இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நவராத்திரி என்றாலே சிறப்புதான். அதிலும் இந்த ஆண்டு நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குருவின் பார்வை சூரியன்மேல் படுகிறது. இந்த நவராத்திரி நாட்களில் பெண்கள் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் மற்றும் பரிசுகளை வழங்குவார்கள். அப்படி செய்யமுடியாதவர்கள் என்ன செய்யலாம்? நவராத்திரிக்கும், நவகிரகங்களுக்குமான தொடர்பு என்ன? பெண்கள் மட்டுமே கொண்டாடக்கூடிய பண்டிகையாக பார்க்கப்படுகிற நவராத்திரியை ஆண்களும் கொண்டாடலாமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.

நவராத்திரிக்கும் நவகிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?

கட்டாயம் தொடர்பு இருக்கிறது. மனிதர்கள் பல்வேறு நவகிரக தோஷங்களால் அவதிப்படுவதாக கவலைப்படுகிறார்கள். இதற்கு எளிமையான தீர்வாக அமைகிறது நவராத்திரி. யார் தினமும் பவானித்துவம் என்று பொருள்படுகிற, ‘யான் உன்னுடையவன்’ என்ற வார்த்தையை மனதார மூன்று முறை சொல்கிறார்களோ, அவர்களுக்கு அனைத்து நலத்தையும் வளத்தையும் சதாசிவன் என்றென்றும் அருளுவார் என்று ஆதிசங்கரர் கூறியிருக்கிறார். எனவே பராசக்தியின் நன்னாளாக பார்க்கப்படுகிற இந்த நவத்திரி நாட்களில் எப்போதெல்லாம் இயலுமோ அப்போதெல்லாம் அன்னை பவானியை நினைக்கலாம். அதேபோல், மதுரை மீனாட்சியை ராஜ மாதங்கி என்கின்றனர். அகத்தியர் தினமும் ஆரத்தி எடுத்து வழிப்படக்கூடியவள் இவள். மாதங்கி என்று சொன்னால் சூரியனுடன் தொடர்புடையவள் என்று அர்த்தம். எனவே யாருக்கெல்லாம் ஜாதகத்தில் கண்கள், எலும்புகளில் பிரச்சினை, வேலை செய்யக்கூடிய இடத்தில் பிரச்சினை போன்ற சூரியன் சம்பந்தப்பட்ட தோஷம் இருக்கிறதோ, அவர்கள் சூரியனுக்கே அதிபதியான ராஜ மாதங்கியை வழிபட வேண்டும். இரண்டுவிதமான சரஸ்வதிகள் உண்டு. ஒரு சரஸ்வதி வெளிமுக அறிவை தரக்கூடியவள், மற்றொரு சரஸ்வதியான உச்சிஷ்ட சரஸ்வதி என்று சொல்லக்கூடிய ராஜ மாதங்கி, உள்ளே இருக்கக்கூடிய ஞானத்தை தரக்கூடியவள். நவராத்திரி காலங்களில் பட்டம் விடுவதுண்டு. மேலே பட்டம் பறக்கும், கீழே நாம் இருப்போம், ஆனால் அதற்கு நடுவில் மெல்லிய நூல் ஒன்று இரண்டையும் இணைக்கும். அதை சூத்திரம் என்பர். இந்த சூத்திரம் என்னவென்றால் ஒவ்வொரு தினத்திற்கும் உண்டான தேவதைகளின் பெயரை சொல்லிவிட்டாலே போதும், வாழ்க்கை நன்றாக இருக்கும். மேலும் நாம் அரசனாக விரும்பினால் ராஜ மாதங்கியை வழிபட வேண்டும். சிலர் தன்னிடம் ஜாதகமே இல்லை, அதனால் என்ன தசா புத்தி என்றே தெரியவில்லை என்று சொல்வார்கள். எந்த கிரகத்தின் தசா புத்தி நடந்தாலும் அதில் முக்கியமாக இருக்கக்கூடியவர் சூரியன். எனவே அவர்கள் ராஜ மாதங்கியை வழிபட்டாலே போதும். இவளுடைய மறு வடிவமான உச்சிஷ்ட சரஸ்வதிக்கும் உச்சிஷ்ட கணபதிக்கும் அன்பு மட்டுமே பிரதானம். எனவே மனதார வேண்டினாலே நவராத்திரியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.


