இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிறை தெரிவதன் அடிப்படையில்தான் அனைத்து இஸ்லாமிய பண்டிகைகளும் கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய இறை தூதரான முகம்மது நபியின் பிறந்தநாளைத்தான் மிலாடி நபி அல்லது மீலாதுன் நபி என்று கொண்டாடுகின்றனர். இந்த நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதுடன், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி மகிழ்விப்பர். இந்த நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, முகமது நபி குறித்த போதனைகள் மற்றும் அவரது சிறப்புகள் குறித்து பகிரப்படும். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைத்து, அவர்களுடைய மத நூலான குர்ஆனை வாசித்து தியானிப்பர். அரசால் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படும் மிலாடி நபியின் சிறப்புகள் குறித்தும், முகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்தும் பார்க்கலாம். மேலும் பிறந்தநாளை கொண்டாடுவது இஸ்லாத்தில் பெரிதும் போற்றப்படுவதில்லை என்று கூறப்படும் ஒருசாரார், இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமுண்டு. அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

முகம்மது நபியின் வரலாறு

கி.பி 570ஆம் நூற்றாண்டில், இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவல் மாதத்தின் 12ஆம் நாளில் மக்காவில் பிறந்தவர் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம். இவருடைய பெற்றோர் அப்துல்லா - ஆமினா. அப்துல்லா என்றால் கடவுளின் அடிமை என்று பொருள்படும். அதேபோல் ஆமினா என்றால் அமைதி மற்றும் பாதுகாப்பு என்று பொருள்படும். ஆமினா குரைஷி (அரபு நாட்டின் ஒரு பழங்குடி இனம்) இனத்தின் உன்னதப் பெண்ணாக போற்றப்படுகிறார். எப்போது ஆமினா வயிற்றில் முகம்மது கருவுற்றாரோ அந்த நாளிலிருந்தே மக்காவின் அனைத்து சிலைகளும் தரையில் வீழ்தல், கிஸ்ரா என அழைக்கப்படும் பாரசீக மன்னரின் அரண்மனை அதிர்தல், 1000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்துகொண்டிருந்த 14 சரவிளக்குகள் அணைந்துபோனது என்பது போன்ற பல அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. குரைஷி பழங்குடியினரிடையே, தங்கள் குழந்தைகளை பெடூயின் பழங்குடியினரிடத்தில் அனுப்பும் வழக்கம் இருந்தது. அங்கு ஹலிமா அல் - சாதியா என்பவரால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டார் முகம்மது. முகம்மது எங்கெல்லாம் சுற்றித் திரிந்தாரோ, யாருடனெல்லாம் பழகினாரோ அங்கெல்லாம் ஆசிர்வாதங்கள் பொழிந்தன. இஸ்லாமியர்கள் காலங்காலமாக அரபுமொழியை கற்றுக்கொள்ள குழந்தைகளை மெக்காவில் கொண்டுசென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் முகம்மதுவை மெக்காவில் விட சென்ற சமயத்தில் அங்கு ஒருவகை தொற்று பரவ, அவரால் குறிப்பிட்ட வயதில் அங்கு செல்லமுடியவில்லை.


மக்காவில் பிறந்த முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்

முகம்மது பிறப்பதற்கு முன்பே அவருடைய தந்தை அப்துல்லா இறந்துவிட, அல் - மதீனாவுக்கு சென்றுவிட்டு மெக்காவுக்கு திரும்பும் வழியில் முகம்மதுவின் சிறுவயதிலேயே தாயார் ஆமினாவும் இவ்வுலகைவிட்டு சென்றுவிட்டார். அவரை எடுத்துவளர்த்த அப்துல் முத்தாலிப் என்பவரும் இறந்துவிட முகம்மது வாழ்க்கையின் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் முத்தாலிபின் உறவினரான அபு தாலிப், முகம்மதுவை தனது சொந்த மகனைப்போலவே வளர்த்தார். அதன்பிறகு 10 -12 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சிலகாலம் செம்மறியாடுகளை மேய்த்த முகம்மது, அங்கு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கூடவே மக்களை வழிநடத்தும் திறமையையும் கற்றுத்தேர்ந்தார். 12 வயதில் அபு தாலிப்புடன் வணிகம் தொடர்பாக சிரியாவிற்கு சென்ற முகம்மதுவை பார்த்த கிறிஸ்த்தவ துறவி பாஹிரா என்பவர், அந்த சிறுவனுக்குள் ஒரு வருங்கால தீர்க்கதரிசி இருப்பதாக கூறி வாழ்த்தினார். அதன்பிறகு 25 வயதுவரை வணிகத்தை கற்றுத்தேர்ந்து சிறப்பாக செயல்பட்ட முகம்மதுவின் திறமையால் ஈர்க்கப்பட்ட 40 வயதான கதீஜா என்ற பணக்கார கைம்பெண்ணிற்கு அவர்மீது காதல் ஏற்பட, அவரை திருமணமும் செய்துகொண்டார்.


