இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய வாழ்க்கை சூழலில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை. உடல்நல பிரச்சினை, மனநல பிரச்சினை, பெற்றோர்களால் பிள்ளைகளுக்குப் பிரச்சினை, பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பிரச்சினை என திரும்பிய பக்கமெல்லாம் தினம்தோறும் ஏதோ ஒரு பிரச்சினைகளோடுதான் நமது வாழ்க்கையை தொடங்குகிறோம். அப்படியான பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுதான் என்ன? நமது பிரச்சினைகளுக்கான தீர்வை உடனடியாக காண்பது எப்படி? அதற்கென்று ஏதேனும் வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவா? போன்ற பல கேள்விகளை ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்திடம் முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதில்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

பிரச்சினைகளில் இருந்து உடனடியாக வெளியே வருவதற்கு தீர்வு என்ன? எந்த வழிபாட்டு முறை சிறந்தது?

பொதுவாக ஒரு மனிதன் பிரச்சினைகளில் இருந்து உடனடியாக வெளியே வர முதலில் கையில் எடுப்பது வழிபாடுதான். அந்த வழிபாடு முதலில் அவனுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். ஆனால், சில வழிபாடுகள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கும். சில வழிபாடுகள் எல்லோராலும் சாத்தியம் கிடையாது. அன்றாடம் பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் போது ஒருவரால் குறைந்தது அரைமணி நேரம்தான் ஒதுக்கி வழிபாடு நடத்த முடியும். ஆனால் முழுமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், கணபதி வழிபாடு செய்தால் உடனடி பலன்கள் கிடைக்கும். கணபதியை எப்போது வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். காலை 4.30 மணி முதல் ஐந்து அல்லது ஆறு மணிக்குள் வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்று என் குருநாதர் சொல்லுவார். அதிகாலை எழ முடியாதவர்கள், நான் சொல்லும் மந்திரத்தை உங்கள் மொபைல் போனில் ரெக்கார்டு செய்து ரிங்டோனாகவோ அல்லது அலாரமாகவோ செட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஓம் ஆதி மூல பரம குருவே.. நம் நம்.. திரி திரி.. கணபதி… சகல லோகமும், சகல ஜனனமும், சகல தெய்வமும், சகல சித்தியும், சகல புத்தியும், உமது வசம் ஆனதுபோல் நீர் என் வசம் ஆக சிவ…

இந்த மந்திரம் உடனடி பலன் தரும். அதிலும் தமிழ் மந்திரங்கள் உடனடி பலன் தரும் என்பது எனது அனுபவம். ஏனென்றால், மந்திரம் என்று சொன்னவுடன் அது வடமொழியில்தான் இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். மந்திரம் என்றால் மனதின் திறம். இந்த மனதின் திறம் எப்போது மேம்படும்? நாம் கேட்கக்கூடிய ஓசையாய், ஒளியாய், உள்ளிருக்கும் பொருளாய் என்று சொல்லுவார்கள். அதன் பொருள் என்னவென்றால் தனக்குத்தானே ஒரு நல்ல சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லும்பொழுது, அது வாழ்க்கையிலேயே நமது கனவை நினைவாக்கும்.


