இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும், இன்றும் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை குறித்த பேச்சுகளும் விவாதங்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்னென்ன? இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பெண்கள் குறித்த பல வரலாறுகள் இன்றளவும் மறைக்கப்படுவது ஏன்? போன்றவை குறித்து விரிவாக பேசுகிறார் அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ்.
சுதந்திர போராட்டத்திற்காக போராடிய ஆண்களைப் பற்றி பெரிதும் பேசுகிற சமூகம், வேலுநாச்சியார், குயிலி போன்ற வீரப் பெண்களை பற்றி பேச மறுப்பது ஏன்?
தமிழர்களின் வரலாற்றை மறைப்பதில் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். நான் பள்ளியில் படித்த காலத்தில் பிருத்விராஜ் என்ற ராஜா சம்யுக்தாவை கடத்திச்சென்ற கதையைத்தான் 15 பக்கங்களுக்கு எழுதியிருப்பார்கள். ஆனால் கடைசியாக தமிழ்நாட்டை பற்றி எழுதும்போது, ‘தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் என்ற மன்னர்கள் ஆண்டுவந்ததாகத் தெரிகிறது’ என்று எழுதியிருக்கும். நாங்கள் படித்த சரித்திரம் இதுதான். அடுத்து ஜான்சி ராணியின் வரலாறு. ஆனால் நம்மூர் பெண்களுக்கு ஜான்சி என்று பெயர் வைத்துக்கொள்கின்றனர். அந்த அளவுக்கு விடுதலைக்கு போராடிய தமிழர்களின் வரலாற்றையே முழுக்க முழுக்க அழித்துவிட்டனர். மன்னாதி மன்னனாக விளங்கிய பெண் ராணி மங்கம்மாள்.
அதேபோல் கர்நாடகாவில் கிட்டூர் சின்னம்மா போன்றோர் பெரிய சாதனை படைத்தவர்கள். வரலாற்றில் மிக முக்கிய இடத்தில் இருந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. திராவிட இயக்கம் வந்தபிறகுதான் இவர்களுடைய பெயர்களெல்லாம் வெளிக் கொண்டுவரப்பட்டன. வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர் வெளிவந்ததற்கு முக்கிய காரணம், ம.பொ. சிவஞானம். ஆனால் அதற்கு முன்பே கிராமியப் பாடல்களில் வெள்ளையத்தேவன் மற்றும் கட்டபொம்மனின் பெயர்கள் பிரசித்தி பெற்றிருந்தன. ராணி வேலுநாச்சியாரின் வரலாற்றையே மறைத்துவிட்டனர். இதில் குயிலி எம்மாத்திரம்?
வேலுநாச்சியார் மற்றும் குயிலி
வட நாட்டுக்காரர்கள் வீரம் வாய்ந்தவர்கள் எனவும், தென்னாட்டுக்காரர்கள் வீரம் குறைந்தவர்கள் எனவும் பொதுவான சித்தரிப்பு இருக்கிறதே?
வடநாட்டுக்கு சரித்திரம் என்பதே கிடையாது. அலெக்ஸாண்டர் வந்து தோற்கடித்துவிட்டு சென்றான். புருஷோத்தமன் என்ற ஒரு நபர் மட்டுமே அவரை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அலெக்ஸாண்டர் அவனை தோற்கடித்துவிட்டான். முகலாயர்கள் 700 வருடம் வடநாட்டை ஆண்டபோது அவர்களை எதிர்த்து என்ன போராட்டம் நடந்தது? சத்ரபதி சிவாஜி வரும்வரை அங்கு போராட்டம் என்பதே இல்லை. அதன்பிறகு வெள்ளையர்கள் வந்தனர். அவர்களை எதிர்த்த ஒரே மன்னன் பாட்டியாலா மகாராஜாதான். தமிழ்நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களை எதிர்த்தவர் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டை மன்னன். சிவகங்கை சீமை எதிர்ப்பு தெரிவித்தது. வட இந்தியர்கள் அப்படியே ஆங்கிலேயர்கள் காலில் விழுந்தனர். அவர்களிடம் பிருத்விராஜ் - சம்யுக்தா தவிர வேறு வரலாறு என்பதே கிடையாது.
முதலில் கிருஷ்ண தேவராயர்கள் உட்பட விஜயநகர மன்னர்கள்தான் முஸ்லிம் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள். அதன்பிறகு, சத்ரபதி சிவாஜிதான் முகலாயர்களை எதிர்த்து போரிட்டான். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்து சண்டையிட்டு தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றிக்கொண்ட ஒரே பெண் வேலுநாச்சியார். ஜான்சி ராணி கூட போரிட்டு மரித்துபோனார். ஆனால் பெண்களின் வீரத்திற்கு உதாரணமாக ஜான்சி ராணியைத்தான் குறிப்பிடுகின்றனர்.
