இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்துக்கள் கொண்டாடும் மிகவும் புனிதமான தினங்களில் ஒன்றாக "அட்சய திருதியை" உள்ளது. அள்ள அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாளாக "அட்சய திருதியை" போற்றப்படுகிறது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வளர்பிறை காலத்தில் வரும் திரிதியையே அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. 'அட்சய' என்றால் 'வளர்வது' அல்லது 'என்றும் அழியாதது' என்று பொருள். அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பதும், எந்த பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பதும் நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்நாள் குறித்த மேலும் பல தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

அட்சய திருதியை நாளின் முக்கியத்துவம்

அட்சய திருதியை நாளில் சூரியனும், சந்திரனும் சமமாக பிரகாசிக்கின்றனர். புராணங்களின்படி இந்த நாள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்ததினம். எனவே பரசுராமர் ஜெயந்தியாகவும் இது கொண்டாடப்படுகிறது. கங்கை நதி, சிவபெருமானின் ஜடா முடியிலிருந்து இந்த நாளில்தான் பூமிக்கு வந்ததாம். சிவபுராணத்தின்படி, சிவபெருமான் குபேரனை செல்வத்தின் அதிபதியாகவும், சொர்க்கத்தின் கஜானா காப்பாளராகவும் இந்த நாளில் ஆக்கியதாக கூறப்படுகிறது.


பரசுராமர் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படும் அட்சய திருதியை தினம்!

விநாயகருக்கு வியாச முனி மகாபாரதத்தை இந்த நாளன்றுதான் ஓதத் தொடங்கினாராம். மேலும், மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, அவர்களை காண ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வந்த மக்களுக்கு உணவு வழங்க திரௌபதி சிரமப்பட்டாளாம். அப்போது ஒரு நாள் கிருஷ்ணர் பாண்டவர்களைச் சந்தித்துள்ளார். 5 பாண்டவ சகோதரர்களும் கிருஷ்ணரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்ற நிலையில், திரௌபதி கிருஷ்ணரை வரவேற்க வரவில்லை. மாறாக அவள் சமையலறைக்குள் உணவு சமைத்துக் கொண்டிருந்தாளாம். பகவான் கிருஷ்ணர் உடனடியாக நிலைமையைப் புரிந்துகொண்டு, திரௌபதியிடம், முடிவில்லாத உணவை வழங்கக்கூடிய அட்சய பாத்திரம் ஒன்றை ஆசீர்வதித்தாராம்.

வறுமையில் வாடிய குசேலர், செல்வத்தில் குபேரனுக்கு இணையாக மாறிட காரணம், பகவான் கிருஷ்ணர் சொன்ன அட்சயம் என்ற ஒரு வார்த்தைதானாம். நண்பன் கிருஷ்ணனை பார்க்க, ஒரு பிடி அவலை, கிழிந்த துணியில் முடிந்து எடுத்து சென்ற குசேலர், அதனை கிருஷ்ணனிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? என தயங்கிய சூழலில், கிருஷ்ணர் அவல் முடிப்பை பிடிவாதமாக வாங்கி உண்டு அட்சயம் என்று சொன்னாராம். இதையடுத்து ஏழ்மை நிறைந்திருந்த குசேலரின் குடிசை மாட மாளிகையானதாம்.

அட்சய திருதியை 2024

இந்த ஆண்டு அட்சய திருதி மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திருதியை திதியில் தொடங்கி, மே 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. எனவே உதயதிதியின் அடிப்படையில் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.


அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது நம்பிக்கை

தங்கம் வாங்க உகந்த நேரம்

மே 10ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை, அட்சய திருதியை திதி உள்ள நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

அட்சய திருதியை வழிபாட்டு முறை

அட்சய திருதியை நாளில் புனித நதிகளில் நீராடுவது விசேஷமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு முடியாதவர்கள் வீட்டிலேயே அதிகாலை குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பாலை நெய்வேத்தியமாக படைப்பது சிறப்பானது.

மேலும் அட்சய திருதியை அன்று அரச மரத்தை வழிபாடு செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அரச மரத்தை சுற்றி தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து, அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளி இருப்பதாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக அரச மரத்தை 7 முறை சுற்றிவந்து வழிபாடு செய்வது சிறப்பு. மேலும் பசு மாடுகள் இருக்கும் இடங்களுக்கு சென்று, அவற்றின் கழுத்தை தடவிக் கொடுத்து சாப்பிட உணவு கொடுப்பது பெரும் புண்ணியத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று இத்தகைய வழிபாட்டை செய்தால் நாம் நினைக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுமாம். வீட்டில் செல்வம் பெருகுவதுடன், லட்சுமி கடாட்சமும் உண்டாகுமாம்.