பிரச்சினைகளில் இருந்து விடுபட கணபதி வழிபாடு சிறந்தது

ஒரு அலுவலகத்திற்கு செல்லும்பொழுது அங்கு இருக்கும் மேல் அதிகாரி நமக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டும். வீட்டில் கணவன் - மனைவி, குழந்தைகள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தாலே, நமது வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு தானாக கிடைத்துவிடும். குளித்துவிட்டுதான் இறைவனை வழிபட வேண்டும் என்று எதுவும் இல்லை. நமது மனதை ஆல்ஃபா, பீட்டா, தீட்டா என்றெல்லாம் சொல்லுவார்கள். நாம் தூங்கும்போது நமது மனம் எந்த ஒரு தகவலை சொன்னாலும், உடனே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தெளிந்த நீரோடை போன்று ஆகிவிடும். அதனால் படுக்கையில் இருந்து எழும்பொழுதே நான் சொன்ன மந்திரத்தை மொபைலில் ஒலிக்கவிட்டோ அல்லது வாயால் சொல்லியோ விநாயகரை வணங்கிவிட்டால் போதுமானது. மந்திரம் மனதில் நிற்கவில்லை, ஒன்றுமே தெரியவில்லை என்றால் கூட பிள்ளையாரப்பா, விநாயகரப்பா என்னை காப்பாற்று கணபதியே, கஜபதியே என்று எழும்போதே சொல்லிக்கொண்டே எழ வேண்டும். இதனை பழக்கமாக்கி தொடர்ந்து சொல்ல ஆரம்பித்துவிட்டாள், ஒரு 11 நாட்களுக்கு பிறகு உங்களுக்கே தெரியும். அல்லல்கள் அகன்று, நல்லவை மலர்ந்து உங்களை சுற்றி எவ்வளவு நல்லவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன என்று.

இந்த விநாயகர் வழிபாட்டிலேயே வேறு ஏதேனும் முறைகள் இருக்கிறதா?

விநாயகரை பொறுத்தமட்டில் அவருக்கு அருகம்புல் சாற்றுவது சிறந்தது. ஆனால், பலரும் அவருக்கு அருகம்புல் சாற்றுகிறோமே உடனே பலன் தர வேண்டுமே என்று நினைப்பார்கள். அது நியாயமான கோரிக்கைதான். அருகம்புல்லை வாங்கி காலையிலேயே விநாயகருக்கு இருபுறம் மட்டுமின்றி அவரின் கையிலேயும் வையுங்கள். முக்கியமாக அவரின் தலையில் அருகம்புல்லை வைக்க வேண்டும். ஏன் என்றால் அனலாசுரன் என்பவரை அவர் விழுங்கியதால் அவரின் தலையில் இருக்கும் அனலின் வெப்பத்தை குறைக்கவே அருகம்புல்லால் வழிபடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் ஒரு தேவதையை வணங்கும்போது அதற்கு உரிய முத்திரை தெரிய வேண்டும். உள்ளங்கையை குவித்து வைத்தால் அது மோதக முத்திரை என்று சொல்லுவார்கள். விநாயகருக்கு இனிப்பு பிடிக்கும். எல்லோராலும் அவருக்கு இனிப்பு வைத்து வழிபட முடியாது. அதற்கு பதிலாகத்தான் இந்த முத்திரையை செய்து விநாயகரை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். அதேபோல் தோப்புக்கரணம் என்று சொல்லக்கூடிய இருபுறமும் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணத்தை போட்டு இருபுறமும் தலையில் கொட்டிக்கொள்ளலாம். இப்படி மூன்று முறை செய்து வழிபட்டாலும் போதுமானது. சிலர் ஒன்பது முறை கூட செய்வார்கள். அது நமது உடல் நிலையை பொறுத்தது. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்ல கேட்டிருப்போம். இதன் உண்மையான பொருள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வழிபடுபவர்களுக்கு மரணம் கூட தள்ளிப்போகும் என்பதுதான்.


விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது சிறந்து - ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்

