இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை ஒன்றாம் நாள் விளங்குகிறது. இது தமிழ் புத்தாண்டு என்றும், சித்திரை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது. 'சித்திரையே வா, மக்கள் வாழ்வில் முத்திரை பதிக்க' என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த மாதம் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் மாதமாக உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை மாதத்திற்கு இல்லை என்று சிலர் கூறினாலும், அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சித்திரை ஒன்றை, தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சித்திரை ஒன்றின் சிறப்பு

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள்தான் சித்திரை 1. சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனிற்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

"குரோதி" வருட பிறப்பு

ஆங்கில ஆண்டுகள் எண்களால் குறிப்பிடப்படும் நிலையில், தமிழ் ஆண்டுகள் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் ஆண்டுகளாக பிரபவ, விபவவில் தொடங்கி அக்ஷய வரை 60 ஆண்டுகள் இருக்கின்றன. “அறுபது வருட வெண்பா” என்று தமிழ் ஆண்டுகள் தொடர்பான வெண்பா, இடைக்காடர் என்ற சித்தரால் பாடப்பட்டுள்ளது. இந்த 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ள "குரோதி" வருடம் விரைவில் பிறக்க உள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் "சோபகிருது" வருடம், வரும் பங்குனி 31-ம் தேதி (13.4.24) இரவு 8.10 மணிக்கு துலா லக்கினத்தில் சனி ஓரையில் முடிவடைந்த பிறகு, குரோதி புத்தாண்டு பிறக்கிறது.


சூரியனின் பயணம் கிழக்கில் ஆரம்பிக்கும் நாள்தான் சித்திரை 1

பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, சூரியன் மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

சாமி கும்பிட உகந்த நேரம் எது?

மங்களகரமான ஸ்ரீ குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, 14-04-2024 அன்று, சித்திரை திங்கள் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. . அன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை சாமி கும்பிட நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை 1 வழிபாட்டு முறை

சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு வீட்டின் பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு, மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள் மற்றும் நெல், நகைகள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது. சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு விளக்குகளை ஏற்றி வைத்து, பின்பு வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்லி, பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜையில் வைத்துள்ள மங்களப் பொருட்களையும் தரிசிக்கும்படி செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக உள்ளது. இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் என்பதும், மங்கலப் பொருட்கள் செழித்து பெருகும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

"அறுசுவை உணவு"! "வாழ்க்கை உணவு"!

சித்திரை புத்தாண்டு தினத்தில் இறைவனுக்கு படையலிட்டு உண்ணும் உணவில் அறுசுவைகளும் இடம்பெறுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அனைத்து சுவைகளும் அடங்கிய உணவு சமைக்கப்படும். பொதுவாக நல்ல நாட்களில் கசப்பான உணவுகள் சமைக்கப்படாத நிலையில், தமிழ் புத்தாண்டு அன்று மட்டும், கசப்புக்காக பாகற்காய், வேப்பம்பூ உள்ளிட்டவை அன்றைய உணவில் சேர்க்கப்படுகின்றன. அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.


தமிழ் புத்தாண்டில், கசப்பையும் சேர்த்து அறுசுவையுடன் இறைவனுக்கு படையலிட்டு வணங்கும் மரபு

பஞ்சாங்கம் படித்தல்

வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள். தினமும் படிக்க முடியாவிட்டாலும் வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். ஒவ்வொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் 5 விஷயங்களைத் தெரிந்துகொண்டு செய்யவேண்டும் என்று சொல்கிறது பஞ்சாங்கம். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என 5 விஷயங்களையும் அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வது நலம் பயக்குமாம். ஆயுள் விருத்தி, செல்வச்செழிப்பு, காரிய சித்தி மற்றும் பாவ நிவர்த்தி ஏற்படுவதுடன், நோய்கள் குணமடையும் என்றும் நம்பப்படுகிறது.

குரோதி ஆண்டு எப்படி இருக்கும்? பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

குரோதி ஆண்டு வெண்பா என்ன சொல்கிறது என்றால், "கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்”. இதற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை, களவு, பகை பெருகும், திருடர்கள் மக்களை தாக்குவார்கள், பயம் மிகுதியாகும். பருவமழை குறைவாகவே பொழியும் என்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி பார்த்தோமேயானால், இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பின்போது, குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடைபெறும் மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே இருக்கும் என்று நம்பலாம்.


புத்தாண்டு தினத்தில் தானம் செய்து வழிபடுவதுடன், நகைகளை வாங்குவது செல்வ வளத்தை பெருக்குமாம்

பெரியவர்களிடம் "கை விசேடம், கை நீட்டம்"

சித்திரை மாதம் முதல் நாள், கை விசேடம், கை நீட்டம் என்ற ஒரு பழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா உள்ளிட்ட வீட்டுப் பெரியவர்களின் காலில் சிறியவர்கள் விழுந்து ஆசி பெற்று, பெரியவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தை செலவு செய்யாமல் சிலர் பத்திரப்படுத்தியும் வைத்துக்கொள்வர்.

தானம் செய்து வழிபட்டால் "மிகப்பெரிய முன்னேற்றம்"

தமிழ் புத்தாண்டு நாளில், பிறருக்கு தானம் செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம். தண்ணீர், மோர், குடை, செருப்பு, உணவு உள்ளிட்ட அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு, நம்மால் முடிந்தவற்றை மக்களுக்கு வழங்கி வழிபாடு செய்யலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, உணவு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு தினத்தில் இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சி மிகுந்த பானங்களை தானம் செய்வதால், வாழ்க்கையில் நமக்கு உணவு பஞ்சம் ஏற்படாது என்று முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்கினால் குறையாத செல்வம் நம்மைத் தேடி வரும் என்றும், மஞ்சள், குங்குமம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தால், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

Updated On 15 April 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story