இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாமக்கல் மாவட்டம் சாலிகிராமம் பகுதியில் மேற்கு பக்க அடிவாரத்தில் குடைவரை கோயிலாக அமைந்திருக்கும் பிரபலமான கோயில் தான் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோயில். இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக முதலில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டு பின்னர் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னனால் புனரமைக்கப்பட்டது. வைணவ திருக்கோவில்களில் ஒன்றாக மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் இக்கோயிலுக்கு எதிரில் கொங்கு நாட்டு கோயில்களுக்கே உண்டான தீபஸ்தம்பம் ஒன்றும் இருக்கிறது. இதைத் தாண்டி கோயிலின் நுழைவுவாயில் பகுதியின் இருபுறமும் விஷ்ணுவின் தசாவதாரங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது.

இத்திருத்தலத்தில் நரசிம்மர் மூலவராக இருக்க, நாமகிரி லக்ஷ்மி தாயார் அவரது துணைவியாக இருக்கிறார். ராமானுஜர் கணித மேதையாக ஆனதற்கு இந்த தாயார் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த நாமகிரி தாயாரை வந்து வழிபட்டால் பேச்சுத்திறனும், கல்வித்திறனும் சிறப்புற்று இருக்கும் என்றும், குறிப்பாக கணிதம் என்றாலே கசப்பு என்று ஒரு காத தூரம் ஓடும் மாணவர்கள், இந்த தாயாரை வந்து வழிபட்டால், இன்னும் சிறப்பாக மேன்மையடைவார்கள் என்று பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. அதேபோன்று நாமகிரி தாயார் வீற்றிருக்கும் இதே தலத்தில் சேனை முதல்வர், கருடாழ்வார், உடையவர், சீதா, ராமர், லக்ஷ்மணர், நம்மாழ்வார், பாமா, ருக்மணி, கிருஷ்ணர், தேசிகர், லட்சுமி நாராயணன், விநாயகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோயில்

இங்கிருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தன்னுடைய வலது காலை பூமியில் ஊன்றி, இடது காலை மடித்தவாறு வைத்து வலது கரத்தில் ரத்தம் வடிந்தது போலவும், இடது கை தொடையை அழுத்தியது போலவும், அசுர மன்னன் ஹிரண்யனை வதம் செய்த தோற்றத்திலும், பின் வலது கரத்தில் சங்கும், பின் இடது கரத்தில் சக்கரமும் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறார். வரலாற்றின் படி நரசிம்ம பெருமாள் இரண்யகசிபுவை அழித்து உக்கிரமாக இருந்த நிலையில், அவரை சாந்தி படுத்த அவரின் புகழை போற்றிப் பாடிய பிரம்மன் இடது புறத்திலும், சிவபெருமான் வலது புறத்திலும் வீற்றிருக்கின்றனர். மும்மூர்த்திகளை கொண்ட ஸ்தலமாக ஈரோட்டில் உள்ள மகுடேஸ்வரர் இருந்தாலும், மும்மூர்த்திகள் ஒரே ஸ்தலத்தில், ஒரே சன்னதியில் வீற்றிருக்கும் பெருமை இந்த கோயிலையே சேரும். இது போன்ற வினோத தோற்றம் கொண்ட நரசிம்மரை இங்கு தவிர வேறு எங்கும் காணவும் முடியாது தரிசிக்கவும் முடியாது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது இக்கோயில். இன்னும் சிறப்பாக நரசிம்மரின் சன்னதிக்கு நேராக உள்ள சுவரின் சாளரம் வழியாக ஆஞ்சநேயரை காண முடியும். ஆனால், ஆஞ்சநேயர் நரசிம்மரை காண முடியாமல் அவரது கால்களை மட்டும் காண முடிந்ததாகவும் அமைந்திருக்கிறது.


அசுர மன்னன் ஹிரண்யனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர்

இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் 18 அடி உயரத்தில் மிக அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். இது உலக புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இங்கிருக்கும் ஆஞ்சநேயர் ஆண்டுக்கு ஆண்டு சிறிது சிறிதாக வளருவதாக பெரிதும் நம்பப்படுகிறது. மேலும் இந்த நாமக்கல்லில் இருக்கும் புகழ் பெற்ற ஆஞ்சநேயரை வழிபட்டால் தொட்ட காரியங்கள் துலங்கும் என்றும், செய்யும் அனைத்து காரியங்களிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் பல திசைகளில் இருந்தும் பக்தர்கள் நம்பிக்கையுடன் வந்து மனதார பிரார்த்திக்கின்றனர். மேலும் இந்த தலத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர், கோபுரம் இன்றி வெட்டவெளியில் காட்சியளிக்கிறார். இதன் காரணம் ஆஞ்சநேயர் வணங்கும் தெய்வமான ஸ்ரீ நரசிம்ம பெருமாளே கோபுரம் இன்றி எழுந்தருளியிருப்பதால் அவரது பக்தரான ஆஞ்சநேயருக்கும் கோபுரம் வேண்டாம் என்று இங்கு அமைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.


ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எதிரில் 18 அடி உயரத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி தாயார் இந்த நாமக்கல் பகுதிக்கு வந்து திருமாலை நோக்கி கடுமையாக தவமிருந்தார். பிரகலாதனை அசுர மன்னன் ஹிரண்யகசிபுவிடமிருந்து காப்பாற்ற, அவரை வதம் செய்த நரசிம்மர், நேபாளத்தில் சாளக்கிராமமாக இருந்தார். இப்படி இருக்க ராமாவதாரத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் லட்சுமணன் காயமடைந்து உயிர் போகும் நிலையில் இருக்க சாம்பவனால் அறிவுறுத்தப்பட்டு ஆஞ்சநேயர் இமய மலைக்கு சென்று சஞ்சீவி மலையை கொண்டு லட்சுமணனை குணமாக்க பின்னர் திரும்பி அந்த மலையை இமய மலையில் வைத்து விட்டு வரும் வழியில் நேபாளம் கண்டகி நதியில் நீராடும் போது ஆஞ்சநேயருக்கு ஒரு சாளக்கிராம கல் கிடைத்ததாம். அந்த சாளக்கிராம கல்லை திருமாலின் அம்சமாக கருதி ஆஞ்சநேயர் கொண்டு வர அப்போது நாமக்கல் பகுதியில் சூரியன் உதயமானதால் அந்த கல்லை அங்கிருந்த பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு சந்தியாவந்தனம் முடித்துவிட்டு மீண்டும் அந்த சாளக்கிராம கல்லை கொண்டு செல்ல முயற்சித்தார் ஆஞ்சநேயர். ஆனால் ஆஞ்சநேயரால் சிறிதளவும் அந்த கல்லை நகர்த்த முடியவில்லை. இவ்வாறு இருக்க திடீரென்று ஒரு அசரீரி தோன்றி, ‘ராமனுக்கு உதவி புரிந்து விட்டு பின்னர் இங்கு வா’ என்று கூற ஆஞ்சநேயரும், ராமனுக்கு உதவி செய்ய சென்றார். ராமனுக்கு உதவி புரிந்து போரில் வெற்றி கண்டு சீதையை மீட்டு அயோத்திக்கு சென்று பின்னர் ஆஞ்சநேயர் மீண்டும் நாமக்கல்லில் வந்து இந்த சாளக்கிராம கல்லை பார்க்க அந்த கல் நரசிம்மராக வளர்ந்திருந்ததாகவும் அதை ஆஞ்சநேயர் வியந்து கைகூப்பி வழிபட்டதாகவும் வரலாறு கூறுகிறது. அங்கு தவம் புரிந்த பெண்ணும் கல் கொடுக்கப்பட்ட அந்த பெண்ணும் தான் நாமகிரி லட்சுமி தாயார்.


கல்லாக காட்சியளிக்கும் நரசிம்மரை கைகூப்பி வணங்கும் ஆஞ்சநேயர்

வரலாற்றின் படி ஆஞ்சநேயர் நரசிம்மரை எப்படி வணங்கினாரோ, அதே வணங்கிய நிலையில் தான் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இதிலும் சிறப்பாக இங்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் ஒரே கல்லால் செதுக்கப்பட்டவராகவும் ஞான சக்தியை தருபவராகவும் இருக்கிறார். இந்த நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதால் பொருளாதாரம் மேம்படும், ஞான சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே குறிப்பாக சனிக்கிழமைகளில் இக்கோவிலில் வழக்கத்தை காட்டிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.


ஒரே கல்லால் செதுக்கப்பட்டு காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெற்றிலை மாலை கொண்டும், துளசி மாலை கொண்டும் நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் பிரார்த்திக்கின்றனர். மேலும் இந்த கோவிலில் நரசிம்மர் ஜெயந்தியும், ஹனுமான் ஜெயந்தியும் கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவமாக மிகச்சிறப்பாக ஆரவாரமாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது தவிர பங்குனி மாதத்தில் தேர் திருவிழா மிக சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து 2009 இல் இக்கோவிலுக்கு நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சீரமைக்கப்பட்ட இந்த திருத்தலத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. உலக புகழ்பெற்ற இத்தலத்திற்கு வந்து அந்த ஆஞ்சநேயரையும் கணித ஞானம் வழங்கும் தாயாரையும் அசுர மன்னனை அழித்த நரசிம்மரையும் மனதுருக வழிபட நிச்சயம் ஞானம், பொறுமை, செல்வம் என்று 16 ஆசிகளும் பெற்று இன்புற்று ஆனந்தக்களிப்புடன் வாழலாம்.

Updated On 7 Nov 2023 12:22 AM IST
ராணி

ராணி

Next Story