இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குருபெயர்ச்சி, சிலருக்கு வாழ்க்கையை அப்படியே பாசிட்டிவாக மாற்றி பல்வேறு சுப காரியங்களை நடத்தி கொடுக்கும். ஒருவர் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் எனில் தனகாரகனான குருவின் ஆதரவு அவசியம். ஆனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குருபெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் குருபெயர்ச்சியால் 2024-2025 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்பது பற்றிய முழுமையான தகவலை நமக்காக கணித்து தந்துள்ளார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி...

மேஷ ராசி பலன்

இதுவரை ஜென்மத்தில் இருந்த குரு தற்போது 2-ம் இடத்திற்கு வருகிறார். பண லாபம், தனவரவு, குடும்பம் போன்ற அமைப்புகளில் இதுவரை இருந்த குறைகளை எல்லாம் களையக்கூடிய நல்ல அமைப்பாக இது உள்ளது. பொதுவாகவே குருவின் பார்வைக்குத்தான் அதிகமான பலன். 6, 8, 10 போன்ற இடங்களை இப்போது குரு பார்க்கிறார். இந்த இடங்கள் அனைத்தும் தனத்தை கொடுக்கக்கூடிய அமைப்பு, வேலை மூலமாக பணம் வரக்கூடிய அமைப்பு. தொழில், வியாபாரம் என எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் இருந்த கடன் தொல்லைகள் விலக கூடிய தன்மை இருக்கிறது. பணம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, எல்லா மேஷ ராசி அன்பர்களுக்கும் உண்டாகியுள்ளது. குரு குடும்பத்தை அமைத்துக்கொடுப்பார், பணத்தை கொடுப்பார், பணியில் நிம்மதியை கொடுப்பார். ஆசிரியர், வழக்கறிஞர் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழ் கூடும். தனம், வாக்கு, குடும்ப அமைப்பில், வயதிற்கு ஏற்றாற்போல அனைத்து நற்காரியங்களும் நடைபெறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொல்லைகள் விலகக்கூடிய குருபெயர்ச்சி இது.

ரிஷப ராசி பலன்

12-ம் இடத்திலிருந்த குரு தற்போது ஜென்மத்தில் வருகிறார். ஜென்மத்தில் குரு வருகிறதே என்று அச்சப்படத் தேவையில்லை. ஒரு ராசியை ஒரு கிரகம் புனிதப்படுத்துவது என்பது மிகப்பெரிய யோக அமைப்பு. அதுவும் சுப கிரகம் ராசியில் அமர்வது என்பது உங்களது அந்தஸ்து, கவுரவம், வாக்கு, சிந்தனை சக்தி, முயற்சிகள் என அனைத்தையும் பலிக்க வைக்கும் யோகத்தை கொடுக்கும். குரு ராசியில் அமர்ந்து 5, 7, 9-ம் இடங்களை பார்ப்பதால் அந்த இடங்கள் மிகப்பெரிய வலிமை அடையப்போகின்றன. திருமணமாகி சில வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டம் இல்லை என்பவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் செயல்படக்கூடிய அமைப்பு. காதல், தொழில், வேலை, படிப்பு உள்ளிட்டவற்றில் முயற்சிகளை சீர்தூக்கிவிட்டு வெற்றியடையச் செய்வார். பொதுவாகவே ரிஷப ராசிக்காரர்கள் ரொம்ப நல்லவர்களாக இருப்பீர்கள். அப்படிப்பட்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது 5, 7, 9-ம் பாவங்கள் வலுத்து இருப்பதால், கணவன்-மனைவி, காதலன்-காதலி உறவுகள் சீராக போகின்றன. அனைத்து நிலைகளிலும் உறவுகள் வலுப்படும்.

