இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து வெளிவந்த ஆறு தீப்பிழம்புகள் சரவணப் பொய்கைக்கு கொண்டுவரப்பட்டு கார்த்திகைப் பெண்களால் ஆறு குழந்தைகளாக மாற்றி வளர்க்கப்பட்டது. பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை ஒன்றாக அரவணைத்து தழுவியதும் ஒரு உடல் ஆறு தலைகளுடன் ‘ஆறுமுகன்’ உருவானதாக முருகனின் கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தான் அறுபடை வீடு கொண்ட திருமுருகன் பிறந்தாராம்.


பழனி முருகனின் ராஜ அலங்காரம்

இந்த திருமுருகனை மாதந்தோறும் வழிபடும் விசேஷ நாள்தான் கிருத்திகை. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையான ‘ஆடிக் கிருத்திகை’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே கிருத்திகை நாட்களில் முருகனை வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபடுவது இன்னும் சிறப்பு. அப்படிப்பட்ட ஆடிக்கிருத்திகை இந்த வருடம் வரும் 9-ஆம் தேதி (09.08.2023) வருகிறது. இந்நந்நாளில் விரதம் கடைப்பிடித்து வாழ்க்கை வளம்பெருக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பொதுவாக ஆடிக் கிருத்திகையில் வறுமை நீங்கி வளமைப் பெறுவதுடன், நோய் நீங்கி நலம் பயக்கும் என்றும் நம்பப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளாகிய திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். முருக பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என பல வகை காவடிகளை ஏந்தி வந்து முருகனை வணங்குவர்.


முருகனுக்கு காவடி தூக்கும் பக்தர்கள்

ஏன் கிருத்திகை நட்சத்திரம்?

கார்த்திகைப் பெண்கள் முருகப்பெருமானை தங்கள் மகன்களாக பாவித்து வளர்த்து வந்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், ‘என் மகனை பாலூட்டி வளர்த்த நீங்கள் கார்த்திகை நட்சத்திரமாக விண்ணில் விளங்குவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை எண்ணித் துதித்து விரதமிருந்து வழிபடுவோருக்கு, அவர்கள் நினைத்தது நிச்சயம் ஈடேறும்’ என்ற வரத்தை கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார் என புராணம் குறிப்பிடுகிறது. இதனாலேயே கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடும் வழக்கம் உண்டானது.

விரத மகிமைகள்

ஆடிக்கிருத்திகை நாளில் விரதம் கடைப்பிடித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும், நோய்களால் துன்பப்படுவோருக்கு நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி களத்திர தோஷம் என்று கூறப்படும் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்நாளில் விரதம் இருந்து கந்தக் கடவுளை வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமணத்தடை விலகி நல்ல வரன் அமையும்.

செவ்வாய்க்கு அதிபதியாக முருகப்பெருமான் விளங்குவதால் நிலத்தகராறு அல்லது பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதேனுமிருந்தால் கிருத்திகை விரதத்தை கடைப்பிடித்து அரளி மலர்களால் அர்ச்சித்து முருகனை மனமுருக வேண்டினால் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அதேபோன்று குழந்தை இல்லாத தம்பதிகள் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் கிருத்திகை விரதம் அனுசரித்தால் கடன் தொல்லை நீங்கி கவலையின்றி வாழலாம். இத்தகைய நன்மைகள் நல்கும் ஆடிக்கிருத்திகை விரதத்தை கடைப்பிடித்து கார்த்திகேயனை வணங்கினால் வெயில் கண்ட பனி போல் பிரச்சினைகள் எல்லாம் கரைந்தோடும்.

விரதம் கடைப்பிடிக்கும் வழிமுறைகள்

முதலில் நமது வேண்டுதலை மனதில் நினைத்து விரதத்தில் தடங்கலும், திசைமாறுதலுமின்றி நிலைத்து நின்று விரதத்தை முடிக்க வேண்டும் என முருகனை வணங்கி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். கிருத்திகையன்று காலையில் எழுந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை மனதார வணங்கி பிரார்த்திக்க வேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றால் வீட்டிலேயே முருகப்பெருமானின் உருவப்படத்தை வைத்து மலரால் அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக, செவ்வரளி அல்லது செம்பருத்தி போன்று சிவப்பு நிற பூக்களால் அலங்கரிப்பது விசேஷம். அடுத்து முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்னால் அறுங்கோண கோலமிட்டு ‘ஓம் சரவண பவ’ என்ற முருகனின் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும். அந்தக் கோலத்தில் ஆறு நெய் விளக்குகளை ஏற்றி 108 முறை ‘ஓம் சரவணபவ’ எனும் முருகனின் மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

முருகனுக்கு நைவேத்தியமாக காய்ச்சிய பாலில் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து வைத்து, பழங்கள், வெற்றிலை, பாக்கு சமர்ப்பிக்க வேண்டும். கேசரி, சர்க்கரைப் பொங்கல் என்று வேறு பலவகை பதார்த்தங்களையும் நைவேத்தியமாக படைக்கலாம். முருகப்பெருமானின் மற்ற மந்திரங்கள், திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம் மற்றும் துதிப் பாடல்களையும் பாடி பூஜித்த பின் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபடலாம். இந்த பூஜையை காலை 6 முதல் 7 மணியளவில் செய்வது சிறந்தது. பிறகு நாள் முழுவதும் விரதமிருந்து மாலை 6 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உடல்நலப் பிரச்சனையால் விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாமல் உணவு எடுத்து கொள்ளலாம்.


விரதத்தை முடிக்கும் பொழுது, காலையில் நெய் தீபம் ஏற்றியது போல மாலையிலும் அந்த ஷட்கோண கோலத்தில் 6 நெய் விளக்குகளை ஏற்றி உங்கள் பிரார்த்தனையை வேண்டி பூஜித்து வணங்கிய பின் நைவேத்தியத்தைச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முடிந்தால் அன்னதானம் செய்யலாம் அல்லது நைவேத்தியம் படைத்து அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று பிரசாதமாக வழங்கலாம். இப்படியாக ஆடிக்கிருத்திகை விரதம் அனுசரித்தால் முருகன் அருளால் நன்மைகள் பல வந்து சேரும்.

Updated On 14 Aug 2023 6:50 PM GMT
ராணி

ராணி

Next Story