பொதுவாக செவ்வாய்க்கிழமை என்பதே மங்களகரமான நாள்தான். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமைகளில் நல்லதை செய்ய தவிர்ப்போம். ஆனால் ஆன்மிகம் நன்கு அறிந்தவர்கள் நல்லவற்றை செவ்வாய்க்கிழமைகளில் செய்வர். ஏனென்றால் செவ்வாய்க்கு மங்களகாரகன் என்று இன்னொரு பெயரும் உண்டு. அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமைகளில் நாம் செய்யும் வழிபாட்டிற்கு வழக்கமாகவே நல்ல பலன் கிடைக்கும். அதுவே ஆடி செவ்வாய் என்றால் சொல்லவா வேண்டும். அதீத பலன்கள் கிடைக்கும். ஆடி மாதத்தின் இண்டாம் செவ்வாயான இன்று என்ன வழிபாடு? எப்படி செய்ய வேண்டும்? என்று பார்ப்போம்.
இன்று ரோஹிணி நட்சத்திரம்
ஆடி இரண்டாம் செவ்வாய்க்கிழமையான இன்று காலை பத்தரை மணி முதல் ரோஹிணி நட்சத்திரம் உள்ளது. பகவான் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோஹிணிக்கு சக்கரம் என்று பொருள். அப்படிப்பட்ட சக்கரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலனை தரும். அம்மனைப் பொருத்தவரை சக்கரம் என்றால் அது "ஸ்ரீசக்கரம்"தான். உலகை அருள்பாலித்து வரும் அம்பிகையின் உக்கிரத்தை தணிக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஸ்ரீசக்கரம். ஒன்பது கட்டுகளை கொண்ட அமைப்பாக, நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் இந்த ஸ்ரீசக்கரம், அன்னையின் சர்வ சக்தியையும் கொண்டதாம். எனவே இன்று வீட்டில் ஸ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்டால், சுகபோக வாழ்க்கை கிடைக்குமாம். வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழுமாம். வாழ்க்கையே சொர்க்கமாக மாறுமாம்.
சுகபோக வாழ்க்கையை அருளும், அன்னையின் சர்வ சக்தியை பெற்ற ஸ்ரீசக்கரம்
ஸ்ரீசக்கரத்தை வழிபடும் முறை
வீட்டில் மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீசக்கர வழிபாடு செய்யலாம். பல்வேறு உலோகங்களில் ஸ்ரீசக்கரம் கிடைக்கிறது. எவ்வகையான உலோகத்திலும் ஸ்ரீசக்கரத்தை வழிபடலாம். ஆனால் கையளவே ஆனாலும் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் என்றால் மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது. பூஜை அறையில் அம்மன் படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ முன்பு ஸ்ரீசக்கரத்தை வைத்து, பன்னீர், பால் போன்ற பொருட்களை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் ஸ்ரீசக்கரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பச்சரிசியில் மஞ்சளை கலந்து அட்சத்தையாக அதன் மேல் போட்டு அம்மனின் 108 நாமங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அட்சதை போடும் ஒவ்வொரு முறையும், அட்சதையுடன் ஒரு மல்லிகை பூ வீதம் ஸ்ரீசக்கரம் மீது போட வேண்டும்.
பச்சரிசி என்பது சந்திரனையும், மஞ்சள் என்பது குரு பகவானையும், மல்லிகைப்பூ என்பது சுக்கிரனையும் குறிக்கக்கூடியது. இவர்கள் மூவரின் அம்சத்தை கொண்ட பொருட்களை சேர்த்து ஸ்ரீசக்கரத்திற்கு அர்ச்சனை செய்வதன்மூலம் நம் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுமாம். குறிப்பாக வாழ்க்கை முழுமைக்கும் உணவு பற்றாக்குறையே ஏற்படாதாம். வாகன யோகம் உண்டாவதுடன், கடன் பிரச்சினை முற்றிலும் தீருமாம்.
ஸ்ரீசக்கரத்திற்கு நெய்வேத்தியமாக என்ன படைக்கலாம்?
ஸ்ரீசக்கரத்திற்கு வெள்ளை நிற பொருட்களை வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். அந்த வகையில் வெண் கேசரி, வெண் பொங்கல், பால் உள்ளிட்டவற்றை வைத்து மனதார வழிபடலாம்.
வீட்டில் ஸ்ரீசக்கரம் இல்லாதவர்கள்?
வீட்டில் ஸ்ரீசக்கரம் இல்லாதவர்கள் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களுக்கு சென்று வழிபடலாம். ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் முக்கியமான திருத்தலமாக விளங்குவது காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயம். திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம், திருவாரூரில் உள்ள கமலாம்பிகை கோயில் உள்ளிட்டவையும் முக்கிய கோயில்கள். சமயபுரம் மாரியம்மனின் திருமாங்கல்யத்திலும் ஸ்ரீசக்கரம் உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள கோயில்கள் அனைத்தும் பிரபலமானவை என்பதால் பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிடப்படாத பல்வேறு கோயில்களிலும்கூட ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நம்முடைய வீட்டிற்கு அருகே எந்த ஆலயத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அந்த ஆலயத்திற்கு சென்று அன்னையை வழிபட்டு அற்புதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.