ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம். இதற்காக பக்தர்கள் அம்மன் ஆலயங்களுக்கு அரிசி, கேழ்வரகு உள்ளிட்டவற்றை தானமாக வழங்குவார்கள். சில பகுதிகளில் மக்களே தங்கள் வீடுகளில் கூழ் காய்ச்சி, சாலையில் செல்வோர், உறவினர்கள், அண்டை வீட்டார் உள்ளிட்டோருக்கு வழங்குவார்கள். கூழ் ஊற்றுவது என்பது ஒரு திருவிழா போல நடைபெறும். ஆனால், ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏன் கூழ் ஊற்றுகிறோம் தெரியுமா?

ஆடி கூழுக்கு இவ்வளவு மகிமையா!

தமிழ் மாதங்கள், சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என வரிசையாக வரும். இதில் சித்திரை, வைகாசியில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கும். எனவே அவை உஷ்ண மாதங்கள் என சொல்லப்படுகின்றன. ஆனால் ஆடி மாதம் என்பது காற்றடிக்கும் மாதம் மற்றும் மழைக்காலம் தொடங்கும் மாதமாக உள்ளது. வெப்பம் சற்று தணிந்து காலநிலை மாறும் இந்த மாதத்தில், உடலிலும் மண்ணிலும் பரவியிருக்கிற சூடும், காற்றும் சேர்ந்து உடலுக்கோ கண்களுக்கோ எந்த நோய்களையும் தந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஆடி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா, பால்குடம், தீர்த்தவாரி என்றெல்லாம் வைபவங்கள் நடக்கின்றன.


கூழ் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வெப்ப நோய்களை தடுக்குமாம்!

காலநிலை மாற்றத்தால் ஆடி மாதத்தில் பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி பிரசாதமாக கொடுக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. கூழ் செய்வதற்கு தேவைப்படும் கேழ்வரகு, அரிசி, வெங்காயம், மோர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, மக்களை நோயிலிருந்து காக்கும் என்பதால், கூழ் உணவில் வேப்பிலையை போட்டு, அம்மனுக்கு உகந்த பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

கூழ் குடிப்பதால், உடலின் வெப்பம் குறைந்து குளுமையாகும். வயிற்றுப்புண் ஆறும். கண்கள் குளிர்ச்சியடையும். இதனால் வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு, வீட்டிலோ அல்லது கோயிலிலோ கூழ் ஊற்றினால் திருமண தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கூடிவரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை.

அம்மனுக்கு ஏன் அசைவ படையல்?

ஆடி மாதாத்தில் அம்மனுக்கு முட்டை, கருவாடு போன்ற அசைவ உணவுகளும் படைக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் படையல் போட்டு பலவிதமான அசைவ உணவுகளும் படைக்கப்படும். இதில் கறி, முட்டை என பலவிதமான உணவுகள் பெரிய இலை போட்டு வைக்கப்படும். இது கும்பம் இடுதல் என்று சொல்லப்படுகிறது. இப்படி கும்பமிடப்படும் முட்டைகள் நள்ளிரவில் நடக்கும் பூஜைக்கு பிறகு பெண்கள் சிலருக்கு பிரசாதமாக சில பகுதிகளில் வழங்கப்படுமாம். மற்ற பொருட்கள் ஏதும் இல்லாமல் வெறும் முட்டை மட்டும் அவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள், கருவில் குழந்தை தங்காதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த முட்டை பிரசாதம் கொடுக்கப்படுமாம். அதை வாங்கி சாப்பிட்டால் அடுத்த ஆண்டு ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இது பலருக்கும் நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் அம்மனுக்கு கருவாடு வாசம் பிடிக்கும் என்பதால், பக்தர்கள் போட்ட படையலை ஏற்க அம்மன் தேடி வருவதாக ஐதீகம். அது மட்டுமல்ல ஏதாவது வேண்டுதல் இருந்தால், வேண்டுதல் வைப்பவர்கள் தங்கள் கையால் கருவாடு சுட்டு, இலைக்கு கீழ் வைத்து படைத்து அம்மனிடம் வழிபட்டால் அந்த வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்றும் சொல்லப்படுகிறது.

Updated On
ராணி

ராணி

Next Story