மிதுன ராசி பலன்

லாப ஸ்தானத்தில் இருந்த குரு தற்போது 12-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். 12-ம் இடத்தில் லாபத்தை கொடுத்துக்கொண்டிருந்த குரு, இனி செலவுகளை கொடுக்கப்போகிறார். ஆனால் குரு சுப கிரகம் என்பதால் சுப செலவுகள் ஏற்படும். குரு பகவன் 4, 6, 8 ஆகிய இடங்களை பார்ப்பதால் வீடு, திருமணம், வாகனம் உள்ளிட்டவற்றுக்கு முழுமையாக செலவு செய்யும் சூழல் உண்டாகும். கையிருப்பை நல்ல விதமாக செலவாக்கி, அதன் மூலம் வருமானம் வரும் சூழலை ஏற்படுத்தும் நல்ல குரு பெயர்ச்சியாகவே அமையும். குருவின் பார்வை 8-ம் இடத்தை வலுப்படுத்தி, 12-ம் இடத்தை தொடர்பு கொள்வதால், வெளி மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, இருக்கும் இடத்திலேயே தொழில், வீடு, வாகனம் போன்றவை அமையும். தாய்நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு முயற்சி சாதகமாக அமையும். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.


மேஷம் - நற்காரியங்கள் நடைபெறும்; ரிஷபம் - உறவுகள் வலுப்பெறும்; மிதுனம் - சுப செலவுகள்; கடகம் - போராட்ட காலம்

கடக ராசி பலன்

10-ம் இடத்தில் உள்ள குரு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். லாப ஸ்தானத்திற்கு குரு வருவது யோகம் என்று எல்லா குரு பெயர்ச்சியிலும் சொல்லப்படுகிறது. ஆனால் உங்களுக்கு குருவை வைத்து மட்டும் பலன்கள் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது குரு பெயர்ச்சி பெரிய அளவில் யோகத்தை தராது என்றே சொல்லலாம். சனிக்கு அடங்கிதான் மற்ற கிரகங்கள் பலன் தரும். எனவே கடக ராசியினர் தற்போது மனம், உடல்நலம், தொழில் என ஏதோவொரு வகையில் கடும் சிரமத்தில்தான் இருப்பீர்கள். 90 சதவீத கடக ராசிக்காரர்களுக்கும் இது பொருந்தும். மீதம் 10 சதவீதத்தினர்தான் ஓரளவு சுமாராக காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்தநிலையில், 11-ம் இடத்து லாப குரு ஒரு நிலையில் தைரியத்தை கொடுப்பாரே தவிர, மற்றபடி அப்படியே கொட்டி கொடுத்துவிடுவார் என்று சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் அஷ்டம சனியின் ஆதிக்கம் உள்ளதால், பணம் வந்தாலும் பிரயோஜனமாக இருக்காது. எதையும் செய்து முடிக்க கடுமையான போராட்டம் தேவைப்படும். ஆகவே இது பொறுமையாக இருக்க வேண்டிய காலம்.

