அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாளாக சாஸ்திரம் கூறுகின்றனது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தை, புரட்டாசி, ஆடி ஆகிய மாதங்களின் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. எல்லா அமாவாசைக்கும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள், இந்த 3 அமாவாசைகளுக்கு விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தாலே மொத்த பலனும் கிடைக்குமாம். அதிலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையே மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை என்பது நமக்கு ஏற்பட்டுள்ள பித்ரு தோஷத்தை நாமே போக்கிக் கொள்வதற்கான மிகச் சிறந்த நாளாகும். ஆடி அமாவாசை வழிபாட்டால் திருமணம், குழந்தைப் பேறு போன்ற நம்முடைய வீட்டில் தாமதப்படும் சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்பதும், முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

ஆடி அமாவாசைக்கு ஏன் சிறப்பு?

இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் ஆரம்பமே ஆடி. மேலும் தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுமாம். எனவே வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.


ஆடி அமாவாசை என்பது நமக்கு ஏற்பட்டுள்ள பித்ரு தோஷத்தை நாமே போக்கிக் கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்

வடமொழியில் 'தட்சண்' என்றால் தெற்கு என்றும், 'அயனம்' என்றால் வழி என்றும் பொருள். அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி 1-ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். இந்த காலத்தில்தான், "பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் நம்மை காண பூமிக்கு வர புறப்படுவார்களாம்". அப்படிப்பட்ட தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை என்பதால், இது சிறப்பு வாய்ந்தது.

41 தலைமுறையினரையும் சென்றடையும்!

ஆடி அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம், திதி ஆகியவை நமக்கு முந்தைய 41 தலைமுறையினரை சென்றடையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் நம்முடைய முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கவும், நமக்கும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு அனைத்து விதமான நன்மைகள் கிடைக்கவும் வழி ஏற்படுகிறது.


ஆடி அமாவாசையில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், திதி நமக்கு முந்தைய 41 தலைமுறையினரை சென்றடையுமாம்!

2024 ஆடி அமாவாசை எப்போது?

2024-ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4-ஆம் தேதி அமைகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், தந்தை வழி உறவுகளுக்கு காரண கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கர்மகாரகன் என்று சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து வருகிறது. இந்த புனித நாளின் தொடக்கத்தை குறிக்கும் அமாவாசை திதி, ஆகஸ்ட் 3, பிற்பகல் 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4, மாலை 4:42 மணிக்கு முடிவடைகிறது.

படையல் நேரம்?

ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பகல் 12 முதல் 1:30 மணிவரை எமகண்டம். எனவே முன்னோர்களுக்கு பகல் 1:30 மணிக்கு பிறகே படையல் போட்டு வழிபடுவது சிறப்பாகும். காகத்திற்கு சோறு வைப்பதையும் பகல் 1:30 மணிக்கு பிறகே செய்யலாம்.


அமாவாசை தினத்தில் நாம் வைக்கும் உணவை காகத்தின் வடிவில்வந்து நம் முன்னோர்கள் சாப்பிட்டு செல்வதாக ஐதீகம்

காக்கைக்கு ஏன் சோறு வைக்கிறோம்?

சனி பகவானுக்குரிய வாகனமான காகத்தின் வடிவிலேயே, அமாவாசை தினத்தில் நம் முன்னோர்கள், நாம் படைக்கும் உணவுகளை வந்து சாப்பிட்டுவிட்டு செல்வதாக ஐதீகம். மேலும் பூலோகத்தில் நாம் கொடுக்கும் திதி, தர்ப்பணம் போன்ற சிரார்த்த காரியங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் காகமே என்று சொல்லப்படுகிறது. குப்பையில் கிடக்கும் பொருட்களையும், இறந்த எலி போன்றவற்றையும் சாப்பிடும் காகம்தான், நாம் இலை போட்டு வைக்கும் உணவுகளையும் சாப்பிடுகிறது. எனவே, காகத்திற்கு சோறு வைத்தால், கர்ம வினைகளால் நாம் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும், அந்த நிலையிலிருந்து நம்மை தூக்கிவிட்டு, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம்.


ஆடி அமாவாசையன்று அன்னதானம் செய்வதைவிட சிறந்தது எதுவுமே இல்லை

என்ன தானம் செய்யலாம்?

ஆடி அமாவாசை நாளில், அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை ஒரு ஐந்து பேருக்காவது தானம் செய்வதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். சேலை, வேட்டி சட்டை உள்ளிட்ட உடைகளை வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கும் பழக்கத்தையும் சிலர் பின்பற்றுகின்றனர். ஆனால் இவ்வாறெல்லாம் செய்ய முடியாதவர்கள், நம்மால் எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கு அன்னதானம் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறினாலும், கொடுத்த தர்ப்பணத்தில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படும் பித்ருதோஷமானது நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி, நம் வாழ்க்கையில் உள்ள தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடுமாம்.

ஆடி அமாவாசையில் செய்யக்கூடாதவை

ஆடி அமாவாசையன்று வாசலில் கோலமிடக் கூடாது. நகம் வெட்டக் கூடாது. தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது. அமாவாசை காலையில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றினாலும், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் நல்லெண்ணெய் ஊற்றி அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வெளி ஆட்களுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

Updated On 2 Aug 2024 9:57 AM GMT
ராணி

ராணி

Next Story