தீப ஒளி பண்டிகையான தீபாவளி நன்னாளில் புத்தாடை உடுத்துவது, இனிப்புகளை சாப்பிடுவது, பட்டாசு வெடித்து மகிழ்வது எல்லாமே சிறப்புதான். ஆனால் இந்த நாளில் தெய்வ வழிபாடும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எந்தெந்த தெய்வங்களை எந்தெந்த முறைகளில் பூஜித்தால் பிரச்சினைகள் தீர்ந்து வாழ்க்கை சிறப்புறும் என்பதை விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். மேலும் தீபாவளியை கொண்டாடுவதற்கான காரணம் குறித்தும், லட்சுமி வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அவர்.
தீபாவளி கொண்டாடுவதன் பின்னணி என்ன?
தீபாவளி என்று சொன்னாலே மகிழ்ச்சிக்கான ஒரு நாள். வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நாம், பண்டிகை, பட்டாசுகள், இனிப்புகள், மாவிலை தோரணங்கள், குழந்தைகள் குதூகலமாக இருப்பது, சினிமாவிற்கு செல்வது, ஆலயங்களுக்கு செல்வது என மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒருநாளாக தீபாவளி பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கண்ண பரமாத்மாவான கிருஷ்ணன்தான். நரகாசுரன் என்ற அசுரனால் மக்கள் துயர்பட்டு கிடந்தனர். இந்த நரகாசுரன் மிகப்பெரிய தபஸ்வி என்ற கருத்தும் உண்டு. வாழ்க்கையில் ஒருவருக்கு புகழ், பணம், பதவி வருகிறதென்றால் அதற்குரிய தவம் இருக்கவேண்டும். ஆனால் தவத்தை தவறாக பயன்படுத்திவிட்டால் அதுவே வதமாக மாறிவிடும். அப்படித்தான் நரகாசுரனுக்கும் நடந்தது. நரகாசுரன் தவமிருந்து வாழ்க்கையில் பெரும்பதவிகளை பெற்றுவிடுகிறான். அதன்மூலம் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்னல்களை தரத் துவங்குகிறான். அதனால் கிருஷ்ணன் ஒவ்வொருமுறையும் அவனிடம் யுத்தத்திற்கு சென்றாலும் பின்வாங்கிவிடுகிறார். இதனால் கண்ணனுக்கு ரண சோட் என்ற பெயர் உருவானது. ஒருசில காலத்திற்கு பிறகு அன்னை சத்யபாமாவை அழைத்துச்சென்று நரகாசுரனை வதமும் செய்துவிடுகிறார். அந்த நாளில் மக்கள் அனைவரும், ‘கிருஷ்ணா, இதை முன்பே செய்திருக்கலாமே! ஏன் ஒவ்வொரு முறையும் சென்று சென்று வந்தாய்?’ என்று கேட்க, அதற்கு கிருஷ்ணன், ‘நான் சென்றுவந்தபோது ஒவ்வொரு முறையும் நரகாசுரன் படபடப்படைந்தான், கோபமடைந்தான், என்னை திட்டினான்.எப்பொழுது ஒருவன் கோபமடைகிறானோ, திட்டுகிறானோ, அடுத்தவரை மனதால் வசைபாடுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய 3 மாத தவ வலிமை கெட்டுவிடும்’ என்று கூற, இறக்கும் தருவாயில் கிடந்த நரகாசுரன், ‘நீங்கள் சொல்வது சரிதான்! இதேபோல் மக்கள் அவதிப்பட கூடாது. எனவே என் மரணத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும்’ என்று சொல்கிறான். இப்படி நரகாசுரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கிருஷ்ணன் அந்த நாளை கொண்டாடுகிறார். அன்றிலிருந்து நரகாசுரனை வதம் செய்த அந்த நாள் நரக சதுர்த்தி, அதாவது தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்குள்ளும் குறியீடாக ஏதேனும் ஒரு தகவல் இருக்கும். அதுபோல் அவ்வப்போது வேலை வேலை என்று சென்றுகொண்டிருந்தாலும் இரையை தேடுவதுபோன்று இறைவனையும் தேட வேண்டும். ஆண்டில் ஒருநாளாவது குடும்பத்துடனும் உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக செலவிட்டால் வாழ்க்கையில் இளமையும் இனிமையும் பிறக்கும், ஆயுளும் பெருகும்.