நவராத்திரிக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு

இரண்டாவது புவனேஸ்வரி என்பவள் சந்திரனுடன் தொடர்புடையவள். புவனம் என்று சொன்னால் அண்டசராசரங்களையும், பிரபஞ்சத்தையும் குறிக்கக்கூடியது. பிரம்மாண்டம் என்று சொன்னால் அது பிரம்மனுக்குரியது. ஆனால் அதைத் தாண்டியும் இருக்கக்கூடியது புவனம். இவள்தான் சந்திரனுக்கு அதிபதியானவள். அடுத்ததாக வரக்கூடியவள் சோடஷி. இவள் புதனுடன் தொடர்புடையவள். நாடி நரம்புகள், சருமம் போன்றவற்றை புதனுடன் தொடர்புபடுத்துகின்றனர். எனவே யாரெல்லாம் நவராத்திரி சமயத்தில் சோடஷி மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அடுத்து சுக்கிரன். எல்லா கிரகங்களும் கடிகார திசையில் சுற்றினாலும் சுக்கிரன் மட்டும் அதற்கு எதிர்திசையில் சுற்றும். வாழ்க்கையில் ஆடம்பரம், சொகுசு, வசதிகள் போன்றவற்றை பெற மகாலட்சுமியை தேடவேண்டும். மகாலட்சுமியின் தாந்த்ரீக வடிவமான கமலா, கமலாயதாக்‌ஷி என்ற பெயர்களை சொல்லிவிட்டாலே போதும் அவள் காப்பாற்றிவிடுவாள். அடுத்து வருகிற செவ்வாய், உடலில் அங்ககாரகனாகவும், குருதியாகவும் இருக்கிறவன். கடன், வம்பு, வழக்குகளிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடியவன். எதிரியை நமக்கு எதிராக பேசவிடாமல் ஸ்தம்பனம் செய்ய அருளக்கூடியவள் வல்காமுகி பகளாமுகி. இவளிடம் வேண்டினாலே செவ்வாயின் பிரச்சினை பெருமளவு தீர்ந்துவிடுவதை உணரலாம். அடுத்து கேது. தூமாவதியைத்தான் கேது என்று சொல்கிறார்கள். விதவைத் திருக்கோலத்தில் இருக்கும் இவள், சுடுகாட்டிலே வசிக்கிறவள். கையில் முறத்தால் அரிசியை புடைத்துக்கொண்டிருப்பவள். மனிதன் அழிந்தால் மீண்டும் பிறப்பான் என்பதை உணர்த்தக்கூடியவள் இவள். குருவிற்கு தாரா என்பவளை வழிபட வேண்டும். அதிக ஞானம் வேண்டுமென்பவர்கள் இவளையோ அல்லது ஸ்கந்த மாதாவையோ கும்பிட வேண்டும். வெளிநாட்டு யோகம் வேண்டுமென்பவர்கள் தாரா என்கிற நீல சரஸ்வதியை நவராத்திரி நாட்களில் தேடவேண்டும்.


உடலில் பிரச்சினை இருப்பவர்கள் தேடவேண்டிய தேவி சோடஷி

நமக்கு எல்லாம் தெரியவில்லை என்றாலும் அந்தந்த கிரகங்களுக்குரிய தேவதைகளின் பெயர்களை நவராத்திரி நாட்களில் சொல்லிக்கொண்டிருந்தாலே பலன் கிடைக்கும். அதேபோல் சாமுண்டா என்று சொல்கிறோம். இதற்கு ‘சண்ட - முண்ட’ என்று பொருள். சண்ட என்றால் அதீத கோபம் வருதல். அதுவே முண்ட என்றால் மன அழுத்தம் ஏற்படுதல். இப்படி மனித வாழ்க்கையே அதீத மகிழ்ச்சி அல்லது அழுத்தத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்தோஷமோ துக்கமோ இல்லாமல் சமநிலையிலேயே வாழ்க்கையை எடுத்துச்செல்வதால்தான் அவளுக்கு சாமுண்டீஸ்வரி என்று பெயர். அடுத்து மகிஷாசுரமர்த்தினி. மகிஷ என்றால் எருமை என்று அர்த்தம். நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீக்குபவள் இவள். ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒவ்வொரு நன்மையும், அதற்கு குறியீடுகளும் உண்டு. தேவதைகள் என்பவர்கள் நம்மைத்தாண்டிய இணை பிரபஞ்சங்களில் இருப்பவர்கள். அங்கு ஏதோ ஒரு செயல் நடந்துகொண்டிருக்கும். அதுபோல எதில் நம் மனம் லயிக்கிறதோ அது நம் வாழ்க்கையிலே உற்பத்தியாகிறது. எனவே உலகம் சார்ந்தவற்றில் மனம் லயிக்கவேண்டும். ஏனென்றால் ஏதேனும் ஒன்றை நாம் உற்பத்தி செய்துகொண்டே இருந்தால்தான் நாம் இருப்பதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது ஒரு கலையாகவோ, இலக்கியமாகவோ, தொழிற்சாலையாகவோ இருக்கலாம். இப்படி நாம் ஏதேனும் ஒரு செயலை செய்வதை நியாசம் என்கின்றனர். அந்த நியாசத்தை நமக்குள் தேடத் துவங்குவதையே சன்னியாசம் என்கின்றனர். எனவே வாழ்க்கையில் தேடுதலின் காரணத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது நவராத்திரி. அதனால்தான் 9 படிக்கெட்டுகளை வைத்து, அதன்மூலம் ஒவ்வொரு நிலையாக முன்னேறி மனித நிலையிலிருந்து தேவ நிலையை அடையவேண்டும் என்பதை உணர்த்துகிறோம். ஆனால் ஒவ்வொரு படிக்கெட்டில் ஏறும்போதும் அதற்கு கீழே உள்ள படிக்கெட்டுகளும் முக்கியம், அதேபோல் மேலே உள்ள படிக்கெட்டுகளும் முக்கியம் என்பதை மறக்கக்கூடாது. படிக்கெட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளில் நாமும் ஒருவர்தான். எந்தவொரு பொம்மையும் தனித்து இருந்தால் மகத்துவம் கிடையாது. அனைத்தும் சேர்ந்திருந்தால்தான் நாம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


