இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(31.10.1971 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது.)

சென்னையில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் வெளியீட்டு விழாவில், அந்தப் படத்தில் நடித்துள்ள எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்கள். ஜெயலலிதா பேசுகையில், தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே உள்ள உறவுபற்றி குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருக்கு எந்த வகையிலும் தான் துரோகம் செய்யவில்லை என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தபோது தனது முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எம்.ஜி.ஆரின் உதவியை ஒரு போதும் தான் மறக்கவில்லை என்றும் ஜெயலலிதா சொன்னார்.

அடுத்துப் பேசிய எம்.ஜி.ஆர் இதுபற்றி கூறியதாவது,

“நான் இங்கே பிரச்சினையை அதிகமாக்க விரும்பவில்லை. என்னை பொறுத்த மட்டும் எல்லோரும் எப்போதும் நண்பர்களாக பழகுவதையே விரும்புகிறேன். சிவாஜி கணேசனை பாராட்டினால் என்னை மறந்து விட்டதாக என்றுமே நினைத்ததுமில்லை. செல்வி ஜெயலலிதா இங்கே சொன்னது புதிதாக இல்லாவிட்டாலும், புத்துணர்ச்சியை உண்டாக்குவதாக உள்ளது. ஒரு பத்திரிகையில் “ஜெயலலிதா இனிமேல் எம்.ஜி.ஆரோடு நடிக்க மாட்டாராமே” என்று ஒரு கேள்வி.


காதல் பாடல் காட்சி ஒன்றில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா

“பழைய படங்களை நடித்து முடிப்பார். புதிய படங்களில் நடிக்கமாட்டார்” என்று அதற்குப் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.இப்போது நானும் செல்வி ஜெயலலிதாவும் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறோம். இதுபோல் இன்னும் பல படங்களிலும் நடிக்கப் போகிறோம். இதனால் இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று அந்த பத்திரிக்கை ஆசிரியர் எப்படி உத்தரவாதத்தை தந்தாரோ தெரியவில்லை. இந்தப் படத்தில் ரசிகர்கள் எந்த எந்த இடங்களில் எப்படி எப்படி ரசிக்கிறார்கள் என்பதைக் கண்டோம். இதை அறிந்து கதைக்குத் தேவையான காட்சிகளை வைத்து படமாக்கி இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கே இடமில்லை.


மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா

ஜெயலலிதா சபதம்!

இன்னொன்றையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். ‘நீரும் நெருப்பும்’ படத்தை தயாரித்த மணிஜே புரொடக்சன்சார், ‘மங்கம்மா சபதம்’ படத்தை திரும்பவும் எடுக்க இருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா மங்கம்மாவாக நடிக்கிறார். நான் இரட்டை வேடத்தில் தந்தை மகனாக நடிக்கிறேன். என்னிடம் ஜெயலலிதா சபதம் செய்து வெற்றி பெறுகிறார்.


‘நீரும் நெருப்பும்’ படத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா

நடிப்பு ஆற்றலைக் காட்ட வேண்டிய பாத்திரம் அவருக்கு கிடைத்துள்ளது. கடைசியாக இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் (சிரிப்பு). அப்படி சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஜெயலலிதா பிரச்சினையை இனிமேல் நினைக்கவும் பேசவும் கூடாது. மற்றவர்கள் பேசினால் சிரித்து விட்டுப் போங்கள். அவர்கள் தலைகுனிந்து போகட்டும்.”

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

Updated On 7 Nov 2023 12:08 AM IST
ராணி

ராணி

Next Story