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளே தீபாவளி
தீபாவளி இந்துக்களின் பண்டிகையா? தமிழர்களின் பண்டிகையா?
தீபாவளியை இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் என அனைவரும் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமண சமயம் இருந்தது. அவர்களும் மகாவீரர் ஞானமடைந்த நாளாக தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அதனால் இது ஒரு இனத்திற்கோ, சமுதாயத்திற்கோ உரித்தான பண்டிகை கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நரகாசுரன் சொன்ன அந்த கருத்தின் குறியீட்டை யாரெல்லாம் புரிந்துகொண்டார்களோ அவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடலாம். குறிப்பாக, உடல்நலனில் கவனத்தை செலுத்தி கொண்டாடுவது நல்லது.
தீபாவளி அன்று காலை 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்களே. இது கட்டாயமா?
ஒவ்வொரு பொருளுக்கும் ஜோதிட ரீதியாக ஒரு வலிமை இருக்கிறது. நல்லெண்ணெய் என்று எடுத்துக்கொண்டால் அது மருத்துவம் சார்ந்தது. காலை எழுந்திருப்பது எப்போதுமே நல்ல பழக்கம்தான். உடல் என்பது உயிரியல் கடிகாரத்தின்படிதான் இயங்கும். இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் பல நன்மைகள் ஏற்படும். எனினும், மருத்துவர் தரும் ஆலோசனைபடிதான் நடந்துகொள்ள வேண்டும். அதாவது வழிபாட்டிற்கு சாதனை என்ற மற்றொரு வார்த்தையும் உண்டு. எது நமக்கு சாத்தியமோ அதை செய்வதுதான் சாதனை. உடல்நலனுக்கு ஒவ்வாத எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது. எனவே அவரவர் உடலுக்கு ஏற்றவாறு பண்டிகையை கொண்டாட வேண்டும்.
தீபாவளியன்று காலை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் முக்கியத்துவம்
தீபாவளியன்று சம்பிரதாயத்திற்காவது பட்டாசு வெடிப்பது கட்டாயமா?
வெளிநாடுகளில் இருப்பவர்களை எடுத்துக்கொள்ளலாம். சில நாடுகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இருக்காது. எனவே அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பட்டாசுகளை வெடித்தால் மட்டும் போதும். நமது நாட்டிலும் சட்டதிட்டங்களின்படி எவ்வளவு வெடிக்கலாமோ அவ்வளவு மட்டும் வெடிக்கலாம். பிற உயிரினங்களை கருத்தில்கொண்டு அளவாக வெடிக்கவேண்டும். அதுவே பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஆலயம் செல்வது, வீட்டிலே பிரார்த்தனை செய்வது போன்றவற்றை கட்டாயம் செய்யவேண்டும். மேலும் பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள்மீது பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம்.
தீபாவளியன்று லட்சுமி வழிபாடு எந்த அளவிற்கு முக்கியம்?
வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் நமக்கு உதவக்கூடிய கருணை படைத்த தாய் மகாலட்சுமி. தீபாவளியன்று இரண்டு, மூன்று விஷயங்களை சொல்கிறார்கள். ஒன்று ராம - ராவண யுத்தம் முடிந்து ராமர் சீதையுடன் நாடு திரும்பிய நாள் என்று சொல்கிறார்கள். மற்றொன்று கிருஷ்ணன் - சத்யபாமா - நரகாசுர வதம் நடந்த நாள் என்று சொல்கிறார்கள். இதுதவிர சமுத்திர மந்தனம் என்றும் சொல்வார்கள். அதாவது பார்க்கடலை கடைந்தபோது சந்திரனுடன் அன்னை மகாலட்சுமி தோன்றிய தினம் என்றும் சொல்கிறார்கள். சந்திரன் என்றால் மனதை குறிக்கக்கூடியது. பொருளாதார முன்னேற்றம் வேண்டும் என்பவர்களின் தன ஸ்தானத்திற்கு சொல்லக்கூடிய ரிஷபத்தின் குறியீடான பசுமாட்டிற்கு ஏதேனும் செய்யவேண்டும். எனவே தீபாவளியன்று அருகிலிருக்கும் கோசாலைக்குச் சென்று முடிந்த உதவிகளை செய்தால் நல்லது. சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் வீட்டில் இருக்கும்போது வரக்கூடிய பண்டிகைதான் தீபாவளி. அந்த நாளில் அமாவாசை ஏற்படும். அந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் வருடம் முழுவதும் அந்தந்த நாளுக்கு தேவையான அனைத்தும் தடையில்லாமல் கிடைக்கும். ஏனென்றால் அமாவாசை முடிந்த அடுத்த நிமிடமே வரக்கூடியது பிரதமை. அந்த நாளில் அளவற்ற பொருள்வளத்தை தரக்கூடிய காமேஸ்வரியை வழிபடவேண்டும். எனவே தீபாவளியன்று ஏதேனும் ஒன்றை வாங்கவேண்டும். நிறைய செலவழித்து தங்கம் போன்ற பெரிய பொருட்களை வாங்கமுடியாதவர்கள் குருவின் ஆதிக்க பத்யமான லட்டுவை வாங்கி மகாலட்சுமிக்கு வைக்கலாம். துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஒரு ஓரத்தில் வைத்தாலே பணம் வரும் அல்லது கல் உப்பு, கண்ணாடி போன்றவற்றை வாங்கலாம். அவிட்ட நட்சத்திரத்தின் செவ்வாயை குறிக்கக்கூடிய டமருவை வாங்கி சிவனின் பேரைச் சொல்லி வீட்டிற்குள் சத்தம் கேட்க ஆட்டிவிட்டு, அதன்பிறகு ஓரிரு நாட்களுக்குள் சிவாலயத்திற்கு அதனை நன்கொடை வழங்கினால் வீட்டிலே வாஸ்து தோஷம் இருந்தால் அது சரியாகும்.
தீபாவளியன்று ஆன்மிகரீதியாக செய்யவேண்டியவை
தீபாவளியன்று இவற்றில் எதையுமே செய்யமுடியவில்லை என்றால் யாரேனும் ஒருவருக்கு ஒருவேளை உணவாவது வாங்கிகொடுத்தால் நல்லது. அதுவும் முடியாதபட்சத்தில் ஏதேனும் ஒரு அரச மரம் அல்லது துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றி தொடாமல் வழிபடவேண்டும். தியானம் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தீபாவளியன்று தொடங்கலாம். வீட்டில் ஒரு இடத்தில் அமர்ந்து மகாலட்சுமி பார்க்கடலில் இருந்து உதித்து வருவதைப் போன்று கற்பனை செய்யவேண்டும். இப்படி செய்யும்போது கேட்கிற பணம் வரும். வீட்டில் கடன் பிரச்சினை இருக்கிறதே என்று வருத்தப்படுபவர்கள், சிறிது வெல்லத்தை தண்ணீரில் கரைத்து தரையில் ஊற்றி முருகனை வழிபட்டால் பிரச்சினை தீரும். தீபாவளியன்று இதனை தொடங்கி தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு செய்துவர வேண்டும். செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் பிருகுமங்கல யோகம் என்று சொல்லப்படுகிறது. எனவே தீபாவளியன்று சென்னிமலை முருகனை சென்று வழிபட்டால் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். தீபாவளியன்று மாரியம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை அணிவித்தால் வேலையில் இருக்கும் தடைகள் நீங்கும். எனவே தீபாவளியை கொண்டாட ஆரம்பித்தாலே வாழ்க்கையில் வழி பிறந்துவிடும்.
தீபாவளியன்று வீட்டில் விளக்கேற்றும் முறை பற்றி சொல்லுங்கள்!
மகாலட்சுமிக்கு 6 மண் அகல் விளக்குகளை ஏற்றவேண்டும். அதை நெய் விளக்காக ஏற்றி, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஏலக்காய், கிராம்பு இருக்கும்வண்ணம், விளக்கானது மகாலட்சுமியை பார்க்கும்படி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். தீபாவளியன்று மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் வாழ்க்கையில் தரித்திரம் என்பதே இருக்காது. பெரும் செல்வந்தர்களாக மாறிவிடுவார்கள்.