இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(4.3.1984 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

காதல் கிசுகிசுப்பை சுலக்சனாவும் மெய்யாக்கி விட்டார். டைரக்டர் கோபிகிருஷ்ணாவை இரகசிய திருமணம் செய்து கொண்டார். கோபி கிருஷ்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ். விசுவநாதனின் மகன். “சில்க்... சில்க்... சில்க்'', "போலீஸ் போலீஸ்" ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். "போலீஸ்... போலீஸ்” என்ற படத்தில் சுலக்சனா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் அரும்பியது. திருமணத்துக்கு கோபி கிருஷ்ணா வீட்டிலும் (எம்.எஸ். விசுவநாதன்) பலத்த எதிர்ப்பு. சுலக்சனாவின் வளர்ப்புத் தாயான (“ஆன்டி”) கல்யாணியும் சம்மதிக்கவில்லை. இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, கோபி கிருஷ்ணாவும், சுலக்சனாவும் இரகசியத் தாலி கட்டி, பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

இரண்டு தாலி

சுலக்சனா ஆந்திராவைச் சேர்ந்தவர். கோபி கிருஷ்ணா கேரளாக்காரர். இதனால் சுலக்சனா கழுத்தில் இரண்டு தாலி ஏறியிருக்கிறது. தெலுங்கு முறைப்படி ஒரு தாலியும், மலையாள முறைப்படி ஒரு தாலியையும் கட்டியிருக்கிறார் கோபி கிருஷ்ணா. ஒரு தங்கச் சங்கிலியும் போட்டு உள்ளார். கோபி கிருஷ்ணாவின் நெருங்கிய நண்பர்களும், சுலக்சனாவின் கார் டிரைவர், சமையல்காரம்மா மற்றும் தோழிகளும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.


நடிக்க வந்த புதிதில் நடிகை சுலக்‌சனா

சுலக்சனா வருத்தம்

சுலக்சனா இப்பொழுது தன் “ஆன்டி”யை விட்டுப் பிரிந்து, கோபி கிருஷ்ணாவுடன் தனிக் குடித்தனம் நடத்தி வருகிறார். "ஊரறிய திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படியொரு வாய்ப்பு கிட்டாததால், இரகசியத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று" என்று கலங்கினார், சுலக்சனா. "சாதாரண குடும்பத்தில், ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், பெண்ணை மணக்கோலத்தில் பார்க்க மாட்டோமா என்று, பெற்றோர் ஏங்குகிறார்கள். ஆனால், ஒரு நடிகை இலட்சம் இலட்சமாக சம்பாதித்துக் கொட்டினாலும், தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. எங்களது உணர்வுகளை மதிக்க மறந்துவிடுகிறார்கள்" என்றும் வருத்தப்பட்டார் சுலக்சனா.

திருமண வரவேற்பு

"எங்கள் திருமணம் இரகசியமாக நடந்தாலும் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இந்த மாதத்திலேயே (மார்ச்) ஒரு நல்ல நாளில் திருமண வரவேற்பு நடக்கும்” என்றும் சுலக்சனா சொன்னார்.


ஹோம்லி லுக்கில் நடிகை சுலக்‌சனா

கல்யாணி

சுலக்சனாவின் வளர்ப்புத் தாயான “ஆன்டி” கல்யாணியும் கலங்கிப்போய் இருக்கிறார். "இன்னும் ஓரிரு ஆண்டு நடி. நானே நல்ல டாக்டர் மாப்பிள்ளையோ, என்ஜினீயர் மாப்பிள்ளையோ பார்த்து முடித்துவைக்கிறேன் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். சுலக்சனா அவசரப்பட்டுவிட்டாள்" என்று கூறினார் கல்யாணி.

சுலக்சனா "ஆன்டி... ஆன்டி” என்று உங்களை அழைக்கிறாரே, உண்மையில் உங்கள் இருவருக்கும் என்ன உறவு?" என்று கல்யாணியிடம் “ராணி" நிருபர் கேட்டார்.