சிம்ம ராசி பலன்

ரொம்ப நன்றாக இருந்த 9-ம் இடத்திலிருந்து 10-ம் இடத்திற்கு குரு வந்திருக்கிறார். 10-ல் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் எடுத்துக்காதீங்க. ஒவ்வொரு ராசிக்கும் குரு ஒவ்வொரு மாதிரி செய்வார். இதுவரை 9-ம் இடத்திலிருந்து ராசியை பார்த்துக்கொண்டிருந்தவர், தற்போது 10-ம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து 2, 4, 6-ம் இடங்களை பார்க்கப்போகிறார். இது மிகப்பெரிய யோகம். பணத்தை கொடுப்பார். அதே நேரம் வரவுக்கு மேல் கடன்களை கொடுப்பார். அவை சுப கடன்களாக, வளர்ச்சிக்கான கடன்களாக இருக்கும். எண்ணங்கள், திட்டங்கள் பலிக்கக்கூடிய அமைப்பு உண்டு. தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் முயற்சிகள் பலிக்கக்கூடிய அமைப்பு என 10-ம் இடத்தில் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொடுக்கப்போகிறார். பணியிடங்களில் வெகுநாட்களாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை பறிபோகாமல், அனைத்தும் நல்லபடியாக கிடைக்கும் அமைப்பு உள்ளது. அந்நிய இன மொழி பேசுபவர்களால் நன்மை கிடைக்கும். இரண்டாம் திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 60 வயதை கடந்தவர்களுக்கு நல்ல யாத்திரை அமையும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோக பலன்கள் இருக்கிறது. குரு மட்டுமன்றி அனைத்து கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக உள்ளன. குரு 9-ம் இடத்திற்கு வந்து ராசியை பார்க்கப்போகிறார். ராசி பொலிவாக இருக்கப்போகிறது. ஏற்கனவே உங்களுடைய எதிரிகள் அத்தனை பேரும், உங்களது முழங்காலுக்கு கீழே மண்டியிட்டு நிற்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய நல்ல பலன்களை அங்கே சனி பகவான் செய்து கொண்டிருக்கிறார். ஆக, தொட்டது துலங்கக்கூடிய, அதிர்ஷ்டம் கொட்டக்கூடிய குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். ராசியை குரு பார்ப்பதால் எண்ணங்கள் அப்படியே வெற்றி பெறும். 25 சதவீதம் முயற்சி, 75 சதவீதம் அதிர்ஷ்டம் என்பது அனைத்து கன்னி ராசிக்காரர்களுக்கும் தற்போது இருக்கும். அவரவர் வயதுக்கு ஏற்றாற்போல கன்னி ராசிக்காரர்கள் ஜெயிக்கப்போகிறீர்கள்; வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போகிறீர்கள். கடன், நோய், எதிர்ப்புகள் விலகக்கூடிய தன்மை இருக்கிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல், கனவு, லட்சியம் என நினைப்பது அனைத்தும் எளிதாக நடந்தேறும். ஒரு வருட காலம் அருமையாக உள்ளது.


சிம்மம் - வரவுக்குமேல் கடன்; கன்னி - அருமையான காலம்; துலாம் - நல்மாற்றங்கள்; விருச்சிகம் - மிகப்பெரிய யோகம்

