இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்டார் நடிகர் விஜய். ஆனால் கூடவே அவர் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவது இல்லை என தெரிவித்தது பலருக்கும் வருத்தம்தான். இருப்பினும் தனது அரசியல் கட்சி மூலம் மக்களுக்கு சிறந்த தொண்டாற்றுவார் என மக்கள் ஒருபுறம் கூற, மறுபுறம் அரசியல் தலைவர்கள் பலரும் இவரை வாழ்த்தி வரவேற்றுள்ளனர். சிலர் கேலி கிண்டலும் செய்திருக்கின்றனர். சரி, வாழ்த்துதல்கள் ஒருபுறம் இருந்தாலும் பல அரசியல் தலைவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு முக்கியமான ஒரு காரணம், வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தான் போட்டியிட போவதில்லை எனவும், தன்னுடைய இலக்கே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் எனவும் விஜய் அறிவித்ததே. குறிப்பாக, தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக கட்சிக்கு கடுமையான போட்டியாக இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், நடிப்பதை நிறுத்திவிட்டு, சமீபத்தில் அரசியலில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிற உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக இருப்பார் என்றும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

விஜய்யின் கட்சி அறிவிப்பு கூறுவது என்ன?

பல ஆண்டுகளாக ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து பள்ளி மாணவர்களுக்கு உதவுவது, வெள்ள நிவாரணம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார் விஜய். இதன்மூலம் ஏற்கனவே மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்துவிட்டார் என்றுகூட சொல்லலாம். ஆனால் அது அரசியலுக்கு உதவுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. தனது கட்சி பெயரை அறிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையை பல அரசியல் விமர்சகர்கள் டீகோடு செய்துவருகின்றனர். அதன்படி பார்த்தால், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் ‘கழகம்’ இடம்பெற்றுள்ளதால் ஏற்கனவே ஆளும் கட்சி, எதிர்கட்சிகளாக உள்ள திராவிட கழகங்களுக்கு போட்டியாக இறங்குகிறார் என்று சொல்லலாம். பெரும்பாலான கட்சித் தலைவர்களின் பெயரை மறைமுகமாகக் கொண்டு கட்சிகளின் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதுபோலத்தான் விஜய்யும், தமிழக வெற்றி(விஜய்) கழகம் என தனது பெயரை மறைமுகமாக பயன்படுத்தியிருக்கிறார் என்கின்றனர். குறிப்பாக, நமது மாநிலத்தை தமிழகம் என்று குறிப்பிடுகிறது மத்திய அரசு. ஆனால் தமிழ்நாடு என்கிறது மாநில அரசு. விஜய் தனது கட்சி பெயரில் தமிழகம் என்பதை பயன்படுத்தியிருப்பதால் தேசிய சித்தாந்தங்களுக்கு தான் எதிரானவன் அல்ல; ஆனால் தேசிய கட்சிகளுக்கு எதிரானவன் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார் என்கின்றனர்.


உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் - விஜய்யின் மேடை பேச்சு

மேலும், ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ போன்ற வார்த்தைகள், தற்போதைய கட்சிகள் ஊழல் நிறைந்தவை மற்றும் சாதிமத பேதத்திற்கு வழிவகுப்பவை என்றும் நேரடியாகவே கூறியிருக்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வார்த்தை சமத்துவத்தை நிலைநாட்டுகிறது. இதனால் இவருடைய கட்சிக்கொள்கைகள் பெரும்பாலும் மதசார்பற்றதாகவும், அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் சட்டமன்ற தேர்தலில் இறங்கவுள்ளதாக அறிவித்திருப்பதால் விஜய்யின் இலக்கு தமிழ்நாடுதான் என்பது தெள்ள தெளிவாகிறது.

மக்கள் இயக்கத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கை

ஏற்கனவே பல்வேறு மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் தற்போது தமிழக வெற்றி கழகமாக உருவெடுத்திருப்பதால் முழு வீச்சில் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில்கூட சத்தமில்லாமல் 5 இடங்களில் வெற்றிபெற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அப்போதே விஜய் மக்கள் இயக்கம் பல பெரிய கட்சிகளின் கவனத்தை பெற்றது. மறைமுகமாகவும், நேரடியாகவும் பணத்தை அள்ளி இறைக்கும் கட்சிகளுக்கு மத்தியில் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்திற்கு இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. அப்போதே, ரசிகர்களே களத்தில் இறங்காமல் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்ற சுயேச்சை வேட்பாளர்களை தேடித்தேடி தேர்தலில் இறக்கினார்கள். திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய ஒரு நடிகரின் அரசியல் யுக்தி அப்போதிருந்தே கவனிக்கத்தக்க அம்சமாக இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இறங்கவிருப்பதால் இவருடைய கட்சியின் கொள்கைகள் எப்படி இருக்கும்? கொடி, சின்னம் போன்றவற்றை வைத்து விஜய்யின் அரசியல் யுக்தியை கணிக்கமுடியுமா? என்று காத்திருக்கின்றன பிற அரசியல் கட்சிகள். குறிப்பாக, தனது அரசியல் பயணம் மக்கள் சந்திப்புடன் தொடங்கும் என்று விஜய் அறிவித்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.


விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்

விஜய்க்கு வரவேற்பும் வெறுப்பும்

விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இதுபோன்று திடீரென அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்னதான் விஜய் ஒரு கட்சியின் தலைவராக உருவெடுத்தாலும் அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசித்த பலருக்கும் இது ஏமாற்றம்தான். விஜய்யின் அரசியல் வருகை குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரஜினி போல அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என கூறிவிட்டு, இவர் ஏமாற்றவில்லை. அதிரடியாக அரசியலில் இறங்கியது வரவேற்கத்தக்கது என்கின்றனர். சிலர் சினிமாவில் வசனம் பேசுவது எளிது; அதுவே களத்தில் நின்று மக்களுக்கு தொண்டாற்றி வெற்றிபெறுவது கடினம் என்கின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழிருக்கும் ரசிகர்களை தவறாக பயன்படுத்தாமல் சரியான பாதையில் அழைத்துச் சென்றால் நல்லது என்கின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதே அவருடைய வெற்றியை தீர்மானிக்கும் என்கின்றனர் சிலர். ஏற்கனவே பலம் வாய்ந்த கட்சிகள் இருக்கும் தமிழ்நாட்டில் புதிதாக ஒருவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம்; மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் தனித்து நின்று செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியலுக்கு வருகிற உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் எடுத்திருக்கிற இந்த முடிவுக்கு நமது பாராட்டுகள். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்!” என்றார்.

நாம் தமிழர் கட்சி சீமான், “தொடங்குதல் எளிது; தொடர்வது ரொம்ப கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசிவரை இருந்தால் யாரும் வெல்லலாம்” என்று கூறினார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “மக்கள் தொண்டாற்றுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “எங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. கட்சி ஆரம்பிப்பது சாதாரண விஷயம்தான். காலப்போக்கில் அந்த இயக்கம் நிற்குமா என்பதை மக்கள்தான் முடிவுசெய்வார்கள். அரசியல் என்பது ஒரு பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு; மூழ்கிப்போனவர்களும் உண்டு” என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், “6 மாதங்களுக்கு முன்பே 2026ஆம் ஆண்டு தேர்தலை இலக்காக வைத்து பயணிக்கிறேன் என்று கூறிவிட்டேன். விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருக்கிறார்.


கத்தி, சர்க்கார், தலைவா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் அரசியல் பேசிய விஜய்

2026 தேர்தல் விஜய்க்கு சாத்தியமா? உதயநிதிக்கா?

சினிமாவில் ஜொலித்த விஜய்காந்த், சரத்குமார், கமல்ஹாசன் போன்றோரால் அரசியலில் சோபிக்க முடியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னால் மத்தியில் பாஜக வளர்ச்சி இந்த அளவுக்கு இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் காங்கிரஸ் என்றால் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் தற்போது அதன் நிலை கண்டு பலரும் பரிதாபப்படுகின்றனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதுபோன்ற நிலை பிற மாநில அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திமுக, அதிமுகவின் நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது. அதேபோல் சரியான திட்டமிடலும், மக்களுக்கு தேவையான கொள்கைகளையும் கட்சிக்கு வகுத்தால்தான் விஜய்க்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும். தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இருந்ததா என்றால் சற்று குறைவு என்பதே நிதர்சனமான உண்மை. அதேபோல், பாஜகவின் அசுர வளர்ச்சியை காணும்போது விஜய்க்கும் அரசியல் கைகொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும் கட்சி அறிவிப்புக்கு பின்னர், உடனே தேர்தலில் குதிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுக்கிறார் என்றால் சரியான அடித்தளம் அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தாத்தா, அப்பா போல அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவந்த உதயநிதி, திடீரென நடிப்பை நிறுத்திவிட்டு அரசியல் களத்தில் இறங்கினார். யாரும் எதிர்பார்க்கவில்லை அவர் ஒரு செங்கல்லை வைத்து அரசியல் செய்வார் என்று. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து உதயநிதிக்கென தனித்துறையும் ஒதுக்கப்பட்டு அமைச்சரும் ஆக்கப்பட்டார். தற்போது முதலமைச்சருக்கு இணையான மரியாதையும் அவருக்கு வெளிப்படையாகவே கொடுக்கப்படுகிறது. இதிலிருந்தே திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது அனைவருக்குமே புரிந்திருக்கும். அதனை உறுதி செய்யும்விதமாக பல இடங்களில் வருங்கால முதலமைச்சரே! என்ற போஸ்டர்களையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இதனால் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உதயநிதிக்கு செல்வாக்கு சற்று அதிகமாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.


விஜய் vs உதயநிதி ஸ்டாலின்

ஆனால், விஜய்யின் அரசியல் பிரவேசம் பல கட்சிகளுக்கு உறுத்தலாக இருக்கும்போது திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தலைவா’ பட ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்களும் அதற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என்றும் கருத்துகள் வெளியாகின. ஆனால் முதலமைச்சரிடமே விஜய் பட ரிலீஸுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்து நிலைமையையே தலைகீழாக்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான விஜய் படங்களில் அரசியல் கலந்திருந்ததால் ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு பின்னர், உதயநிதியிடமிருந்து விஜய்க்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதை விஜய் வெளியிட்ட கட்சி அறிக்கையில் முதல் சில வரிகளிலேயே, ‘முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது’ என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது அரசியல் ஊழல் அற்றதாகவும், மதசார்பற்றதாகவும் இருக்கும் எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார் விஜய். இதனால் 2026ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் விஜய் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.

இருப்பினும் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளே அந்த எதிர்பார்ப்பை தக்கவைக்கும். அதேசமயம் தமிழ்நாட்டை பொருத்தவரை திமுகவும், அதிமுகவும் ஒன்றுக்கொன்று சலித்தவை அல்ல; எனவே இந்த இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில் மற்றொரு கட்சியின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் சற்று குறைவுதான். குறிப்பாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதியின் செயல்பாடுகளும் அவருக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் அடுத்த வெற்றி அரசியல் தளபதிக்கா? அல்லது சினிமா தளபதிக்கா? சினிமாவில் கிடைத்த செல்வாக்கு விஜய்க்கு அரசியலிலும் கைகொடுக்குமா? அல்லது சறுக்கிவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Updated On 19 Feb 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story