இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முழுமுதற் கடவுளான பிள்ளையார் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? விநாயகருக்கு எப்படி யானை முகம் வந்தது? உள்ளிட்ட தகவல்களை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.


நந்தியின் சொல்லை சிவன் ஏற்காததால், தன் காவலுக்காகவே கணபதியை உருவாக்கினார் பார்வதி

பிள்ளையார் உருவான புராணக் கதை

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் இல்லாதபோது பார்வதி தேவி நீராட சென்றார். நந்தி கணத்தை காவலுக்கு நிற்கவைத்து சென்றார். அப்போது அங்குவந்த ஈசன், உள்ளே செல்ல முயன்றபோது, அவரை நந்தி தடுத்து நிறுத்தினார். பார்வதி தேவியார் நீராட சென்றுள்ளதால் யாரையும் உள்ளேவிட வேண்டாம் என்று கட்டளையிட்டு காவலுக்கு நிற்க வைத்து சென்றதாக கூறினார். இருந்தபோதிலும் பார்வதி தன் மனைவி என்று கூறிய ஈசன், நந்தியின் தடுப்பை மீறி உள்ளே சென்றார். இதனை கண்ட பார்வதி, யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று கூறியிருந்தேனே என்று நந்தியிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சிவனோ, நந்தி என் சேவகன். அதோடு நான் உன் மணாளன் என்பதால் நந்தி என்னை தடுக்கவில்லை என்று தெரிவித்தார்.


தன் பாதுகாவலுக்காக பார்வதி தேவியால் படைக்கப்பட்ட விநாயகர்

இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, தனக்கு பாதுகாவலனாக நிற்பவர் யாரையும் உள்ளே விடாதபடி அறிவாளியாகவும், பலசாலியாகவும், தனக்கு மட்டுமே முழுபாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த சிந்தனையிலேயே நீராடச் சென்ற பார்வதி தேவியார், தான் பூசிக் கொண்டிருந்த மஞ்சளையும், சந்தனத்தையும் கையில் பிடித்து ஒரு உருவமாக்கினார். அதற்கு உயிரையும் கொடுத்து விநாயகர் ஆக்கினார். விநாயகரை, பார்வதி தேவி உருவாக்கினாலும், அவரை உலகின் நம்பிக்கைக்குரியவராக யானை முகம் எடுக்கவைத்தவர் சிவபெருமானே!


விநாயகரை தனது சூலத்தால் தாக்க முற்படும் ஈசன்

யானை முகம் வந்தது எப்படி?

பார்வதி தேவியார், தான் உருவாக்கிய கணபதியை, நந்திக்குப் பதிலாக தனக்கு காவலாக நிற்கவைத்தார். நந்தியிடம் கூறியதைப் போலவே யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று கணபதியிடமும் கட்டளையிட்டு சென்றார். அப்போது அங்குவந்த சிவ பெருமான் உள்ளே செல்ல முயன்றபோது, அவரை கணபதி தடுத்து நிறுத்தினார். தான் பார்வதியின் கணவர் என்று கூறியும், சிவனை உள்ளே செல்ல விநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஈசன், அங்கிருந்த தேவகணங்களிடம் சிறுவனாக இருந்த விநாயகரை அங்கிருந்து அகற்றும்படி கூறிவிட்டு சென்றார். ஆனால் கணபதியோ அவர்களை எதிர்த்து சண்டை செய்து விரட்டியடித்தார். இதையறிந்த ஈசன், அங்குவந்து தன் திரிசூலத்தால் கணபதியின் தலையைக் கொய்தார். தான் உருவாக்கிய மகனை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே என்று சிவனிடம் கோபம் கொண்ட பார்வதி, கணபதிக்கு எப்படியாவது உயிர் அளிக்கும்படி ஆவேசத்துடன் கேட்டார்.

தேவியின் உக்கிரத்தை கண்டு அனைவரும் கலங்கிப்போக, அவரை சாந்தப்படுத்த, தனது கணங்களை அழைத்து வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார் சிவ பெருமான்! அதன்படி, வடதிசையை நோக்கிச் சென்ற கணங்களின் கண்ணில் யானை ஒன்று முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து, ஈசனின் திருவடியில் கிடத்தினார்கள். அவர் அந்தத் தலையை எடுத்து வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் இணைத்து உயிரூட்டினார். யானை முகத்துடன் உமையாளின் பிள்ளையாக எழுந்தருளினார் பிள்ளையார். அவரை பார்வதி தேவி வாரியணைத்துக் கொண்டார். சிவ பெருமான், அந்தப் பிள்ளைக்கு கணேசன் என பெயர்சூட்டி, கணங்களுக்கெல்லாம் அதிபதியாக கணபதி ஆக்கினார் என நாரதர் புராணம் கூறுகிறது.


கஜமுகாசுரனை அழிக்க உருவாக்கப்பட்ட யானை முகத்தோன்

ஏன் யானை முகம்?