பிள்ளையாரின் தும்பிக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நமக்கு யாராவது கெடுதல் செய்தால் அவர்களிடம், உன் மூச்சு காத்துக்கூட என்மீது படக்கூடாது என்று சொல்லுவோம். அப்படி சொல்வதற்கு காரணம் அந்த மூச்சுகாற்று வழியாகத்தான் கர்மா என்பது ஒருவரை சென்று தாக்குகிறதாம். ஆனால், கணபதியை வழிபடும்போது அந்த பாதிப்புகள் நமக்கு வராது. முடிந்தவரை நம் வீட்டு வாசலிலேயே ஒரு சிறிய கணபதியை வைத்தால் நல்லது. சூரியனும் - கேதுவும் சேரும்போது தோஷம் என்று சொல்லுவார்கள். அப்படி தோஷத்தால் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் சிறிய அளவிலான வெள்ளை எருக்கு விநாயகரை வாங்கி வந்து வழிபடலாம். அதை பூஜை அறையில் வைத்துதான் வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. மிகவும் உயரத்தில் வைக்காமல், குளிர்சாதனபெட்டி மேலேயோ அல்லது ஒரு 5 அடி உயரத்திலேயோ நம் கண் படும்படி வைத்து தினமும் காலை எழுந்து அவரை வணங்கிவிட்டு ஓம் ஸ்ரீ சிவ சூரிய நாராயண சுவாமியே நமக என ஒரு ஒன்பது முறை சொல்லி வந்தால் வெகு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

அதே போல், சிலர் எங்கள் வீட்டில் திருஷ்டி, செய்வினை போன்ற தோஷங்கள் இருக்கிறதோ என்று அஞ்சக்கூடும். விநாயகர் அகவல் என்று கூகுளில் தேடினால் வந்துவிடும். காலை வேலையிலேயே அந்த விநாயகர் அகவல் பாடலை வீட்டில் ஒலிக்கவிட்டால் போதும். அந்த பாடலை தினமும் ஒரு பத்து நிமிடம் கேட்கத் தொடங்கினால் வாழ்க்கையில் உங்கள் சொல்லை அடுத்தவர்கள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். விநாயகருக்கு மற்றவர்களை உங்கள் வசம் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் சக்தி உண்டு. எனவே விநாயகரை நீங்கள் பற்றிவிட்டால், உலகம் உங்களை பற்ற தொடங்கும்.

லட்சுமி உபாசனை செய்தால் பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் என்று சொல்லுவார்கள். அந்த மகாலட்சுமி உபாசனை செய்வது எப்படி?

மகா கருணை வடிவானவள் அன்னை மகாலட்சுமி. இலக்கு இருந்தால் இலக்குமி வருவாள். இன்றைய இளைஞர்கள் ஒரு 5 ஆயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி என்றெல்லாம் கனவு காண மறுக்கிறார்கள். எலான் மஸ்க் என்று ஒருவர் இருக்கிறார். செவ்வாய் ராகு சேர்க்கை, செவ்வாயில் கால் பதிப்பேன் என்றார். அவரது அந்த இலக்கு அவருக்கு இலக்குமியை தேடி தந்தது. கலியுகத்திலே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வழிபாடு மகாலட்சுமியின் வழிபாடு. மகாலட்சுமியின் மந்திரங்கள் மிகவும் எளிமையானவை. அவை இன்று யூடியூப் தளங்களில் அதிகமாக கிடைக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மகாலட்சுமி மந்திரத்தை வேகமாக சொல்ல கூடாது. அப்படி சொல்லும் போது செல்வம் வேகமாக வந்துவிட்டு, வந்த வேகத்திலேயே திருப்பி போய்விடும். மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிக்கும்போது உடல் தூய்மை மிக மிக அவசியம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1-ல் இருந்து 2-க்குள், சுக்கிர ஓரையில் எந்த இடத்தில் இருந்தாலும் மகாலட்சுமியை மனதார நினைத்து உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லலாம். தாமரை பூ மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒரு மலர். எல்லோராலும் தாமரை பூவை கடைக்குச் சென்று வாங்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நமது இரு கைகளையும் குவித்து தாமரை போன்ற வடிவத்தில் மேல்நோக்கி வைத்து (பத்ம முத்திரை வடிவத்தில்) அம்மா மகாலட்சுமியே என்று ஒரு 5 நிமிடம் வழிபட்டால் பணம் தானாக வர ஆரம்பித்துவிடும். (அந்த பத்ம முத்திரையை நாம் செய்யும்போது அந்த குபேரனே செய்ததாக அர்த்தமாகுமாம்)