சுமங்கலி பெண்களுக்கு நவராத்திரி நாட்களில் அளிக்கப்படும் தாம்பூலம்

நவராத்திரியில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பார்கள். அதை எப்படி செய்வது? அதற்கு வசதியில்லாதவர்கள் என்ன செய்யலாம்?

நவராத்திரியன்று மாலை வீடுகளில் தங்களுக்கு தெரிந்த இறைப்பாடல்களை பாடலாம். அதேபோல் நவராத்தியன்று குழந்தைகளை மதிக்கவேண்டும். ஏனென்றால் குழந்தைகள் அனைவருமே அம்பிகை பராசக்தியின் வடிவம் என்றே கருதவேண்டும். பராசக்தி பெரிதாக செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டாள். பெண் வெற்றிலையை வாங்கி அதில் இரண்டு கொட்டைப்பாக்கை வைத்து பராசக்தியை வழிபட்டாலே அனைத்து சுமங்கலிகளுக்கும் தாம்பூலம் தந்தது போன்ற பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் அவரவர் வசதிக்கேற்றபடி, பழங்கள், சேலை, துணிவகைகளை தரலாம். எதுவுமே வாங்கமுடியாதவர்கள், ‘சர்வ மங்கள மாங்கல்யே’ என தொடங்கும் பராசக்தியின் மந்திரத்தை கேட்டாலோ அல்லது சொன்னாலோகூட போதும். அன்னையிடம் சரணாகதி என்று சொல்லிவிட்டாலே அனைத்தையும் தந்துவிடுவாள். தமிழ்நாட்டிலே கருமாரி, மீனாட்சி, காமாட்சி என எங்கும் பராசக்தியானவள் நிறைந்திருக்கிறாள். அவள் கருணையினால் எங்கும் செல்வம் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நவராத்திரியன்று பொருள் இல்லையே என்று கொண்டாடாமல் விடக்கூடாது. நாராயணியே துணை என்று சரணடைந்துவிட்டால் நாளும் கோளும் நன்மையே செய்யும். எனவே மகிழ்ச்சியோடு பராசக்தியை நினைக்கத் தொடங்கினாலே வாழ்க்கை இனிக்கத் துவங்கும்.


நவராத்திரியில் அதிக பலன் பெற உதவும் விரலி மஞ்சள் மாலை வழிபாடு

நவராத்திரி பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கும் பொருந்துமா?

நவராத்திரி என்பது ஆண்களுக்கும் கட்டாயம் பொருந்தும். ‘ஹரி ஓம் சமனா சாம தேவி’ என தொடங்கும் வன துர்க்கையின் மந்திரத்தை சொல்ல திருமண யோகம், உத்யோக யோகம் வரும். வனம்போல இருக்கும் வாழ்க்கையில் வளம்கூடும். இதை ஆண்கள் கட்டாயம் கேட்க வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் வரும். குறிப்பாக, நவராத்திரியிலே மீண்டும் மீண்டும் கேட்டால் பெரும் நன்மையை பெறுவார்கள்.

நவராத்திரியில் எதை செய்தால் அதிகப்படியான பலன் கிடைக்கும்?

27 விரலி மஞ்சளை வாங்கி, மஞ்சள் கயிற்றில் உங்களுடைய கையால் கட்டி, வீட்டிலிருக்கும் பராசக்தியின் படத்திற்கு மாலையாக போட்டு, நல்லது நடக்கவேண்டும், செல்வம் பெருகவேண்டும் என்று வேண்டினால் ஒருவருடத்திற்குள் பெரும் நன்மையை வாழ்க்கையில் பார்ப்பதுடன், பொருளாதார சிக்கல்கள் தீரத்தொடங்கும். அதேபோல, பனைமரத்தில் பொன்காளியம்மன் வந்து அமர்ந்ததால் அந்த மரம் தெய்வீக அம்சம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பனைமரத்திற்கு சிறிது தண்ணீர் ஊற்றி வணங்க, இருள் அகன்று ஒளி பெருகி, செல்வம் வெள்ளமென வந்து தங்கும்.

Updated On 14 Oct 2024 4:24 PM GMT
ராணி

ராணி

Next Story