அட்சய திருதியையன்று அரச மரத்தை வழிபடுவது ஆகச்சிறப்பு

அட்சய திருதியையில் என்ன செய்யலாம்?

அட்சய திருதியை தினத்தன்று விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குவது விசேஷம். நீண்ட காலமாக தொழில் துவங்க முயற்சி செய்து போராடிக் கொண்டிருப்பவர்கள் அட்சய திருதியை நாளில் அதற்கான பணிகளை செய்யலாம். இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை துவங்குவதற்கும் நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதே போல் நீண்ட நாட்களாக திருமணம் அமையாமல் இருந்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களுக்கு அட்சய திருதியை நாளில் திருமணம் செய்து வைக்கலாம். இந்த நாளில் திருமணம் செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்து, அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் பலவிதமான துன்பங்கள், கஷ்டங்களில் சிக்கி தவிப்பவர்கள், இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால், பிரச்சினைகள் படிப்படியாக விலகுவதற்கான சூழல் அமைந்து, அந்த நபர் மகிழ்ச்சியான, வசதியான வாழ்க்கையை பெற முடியும்.

என்ன செய்யக் கூடாது?

உணவில் வெங்காயம், பூண்டு, அசைவம் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டுமாம். மது போன்ற போதை பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் யாருடனும் சண்டையிடுவதோ, கோபப்படுவதோ, அமங்கலமான சொற்களை பேசுவதோ கூடாது. வீட்டை இருள் அடைய விடக்கூடாது. வீட்டில் எந்த பகுதியாவது இருட்டாக இருந்தால் அங்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

இந்து மத நம்பிக்கைகளின் படி, தங்கம் என்பது மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனாலேயே மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. அத்துடன் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வளரும் என்ற நோக்கில் மக்கள் தங்கத்தை வாங்குகின்றனர்.


அட்சய திருதியை நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்கியதற்கும் மேலான பலனை தரும்!

தங்கம் வாங்க முடியாதவர்கள் அதற்கு நிகராக என்ன வாங்கலாம்?

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு எட்டா கனியாக உள்ளநிலையில் அனைவராலும் தங்கம் வாங்க முடியாத சூழல் உள்ளது. எனவே அட்சய திருதியை தினத்தில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்றில்லை. அதற்குபதில் வெள்ளை நிறத்தில் உள்ள எந்த பொருளையும் புதிதாக வாங்கலாம். உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம். குறிப்பாக உப்பு வாங்கினால், தங்கம் வாங்கியதற்குரிய பலன்கள் கிடைக்குமாம். மேலும் இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம். அதேநேரம், அட்சய திருதியை நாளில் ஏதாவது வாங்க வேண்டும் என வெளியில் சென்றுவிட்டு, வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பக் கூடாது. எதுவும் வாங்க முடியாதவர்கள் பூ மட்டுமாவது வாங்கி வர வேண்டும்.

தானம் செய்வது மிகச்சிறப்பு

அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று நம்மால் முடிந்த தானத்தை செய்தால், அதற்கு ஏற்ப பலன் கிடைக்குமாம். மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளருமாம். பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகுமாம். புத்தாடை தானம் செய்தால் பதவி உயர்வு கிடைக்குமாம். குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம். சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம். தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைக் கூட பெறலாமாம். தேங்காய் தானம் செய்வது பித்ருக்களுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. வெயிலில் காலில் செருப்பின்றி நடந்துசெல்வோருக்கு காலணியை தானம் செய்தால் இறப்புக்குப்பின் சொர்க்கம் கிடைக்குமாம். குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலுமாம். உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்குமாம். உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் போன்றவை ஏற்படாதாம். ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல்நலம் சீராவதுடன், நோய், நொடிகள் வராதாம். மேலும் ஏழைகளுக்கு தேவையானவற்றை எல்லாம் வாங்கி கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்குமாம். எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாவதவர்கள் கூட மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை தானம் செய்து, தங்கம் வாங்கியதற்கும் மேலான பலனை பெறலாம்.

Updated On 13 May 2024 11:24 PM IST
ராணி

ராணி

Next Story