இந்தியா மீது ஆங்கிலேய படையெடுப்பு
பெரிய ஆயுதக்கிடங்கை பிரிட்டிஷ்காரர்கள் அமைத்தபோது, அவர்களை எதிர்த்து வெற்றிபெற என்ன செய்யலாம் என்று வேலுநாச்சியார் யோசித்தார். அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண், தன்னுடைய உடலில் அதே ஆயுதங்களைக் கட்டிக்கொண்டு அந்த கிடங்கிற்குள் புகுந்துவிடுவதாகக் கூறினார். உலக வரலாற்றிலேயே முதல் மனித வெடிகுண்டு குயிலி என்ற பட்டியலினப்பெண்தான். இது வரலாற்றில் எங்கு இடம்பெற்றுள்ளது? இப்போது தமிழ், தமிழ் என்று பேசுகிறவர்களுக்குத் தெரியுமா?
அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தில், பெண்களின் மார்பகங்களுக்கு வரி விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்களே?
தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு இனப் பெண்களுக்கு ‘முலை வரி’ என்ற பெயரில் பெண்களின் மார்பகங்களுடைய அளவுக்கு ஏற்றாற்போல் வரி செலுத்தவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. வைகுண்ட சாமி என்ற நபர்தான் இதனை எதிர்த்துப் போராடித்தான், பெண்கள் முந்தானை போடுவதற்கே அனுமதி கிடைத்தது. இந்த வரலாறு பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? இதைவிட மற்றொரு பெரிய கொடுமையும் நடந்திருக்கிறது.
முலை (மார்பகங்களுக்கு) வரி
குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணமானவுடன் முதலில் அந்தந்த ஊர் கோயில் நம்பூதிரியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பிறகுதான், சொந்த கணவனிடமே உடலுறவு வைத்துக்கொள்ள முடியும் என்ற சட்டம் இருந்தது. இதனை எதிர்த்து மன்னன் பத்மநாதன் என்பவர் கடுமையான போராட்டம் நடத்தினார். அதில் நடிகை பத்மினி போன்றோரெல்லாம் பங்கேற்றனர். இதுபோன்ற கடுமையான செயல்களில் கேரளாவை ஒட்டியிருந்த தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த குறிப்பிட்ட ஒரு மேலாதிக்க சமூகத்தினர் ஈடுபட்டனர். ஆனால் இவையெல்லாம் தற்போது மூடி மறைக்கப்பட்டுவிட்டது.
அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்டெடுக்க போராடிய அன்னிபெசண்ட் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி போன்றோரின் பங்களிப்புகள் மறைக்கப்படுவது ஏன்?
பல்வேறு வகையான பாலியல் குற்றங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றிய புகார்கள் எழுந்தன. ஆனால் அவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. அதேபோலத்தான் தேவதாசி முறையும். அந்தக் காலத்தில் கன்னிப்பெண்களை சிவன் கோயிலுக்கு நேர்ந்துவிட்டுவிடுவார்கள். இவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியாது. கோயில்களில் நடனமாடியே வாழ்க்கை நடத்தினர். இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெரிய போராட்டமே நடத்தினார். தேவதாசிகள் இல்லையென்றால் அந்த கலாச்சாரமே கெட்டுப்போகும் என்று தீரர் சத்தியமூர்த்தி அதனை எதிர்த்து வாதிட்டார்.
அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
அதற்கு, ”கலாச்சாராம் மீதான உங்களுடைய அக்கறை நன்றாக இருக்கிறது. எனவே உங்கள் இனப்பெண்களை தேவதாசிகளாக்குங்கள். அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள்” என்று தடாலடியாக பேசினார் முத்துலட்சுமி. இந்த ஐடியாவை அவருக்குக் கொடுத்தவர் தந்தை பெரியார். இப்படித்தான் ஒருவழியாக தேவதாசி முறை முடிவுக்கு வந்தது. இதனால்தான் இன்றும் பெரியார் மீது பெண்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். பெண் அடிமைத்தனத்தை ஒழித்ததில் பெரியாரின் பங்கு, பாரதியாரின் பாடல்கள், பெண் கல்வி போன்றவைதான் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தன. இந்தியர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்ததே ஆங்கிலேயர்கள்தான். இதை யாராலும் மறுக்கமுடியாது.