பிள்ளைக்கு யானை முகத்தை பொருத்திவிட்டீர்களே என சிவனிடம் பார்வதி தேவி கேட்க, பல்வேறு உயிர்களை துன்புறுத்திவரும் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழிக்கவே, கணபதியை தான் இவ்வாறு மாற்றியதாக ஈசன் தெரிவித்தார். கஜமுகாசுரனை அழிக்கும் சக்தி, ஆண்-பெண் சம்பந்தப்படாமல் பிறப்பெடுத்து, பார்ப்பதற்கு மனிதப்பிறவி போல அல்லாத ஒன்றால் மட்டுமே முடியும் என்று கூறினார். எனவே கஜமுகாசுரனை அழிப்பதற்காகவே கணேசனுக்கு அவதாரம் அளித்ததாகவும், அவரே முழுமுதற் கடவுளாக விளங்குவார் என்றும், யார் எங்கு பூஜை செய்தாலும், அதில் கணபதிக்குத்தான் முதல் பூஜை நடக்கும் என்றும் வரம் கொடுத்தார் ஈசன்.

எப்போதுமுதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது?

விநாயகர் சதுர்த்தி எப்போதுமுதல் கொண்டாடப்படுகிறது என்று தெரியாவிட்டாலும், 16ம் நூற்றாண்டில் மன்னர் சத்திரபதி சிவாஜி ஆட்சி காலத்தில் மஹாராஷ்ட்ராவில் விமரிசையாக கொண்டாடப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் உள்ளது. பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா, தற்போதைய அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்படாவிட்டாலும், வருடாந்திர கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர்தான். 1893-ம் ஆண்டு "சர்வஜன கணேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் தொடங்கிவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை இன்றுவரை மக்கள் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிவருகின்றனர்.


விநாயகர் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழிபோட்ட பாலகங்காதர திலகர்!

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உலகளவில் நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பிள்ளையார் சுழி உணர்த்தும் தத்துவம்

எந்த செயலை தொடங்குவதற்கு முன்னும், பிள்ளையாரை வணங்கி செய்வது நம் வழக்கம். அந்த பழக்கம் செயலில் மட்டுமில்லாமல், எழுதுவதிலும் உண்டு. எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதை பெரும்பாலானோர் பின்பற்றுவர். ‘உ’ என்ற எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில்தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும், முடிவும் கிடையாது. அதுபோல் இறைவனும் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பதை இது குறிக்கிறது. வட்டத்தைத் தொடர்ந்து வரும் கோடு சற்று வளைந்து, பின் நேராகச் செல்லும். இதனை ‘ஆர்ஜவம்’ என்பார்கள். ‘ஆர்ஜவம்’ என்றால் ‘நேர்மை’ என்று அர்த்தம். எனவே ‘வாழ்க்கையில் வளைந்து கொடு, அதேநேரம் நேர்மையை கைவிடாதே’ என்பதே இதன் தத்துவம். மேலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் எந்த செயலும் நிச்சயம் வெற்றிபெறும் என்பது ஐதீகம்.


‘உ’ என்பது விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எழுத்து

விநாயகர் சதுர்த்தி 2024?

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரமாக, அன்று காலை 11 மணி முதல் மதியம் 1.34 வரை உள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ம் தேதி முடிவடைகிறது.


இந்தியாவின் பல்வேறு இடங்களில் 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை

விநாயகர் சதுர்த்திக்கு புதிய விநாயகர் சிலையை வாங்கி, அதற்கு 3 நாட்கள் முதல் ஒரு வாரம்வரை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்துவிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்துசென்று, விநாயகரை வாங்கிவந்து, சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரித்து, மேடை அமைத்து அதில் அமரவைக்க வேண்டும். பிறகு விநாயகரை அலங்கரித்து, அவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி, பாடல்களை பாடி மனமுருக வேண்டிக்கொள்ளலாம். மேலும் விநாயகருக்கு பிடித்த அவல், சுண்டல், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம்.


விநாயகரை முழுமனதுடன் வழிபட்டால் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு விநாயகப்பெருமான் அறிவையும், பொறுமையையும் அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு நபர் தனது வாழ்க்கையில் வெற்றிபெற இந்த பண்புகள் மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி, இந்நாளில் விநாயகரை முழு மனதுடன் வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சிலைகள் நீரில் கரைவதைபோல மனிதர்களின் தீய எண்ணங்களும் அழிந்துவிடவேண்டும்!

இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள்

விநாயகர் சதுர்த்தி விழா, பல்வேறு மாநிலங்களில் பந்தல்கள் அமைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெரிய பெரிய விநாயகர் சிலைகள், பல்வேறு தீம்களில் உருவாக்கப்பட்டு அந்த பந்தல்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன. மேலும் விநாயகர் பந்தல்கள் பெரும்பாலும் கலாச்சார மையக்கருத்துகளையும், சமகால பிரச்சினைகளையும் சுட்டிகாட்டும் கருப்பொருட்களுடன் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் இவை அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கின்றன. விநாயகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானதாகக் கருதப்படும் மோதகங்கள், லட்டுகள் மற்றும் பிற இனிப்புகள் தயார் செய்யப்பட்டு, விநாயகர் பந்தல்களுக்கு முன்வைத்து பூஜைசெய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. விழாவின் இறுதி நாளில், பிரார்த்தனை மற்றும் மேளதாளங்களுக்கு இடையே, பந்தல்களில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தண்ணீரில் கரைக்கப்படுகின்றன. மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் தண்ணீரில் கரைந்துவிடுவதை போன்று, மனிதர்களாகிய நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களையும், குணங்களையும், செயல்களையும் நாம் விட்டொழிந்துவிட வேண்டும் என்பதையே இந்த வழக்கம் நமக்கு உணர்த்துகிறது.

Updated On 9 Sep 2024 4:26 PM GMT
ராணி

ராணி

Next Story