முகம்மது மீது காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்ட கதீஜா

திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் தன்னுடைய 40 வயதை நெருங்கிய சமயத்திலிருந்தே அடிக்கடி மக்காவிற்கு அருகில் 3 மைல் தூரத்திலிருந்த ஹிரா என்ற குகைக்கு சென்று வருவதை வழக்கமாக்கி இருந்தார் முகம்மது. அங்கு ஓய்வு எடுப்பது, தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகளை ஏறெடுப்பது என பெரும்பாலான நேரத்தை கழித்தார். இப்படி இருந்த சமயத்தில்தான் ஒருநாள் தேவதூதன் தோன்றி இறைவனின் பணியில் ஈடுபட அழைத்தார். ஆனால் அந்த அழைப்பினால் ஆரம்பத்தில் கலக்கமடைந்திருந்த முகம்மதுவிடம் தொடர்ந்து தோன்றிய தேவதூதன், மூன்று ஆண்டுகளானபோது பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த வலியுறுத்தினார். இந்த பொது பிரசங்கத்திலிருந்து தொடங்கியது முகம்மது நபியின் பயணம். இஸ்லாமிய மதத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து மக்களுக்கு உபதேசித்து வந்த இவர், தொடர்ந்து குர்ஆன் வேதநூலை பிரசித்திப்படுத்தி, அல்லாஹ்வை தவிர வேறு கடவுளே இல்லை என்ற மத நம்பிக்கையை மக்கள் மனதில் வேரூன்ற செய்தார். இப்படி தனது இறைப்பணியில் சிறந்து விளங்கிய முகம்மது நபி, கிறிஸ்தவ வழியில் தோன்றி உயிருடன் பரலோகம் சென்ற ஆபிரகாம் வம்சாவளியான மோசஸ், இயேசு போன்றே எருசலேமுக்குச் சென்று, அங்கிருந்து பரலோகத்திற்கு ஏறிச்சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. அங்கு அவரிடம் இறைவன் ஒருநாளைக்கு 5 முறை தொழுகை செய்யவேண்டுமென கூறியதாலேயே இன்றுவரை இஸ்லாமியர்கள் தினசரி 5 வேளை தொழுகை செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும் முகம்மது நபியை அன்றிலிருந்தே நபிகள் நாயகம் என்றும் அன்போடு அழைக்கின்றனர்.


இறைவனின் கட்டளைப்படி ஒரு நாளில் 5 முறை தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள்

மிலாடி நபியை கொண்டாடலாமா? கூடாதா?

நபி என்றால் இறைதூதர் என்று அர்த்தம். முகம்மது நபிக்கு முன்பே பல நபிமார்கள் வாழ்ந்ததாக இஸ்லாமிய வரலாறுகள் கூறுகின்றன. நபிமார்களை பொருத்தவரை தனது பிறந்தநாளை வெளிப்படுத்துவதோ அல்லது அந்த நாளை கொண்டாடுவதோ வழக்கத்தில் இல்லை. அதேபோலத்தான் நபிகள் நாயகம் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றும், தனது நாட்டு மக்களிடம் தனது பிறந்தநாளை கொண்டாட சொல்லவும் இல்லை எனவும் இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதனால்தான் இஸ்லாமியர்களின் சிறப்பான மூன்று தலைமுறைகள் என போற்றப்படுகிற ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தபு தாபியீன்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமியர்களிடையே பிறந்தநாளை கொண்டாடும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது. அதனாலேயே நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இன்றுவரை சிலர் கொண்டாடுவதில்லை. மேலும் அவருடைய பெற்றோரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், இப்போது நபிகள் நாயகத்தின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிற ரபி உல் அவல் மாதத்தின் 12ஆம் நாள்தான் அவருடைய பிறந்தநாள் என்பதற்கான நம்பத்தகுந்த சான்றுகளும் இல்லை என்கின்றனர். அப்படியிருந்தும் மிலாடி நபி கொண்டாடும் பழக்கம் எங்கிருந்து வந்தது? என கேள்வி பலருக்கும் இருக்கிறது.


இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடும் முறை

மிலாடி நபி எப்படி கொண்டாடப்படுகிறது?

இஸ்லாமியமும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே பகுதியில் மிகக்குறுகிய கால இடைவெளியில் தோன்றி உலகம் முழுக்க பரவிய மதங்கள் எனலாம். ஆனால் இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சிலை வழிபாட்டை பின்பற்றிய எகிப்தியர்கள் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மோசேயின் வழிநடத்துதலால் எகிப்தில் அடிமைகளாக்கப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் மீட்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து அவர்கள் கற்றுவந்த பழக்கங்களில் ஒன்றாகிப்போனது இந்த பிறந்தநாளை கொண்டாடும் முறையும். அப்படி காலங்காலமாக இஸ்ரவேலர்கள் பின்பற்றும் வழக்கமான பிறந்தநாளை இயேசுகிறிஸ்துவுக்கும் கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடினர். அதன்பின்பு ஹிஜ்ரி 385இல் ஃபாத்திமியாக்கள் என்ற இனத்தவர் கிறிஸ்தவர்களிடமிருந்து பிறந்தநாளை கொண்டாடும் முறையை கற்றுக்கொண்டனர். அப்படித்தான் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபி அல்லது மீலாதுன் கொண்டாட்டம் என்ற பெயரில் பின்பற்ற ஆரம்பித்தனர். அதன்பின்பு ஹிஜ்ரி 595ஆம் ஆண்டு ஈராக்கை சேர்ந்த ஒரு நபர்தான் உலகம் முழுக்க வாழும் இஸ்லாமியர்களிடையே நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக்கினார் என்கின்றனர் இஸ்லாமிய மதத்தவர்கள். அந்த நபர்தான் ஃபாத்திமியாக்களால் உருவாக்கப்பட்ட மவ்லிது பாடல்களையும் உலகிற்கு பரப்பினார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இஸ்லாமியர்களிடையே ஃபாத்திமியாக்கள் என்ற இனத்தவர்மீது நன்மதிப்பு இல்லை என்பதையும் மற்ற இனத்தவர் பலவழிகளில் வெளிப்படுத்துவதை இன்றுவரை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.


புனிதத்தலமாக பார்க்கப்படுகிற நபிகள் நாயகம் பிறந்த மக்கா

இப்படியிருக்கையில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் எது என்பது குறித்த கேள்வியானது இன்றுவரை பல இஸ்லாமியர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நபிகள் நாயகம் வாழ்ந்த நாட்களிலிருந்தே அவரை உயிருக்கு உயிராக நேசித்த ஸஹாபாக்கள் அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் செயலையும் எழுதி வைத்திருக்கின்றனர். நபிகள் நாயகம் இன்றுவரை இறக்கவில்லை, நேரடியாக பரலோகத்திற்கு ஏறிப்போனார் என்று ஒருதரப்பினர் கூறினாலும், இந்த ஸஹாபாக்கள் அவர் இறக்கும் தருவாயில் என்னென்ன கூறினார், எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் தெளிவாக பதிவு செய்திருக்கின்றனர். கி.பி 632இல் இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவல் மாதத்தின் 12ஆம் நாளில்தான், அதாவது முகம்மது நபி பிறந்தநாளிலேயேதான் அவர் இறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அவருடனே வாழ்ந்த ஸஹாபாக்களுக்குக்கூட முகம்மது நபியின் பிறந்தநாள் எது என்றே தெரியாது என்பதாலும், அந்த காலத்தில் அரபு மக்களிடையே பிறந்தநாளை குறித்துவைக்கும் பழக்கம் இல்லையென்பதாலும், இஸ்லாமியர்கள் பலர் மிலாடி நபியை கொண்டாடுவதில்லை.

Updated On 23 Sept 2024 11:00 PM IST
ராணி

ராணி

Next Story