சுலக்சனா கதை

"அது ஒரு பெரிய கதை” என்று சொல்லத் தொடங்கினார் கல்யாணி. "சுலக்சனா எனக்கு இரத்த உறவு பெண் அல்ல. தூரத்து உறவும் கிடையாது. ஆந்திராவில் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தவள் சுலக்சனா. அவள் அம்மா பெயர் தனலட்சுமி. தனலட்சுமி வறுமையால் தன் மகளை சலவைத் தொழிலாளி ஒருவரிடம் வளர்க்கக் கொடுத்து இருக்கிறார். அந்த சலவைத் தொழிலாளி வீரன்னா, ராஜமுந்திரியில் என் பாட்டி சந்திரலேகாவுக்கு துணி சலவை செய்பவர். எனது நடன அரங்கேற்றத்துக்கு பாட்டியை அழைப்பதற்காக நான் வீட்டுக்குச் சென்றிருந்த போது, வீரன்னா துணி கொண்டு வந்திருந்தார்.


"பொழுது விடிஞ்சாச்சு” படத்தில் வரும் சுலக்‌ஷனா

என்னை அறிந்ததும். "அம்மா! என்னிடம் ஓர் ஏழைக் குழந்தை இருக்கிறது. நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்களா?" என்று என்னிடம் (கல்யாணி) வீரன்னா கேட்டார். என் பாட்டி சந்திரலேகாவும் சிபாரிசு செய்ததையடுத்து, அந்தக் குழந்தையை நான் வாங்கினேன். அப்போது அந்தக் குழந்தைக்கு (சுலக்சனாவுக்கு) 2 வயது. பெயர் டாலி. என் அக்கா மகள் லெட்சுமியும் (வயது 5) அப்போது என்னிடம் வளர்ந்து வந்தாள். அவளோடு டாலியையும் (சுலக்சனா) சேர்த்து என் சொந்த மகள்போல பேணி வளர்த்தேன். எனக்குத் தெரிந்த எல்லாவித நடனமும் கற்றுக் கொடுத்தேன். சங்கீதப் பயிற்சியும் அளித்தேன். நாங்கள் மூன்றுபேரும் (கல்யாணி, லெட்சுமி, டாலி) சேர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தோம். எங்கள் ஊர் திருவிழாவில் நான் குல வழக்கப்படி கரகம் ஆடுவேன். ஒரு திருவிழாவுக்கு டாலியையும் அழைத்துச் சென்று கரகம் கட்டினேன். என் உறவினர்கள், வேறு ஜாதி பெண்ணுக்கு கரகம் கட்டுவது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தத்து

அவமானம் தாங்காமல் சென்னைக்குத் திரும்பிய நான், வெங்கடசாமி என்ற வக்கீலை அணுகினேன். "டாலியை தத்து எடுத்துக் கொண்டால், உன் குழந்தை ஆகிவிடுவாள்" என்று அவர் ஆலோசனை கூறினார். உடனே டாலியின் அம்மாவை அழைத்து, கோர்ட்டு மூலமாக டாலியை என் மகள் ஆக்கிக் கொண்டேன். டாலி என் மகள் ஆன பிறகு, நான் எனக்கு என்று ஒரு வாழ்க்கையைக் கூட அமைத்துக்கொள்ளவில்லை. ஒரு மகள் போதும் என்று திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தேன். அந்த மகள், என்னை உதறிவிட்டுப் போய்விட்டாள் என்று வருத்தப்பட்டார் கல்யாணி.


இரு மாறுபட்ட அழகிய தோற்றங்களில் சுலக்‌ஷனா

சுதாதேவி

“அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று நிருபர் கேட்டார்.

"என் மாமா மகள் சுதாதேவி ராஜமுந்திரியில் படித்துக்கொண்டு இருக்கிறாள். படிப்பு முடிந்து மே மாதம் சென்னைக்கு வருவாள். அவளுக்கு நடனப் பயிற்சி அளித்து சுலக்சனாவைப் போல அவளை நடிகையாக்கிக் காட்டுவேன்" என்று கல்யாணி சொன்னார்.

Updated On 22 April 2024 11:48 PM IST
ராணி

ராணி

Next Story