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லவிதமான மாற்றம் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது இந்த குரு பெயர்ச்சி. 7-ம் இடத்தில் இருந்த குரு தற்போது 8-ம் இடத்திற்கு போவதாக எல்லோரும் பயமுறுத்துகிறார்களே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் ஒரு சுபர், இன்னொரு சுபருடைய வீட்டிற்கு வருகிறார். எல்லா கிரகங்களும் 8-ம் இடத்தில் கெடுதல் செய்து விடாது. 8-ல், அதாவது அஷ்டமத்தில் சனி, ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருந்தால் கெடு பலன்களை கொடுப்பார்கள். ஆனால் குரு அப்படியில்லை. சுப கிரகமான குரு, உங்களுடைய ராசிநாதனுடைய இன்னொரு வீட்டுக்குத்தான் போகிறார். எனவே கெடு பலன்கள் இருக்காது. அதேநேரம் மாற்றங்களை செய்வார். தொழில் மாற்றம், தொழிலிட மாற்றம், வீடு மாற்றம் என ஏதேனும் மாற்றத்தை செய்து அதன்மூலம் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கக்கூடிய அமைப்பு, இந்த 8-ம் இடத்து குருவுக்கு உண்டு. துலாம் ராசிக்காரர்கள் கெடுதல் எல்லாத்தையும் ஏற்கனவே தாண்டிவிட்டீர்கள். 2012, 2013, 2014-ல் பட்ட கஷ்டங்களை போன்றெல்லாம் இனி நடக்காது.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மையை கொடுக்கக்கூடிய வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைஞ்சிருக்கு. 7-ம் இடத்திற்கு வந்து ராசியை பார்க்கிறார் குரு. ராசியை அவர் பார்க்கப்போவது மிகப்பெரிய யோக பலன். அதுவும் அங்கு உங்கள் ராசிநாதன் செவ்வாய், குருவுக்கு மிகப்பெரிய நண்பர். ஆகவே விருச்சிக ராசியினர் எல்லாம் வெற்றி மேல் வெற்றி குவிக்கப்போகிறீர்கள். இளைய வயதினருக்கு திருமணம், நண்பர்களால் நன்மை, குடும்பம் அமையக்கூடிய அமைப்பு போன்றவை உள்ளன. என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அதனை யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நின்று நிறைவேற்றிக் கொள்வீர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தற்போது இல்லை. மாற்றம், முன்னேற்றம், ஏற்றம் என நல்லவிதமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். ராஜயோகாதிபதி எனப்படும் குரு ராசியை பார்ப்பதால் அப்படியே எண்ணங்களை செயலாக்கி, லட்சியங்களை நிறைவேற்றி தருவார். வயதிற்கு ஏற்றாற்போல அவரவர் மனதில் இருக்கும் லட்சியம் ஒரு வருடத்திற்குள் நிறைவேறிவிடும். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். அதன்மூலம் புகழ் கிடைக்கும். கணிதம், இணையம், சமூக ஊடகங்களில் ஜெயிக்க முடியும். ஏற்கனவே நல்வாய்ப்புகளை நழுவவிட்டவர்கள் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்து நழுவவிட்ட வாய்ப்பை பிடித்துவிடுவீர்கள். மொத்தத்தில் விருச்சிக ராசியினருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நல்லவைகள் மட்டுமே நடக்கக்கூடிய குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி அமைகிறது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு 6-ம் இடத்தில் வந்து எதிரியோட வீட்டில் போய் நிற்கிறார் குரு. எனவே கடன், வம்பு, வழக்குகளை கொடுத்துவிடுவாரோ என அச்சப்பட தேவையில்லை. சுபர் வீட்டில்தான் போய் அமர்கிறார். அத்துடன் 10-ம் இடத்தை பார்க்கப்போகிறார் குரு. எனவே கடந்த ஏழரை சனி காலத்தில் வேலை, தொழில் அமைப்பில் கடுமையான பாதிப்புகளை அடைந்தவர்கள் அனைவருக்கும் புதிய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருக்கக்கூடிய சிறப்பான குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது. காசு வரக்கூடிய அமைப்பு உருவாகியிருக்கிறது. கடந்த 3, 4 ஆண்டுகளாக காசே சம்பாதிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்கள் அனைவருக்குமே, 6-ம் இடத்து குரு 2-ம் இடத்தை பார்ப்பார் என்பதால் தனம், பணம் உள்ளிட்டவை கிடைக்கும். பங்குச்சந்தை, யூக வணிகம் போன்றவற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சின்ன முயற்சி, பெரிய தனவரவு என்பது போன்ற சூழல்களும் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நடைபெறும் குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அமையவுள்ளது. அதேநேரம் சுப கடன்கள் ஏற்படும்.


தனுசு - சம்பாத்தியம் உயரும்; மகரம் - சிகரம் ஏறுவீர்கள்; கும்பம் - கஷ்ட காலம்; மீனம் - சோதனை காலம்