கருணையே வடிவான அன்னை மகாலட்சுமி

அதேபோல் நீரின்றி அமையாது உலகு என்று சொல்லப்படுவது நம் வழக்கத்தில் உள்ளது. நீர் இல்லாமல் இந்த உலகம் இயங்குவது இல்லை. அப்படி இருக்கும் பொழுது இரண்டு தண்ணீர் பாட்டில்களை வைத்து அம்மா மகாலட்சுமி... என்றேனும், ஏதேனும் காலத்தில் நான் தண்ணீரை வீணாக்கியிருந்தால் என்னை மன்னித்து வீட்டிலேயே தங்கு, செல்வமே தங்கு என்று சொல்லி தண்ணீரை மதிக்கத் துவங்கினாள் மகாலட்சுமி நம்மிடம் வந்துவிடுவாள். நம் கரத்திலே தங்கிவிடுவாள்.

மற்றொன்று நம் கையிலே மருதாணி இடக்கூடிய பழக்கம் இருக்கிறது. அது மிகவும் நல்ல பழக்கம். நம் கையிலேயே மகாலட்சுமி வசிக்கிறாள். அப்படியிருக்கும் பொழுது கையிலே மருதாணி இட்டு அம்மா மகாலட்சுமி பெரும் செல்வம் பெருகட்டும் என்று சொன்னால் கட்டாயம் அருளுவாள். வாழ்க்கையிலேயே செல்வநிலை பெரிதாக துவங்கும். இதுதவிர, சிலர் எனக்கு சரியாக தூக்கம் வரவில்லையே என்று கூறுவார்கள். காரணம் ஜாதகத்தில் சனீஸ்வரனுடைய வலிமை அதிகமாகியிருக்கும். அப்போது நமது ஆள்காட்டி விரல் நகத்தில் வாசனை திரவியம் ஏதாவது ஒன்றை தடவிக்கொண்டு அம்மா மகாலட்சுமி எனக்கு நிம்மதியான தூக்கத்தை தா... செல்வத்தை தா... என்று வேண்டும்பொழுது செல்வம் தங்க துவங்கிவிடும். அந்த அளவுக்கு இந்த நகங்களுக்கு வலிமை இருக்கிறது. நமது நகக்கண்கள் தூய்மையாக இருந்தாலே மகாலட்சுமி நம்மிடம் ஓடோடி வந்துவிடுவாள்.


மகாலட்சுமியை வழிபடும்போது உடல் தூய்மையும், உள்ளத் தூய்மையும் அவசியம் - ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்

இவற்றையெல்லாம் விட இன்னும் முக்கியமானது ஒன்று உள்ளது. அது என்னவென்றால் மகாலட்சுமி மூன்று பொருட்களில் வாசம் செய்வதாக சொல்லுவார்கள். ஒன்று துடைப்பம். துடைப்பம் என்றால் பெருக்குதல் என்று பொருள். பெருக்குதல் என்றால் செல்வம் பெருகட்டும் என்று அர்த்தம். அப்படிப்பட்ட துடைப்பத்தை மறைவாக வைத்து ஒவ்வொருமுறை எடுத்து பெருக்கும்பொழுதும் அதை வணங்கி செல்வத்தை கொடு என்று கூற வேண்டுமாம். அதேபோல் உப்பை மதிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் உப்பை ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு வாங்கி வீட்டுக்கு பயன்படுத்த வேண்டும். உப்பு - நீர் இரண்டையும் ஒரே மாதிரி பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக முன்பெல்லாம் அடுப்பை துடைத்து மொழுவி பூக்கோலமிட்டு வணங்கி பற்றவைத்து பிறகு சமைக்க தொடுங்குவார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை. நாம் நமது அடுப்பை வணங்காவிட்டாலும் அதற்கு ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும்.

Updated On 5 Aug 2024 10:37 PM IST
ராணி

ராணி

Next Story