மற்றும் வாயு பகவான்

வீரநாராயணப் பெருமாள்

இங்கு மூலவர் வீரநாராயணப் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் இருக்கிறார். மூலவர் பெருமாள் படுத்த நிலையில், அற்புதமாக காட்சியளிக்கிறார். மேலும் 12 ஆழ்வார்கள், பரமபதநாதர், ராமானுஜர், நாகர், வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர் ஆகியோரும் உள்ளனர். இக்கோவிலின் ஆஞ்சநேயர் சற்று வித்தியாசமாக கோர பல்லில் காட்சியளிக்கிறார். இங்கு மஹாலக்ஷ்மி கென்று தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மன்

இங்கு பிரம்மா, கர்ம காரகன், ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானுக்கு உகந்த வன்னிமரத்தடியில் எங்கும் காணப்படாத மூன்று முகங்களை கொண்டு எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் சனிபகவான் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த சனிபகவானின் சன்னதிக்கு நேர் எதிரே அவருடைய வாகனமான காக்கை இருக்கிறது. இந்த காகத்திற்கு முன்பு பக்தர்கள் எள் பொட்டலங்களை கொண்டு தங்களுக்கு தாங்களே தலைக்கு மேல் சுற்றி நெருப்பில் போடுகின்றனர். இப்படி செய்வதால் சனி தோஷம் நிச்சயம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.


படைக்கும் கடவுளான பிரம்மா மற்றும் சனிபகவான்

கோவிலின் சிறப்பு

இத்தலத்திற்கு பிரமபுரி, ஹரிஹரபுரம், அமிர்தபுரம் என்று வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. பிரம்மன் இந்த தலத்திற்கு வந்து வணங்கியதால் இந்த தலத்திற்கு பிரமபுரி என்றும் திருமால் பூஜித்ததால் ஹரிஹரபுரம் என்றும் கருடன் இந்த தலத்தின் இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இன்னும் சிறப்பாக இந்த தலத்திற்கு முன்பு தான் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. இவ்விடத்திலிருந்து தான் காவிரி ஆறானது கிழக்கு திசையில் திரும்பி பாய்ந்து ஓடுகிறது. இந்த ஸ்தலத்தில் காவிரி ஆறு, பிரம்ம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் மற்றும் தேவ தீர்த்தம் என்று நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இந்த தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய முப்புலவர்களால் பாடப்பட்டிருக்கிறது. தேவார பாடல்களில் இடம்பெறும் 274 சிவாலயங்களில் 213 வது சிவாலயமாக இந்த தலம் இடம்பெற்றுள்ளது.


பிரம்மா, விஷ்ணு, சிவன்

ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட கோயில் என்பதால் இந்த தலத்தில் நாகர் வழிபாடு மிகவும் விசேஷமாக அமைந்திருக்கிறது. இக்கோயிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகரை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் அப்பேறு வாய்க்கப்பெறும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷம், களத்திர தோஷம், ஸ்திரீ தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று பல தோஷங்களும், தடைகளும் நிச்சயம் நீங்கும்.

விழாக்கள்

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. பழனிக்கு காவடி எடுப்பவர்கள் இங்கிருக்கும் காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு காவடியை தொடங்குவது காலங்காலமாக பின்பற்றும் நடைமுறையாக இருந்து வருகிறது. இது தவிர ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தின் 11 நாட்கள் இந்த ஸ்தலத்தில் பெருவிழாவாக சிறப்பித்து பூஜிக்கப்படுகிறது. தேர் திருவிழா, உற்சவர் வீதியுலா போன்றவைகளையும் நிகழ்த்துகின்றனர். தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையை பெற்ற இந்த ஆலயம் வந்து வழிபட்டால் மூன்று மடங்கான ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பாவங்களும், சாபங்களும் நீங்கி அந்த காவிரி ஆறு அழகாக புரள்வது போல இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி புரளும் என்று முழுமனதாக நம்பப்படுகிறது.


பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள்

Updated On 31 Oct 2023 12:15 AM IST
ராணி

ராணி

Next Story