மகர ராசி பலன்

அப்பாடா, நிம்மதி, சந்தோஷம் என்று சொல்லப்போகிறது மகரம். மிகப்பெரிய நல் மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டீர்களோ அவ்வளவு நன்றாக இருக்கப்போகிறீர்கள். 5-ம் இடத்தில் குரு அமர்ந்து உங்களது ராசியை பார்க்கப்போகிறார். யார் யாரெல்லாம் உங்களை கண்டுகொள்ளாமல் போனார்களோ, அவர்கள் எல்லாம் வந்து உங்கள் காலில் விழப்போகிறார்கள். யார் யாரெல்லாம் உங்களை எதிர்த்து நின்று கேவலமாக பார்த்தார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது உங்களின் விஸ்வரூபத்தை பார்த்துவிட்டு, இவரைபோய் பகைத்துக்கொண்டோமே என்று நினைக்கும் அளவுக்கு மிகப்பெரிய யோக பலன்கள் கிடைக்கப்போகிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மகரம் சிகரம் ஏறும். எல்லா பிரச்சினைகளும் தீரப்போகிறது. தூக்கமின்றி தவித்த காலங்கள் எல்லாம் மாறிப்போய் நிம்மதி பெருமூச்சு விடப்போகிறீர்கள். இனிமேல் வாழ்க்கையில் முன்னேற்றத்தை மட்டுமே மகர ராசிக்காரர்கள் பார்க்கப்போகிறீர்கள். ஆரோக்கியம் சீர்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்தொல்லை தீரும். மொத்தத்தில் கஷ்ட காலங்கள் விலகி நன்மைகள் மட்டுமே நடந்தேறப்போகிறது.

கும்ப ராசி பலன்

கும்பத்திற்கு 3-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்திற்கு போகிறார் குரு. ஏற்கனவே இருந்த 3-ம் இடம் நல்லதல்ல. 4-ம் இடம் பெரிய சோதனைகளை தராது என்றாலும், ஜென்ம சனி நடைபெறுவதால், அதன் தாக்கங்கள்தான் அதிகமாக இருக்குமே தவிர குரு பெயர்ச்சியெல்லாம் வேலை செய்யாது. எனவே கவனமாக இருங்கள். குடும்பத்தில் யாரும் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். மேலும் வயதிற்கு ஏற்றார்போல கஷ்டங்கள் உண்டாகும். 50 வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கு எல்லாம் பொங்கு சனி நடைபெறலாம். அவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய கஷ்டங்கள் இருக்காது. மேலும் ஒரு 10 சதவீதம் கும்ப ராசியினருக்கு சனியால் பெரிய கஷ்டங்கள் இருக்காது. அவர்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் 90 சதவீதத்தினர் துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையே நீடிக்கும். பணம் என்றால் என்ன என்பதை இந்த காலத்தில் புரிந்துகொள்வீர்கள். மனஅழுத்தம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நெருங்கியவர்களே துரோகம் செய்வார்கள். உறவுகள் கசக்கும் காலம் இது. இருந்தபோதிலும் வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு கஷ்டங்கள் படிப்படியாக விலகும்.

மீன ராசி பலன்

மீன ராசியினருக்கு 2-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்திற்கு வருகிறார் குரு. இது ஒன்றும் சிறப்பான இடம் இல்லை. இந்த 3-ம் இடம் என்ன செய்யும் என்றால் ஒருவரை அறிமுகப்படுத்தி சிக்கலில் மாட்டிவிடும். யார் யாரெல்லாம் தற்போது அறிமுகம் ஆகிறார்களோ அவர்களிடம் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த குரு பெயர்ச்சியில் காதல் வலையில் விழுந்தீர்கள் என்றால், அடுத்த ஆண்டே கசந்துவிடும். யாரிடமும் மனதை பறிகொடுத்து விடாதீர்கள். கடும் மன அழுத்தம் ஏற்படும். கெட்ட பழக்கவழக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். அடுத்துவரக்கூடிய ஜென்ம சனி அமைப்புகளும், 3-ம் இடத்து குருவும் பெரும்பாலும் சாதகமற்ற பலன்களையே கொடுக்கும். ஆனாலும் மீன ராசிக்காரர்கள் நல்லவர்கள். நல்லவர்கள் ஒருபோதும் கெட்டுபோய் விடமாட்டார்கள். மிகப்பெரிய நேர்மைதன்மை கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய சோதனைகள் எதுவும் வந்துவிடாது என்றே சொல்லலாம். பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு வரும். பொறுமையிலும் பொறுமை காக்க வேண்டிய குரு பெயர்ச்சியாகவே இந்த குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.

Updated On 6 May 2024 11:45 PM IST
ராணி

ராணி

Next Story