ஜூலை 26, இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையுடன் முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டியும் சேர்ந்துள்ளதால் மிகவும் விசேஷமான நாளாக இது பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு உகந்த நாளாம். காளியின் அம்சமான அங்காளம்மனை விரதம் இருந்து பூஜை செய்து வணங்கினால் நல் வேண்டுதல்கள் அத்தனையும் கை கூடுமாம். இந்த நல்ல நாளில், மேல்மலையனூரில் அருள்பாலித்துவரும் அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசிக்கலாம் வாங்க.

மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு

ஆதியில் 5 தலை கொண்ட பிரம்மாவின் ஐந்தாம் சிரசை சிவபெருமான் கொய்ததால், அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. ஈசனால் வெட்டப்பட்ட பிரம்மாவின் தலை அவரின் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டதாம். எவ்வளவு முயற்சி செய்தும் அந்த தலை சிவனின் கையை விட்டு அகலவே இல்லையாம். சிவனுக்கு இடப்படும் எல்லா உணவுகளையும் அந்த தலையே உண்டு வந்ததாம்.

இதனால், மகா விஷ்ணுவிடம் யோசனை கேட்ட பார்வதி தேவி, மூன்று கவளங்கள் உணவை எடுத்து, அதில் முதல் இரண்டு கவளங்களை சிவனின் கையில் இட, பிரம்மாவின் தலையே அவற்றை வழக்கம்போல் உண்டதாம். ஆனால் மூன்றாம் கவளத்தை தவறுதலாக போடுவது போல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவி. உணவு ருசியில் மயங்கிய பிரம்மாவின் சிரசு, மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்தக் தலையை தனது காலால் மிதித்து அடக்கிவிட்டாளாம். அதன் பின்னர் கோபம் தணிந்து, தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தி அங்காள பரமேஸ்வரியாக மேல்மலையனூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.


படுத்த கோலத்தில் பெரிய உருவில் காட்சிதரும் பெரியாயி அம்மன்

அங்காளம்மன் கோயிலின் சிறப்புகள்

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைந்திருந்தாலும், மேல்மலையனூரே, அவளுக்குத் தலைமை ஆலயமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில், புற்று வடிவிலும் திருவுருவத்துடனும் காட்சியளிக்கும் அம்மனுக்கு அமாவாசைதோறும் ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது.

அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பௌர்ணமி நாட்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பரிகாரத் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் அங்காளம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள், அன்னைக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோயில் பிராகாரத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடுகின்றனர்.

கோயிலின் தெற்கே மல்லாந்து படுத்த கோலத்தில் பெரிய உருவில் பெரியாயி அம்மன் காட்சி தருகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அம்மனை வழிபட, அவை விலகுவதாக மக்கள் நம்புகின்றனர்.

மயான கொள்ளைக்கு பெயர்போன திருத்தலம்

மாசி மாதம் வரும் மயானக் கொள்ளை திருவிழா இந்த ஆலயத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் மேல்மலையனூருக்கு வருகை தருவார்கள். திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், தானியங்களைக் கொண்டுவந்து உணவு சமைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய வினைகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் மயான கொள்ளை விழாவின்போது, அம்மன் புதிய தேரில் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படுகிறாள்.

அங்காளம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மேல்மலையனூர் அங்காளம்மனை வழிபடுவோருக்கு, சுய ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்க்கையால் உள்ள இடர்பாடுகள் தீருமாம். தவறான காதல் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல வாழ்க்கையை பெற முடியுமாம். திருமணத்தை மீறிய தவறான உறவில் இருப்பவர்கள் திருந்தி வாழக்கூடிய மாற்றங்கள் உருவாகுமாம். மண வாழ்க்கை ஒற்றுமை சிறப்பாக இருக்குமாம். இவ்வளவு சிறப்புவாய்ந்த அன்னையை ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளியில் மனமுருக வழிபட்டால், புத்திக்கூர்மையுடன், வலிமையும், வீரமும் அதிகரிக்குமாம்.

Updated On 26 July 2024 8:07 AM GMT
ராணி

ராணி

Next Story