இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவின் மிக பிரமாண்டமான மற்றும் மிக முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில்வே. இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள் நாடு முழுவதும் 1 லட்சம் கி.மீ-க்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. உலகிலுள்ள ரயில்வே அமைப்புகளிலும் இந்தியன் ரயில்வே மிகப்பெரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியன் ரயில்வே மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதுடன் அதனை மேம்படுத்த, பராமரிக்க பல்வேறு பணிகள் தினந்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.

நாடு முழுவதும் ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டரை கோடிப்பேர் ரயில்கள் மூலம் பயணிக்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் ரயில் சேவையை பயன்படுத்தும் நோக்கில் சாதாரண கட்டணம் மற்றும் ஏசி என வகுப்புவாரியாக பெட்டிகள் அமைக்கப்பட்டு, சலுகைகளும் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வசதி வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற இந்தியன் ரயில்வேயில் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியன் ரயில்வே

இந்தியாவின் பெரும்பான்மையான வழித்தடங்களில் 100 முதல் 130 கி.மீ வரைக்கும் ரயில்கள் செல்லுமாறு தரம் உயர்த்தப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார். அதேபோல், கடந்த ஆண்டில் 5,200 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில்த்தடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பழைய வழித்தடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக, சில முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதவிர வந்தேபாரத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, முக்கிய நகரமான மும்பையில் புல்லட் ரயிலை இயக்கவும் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ரயில் விபத்துகள் அதிகரிக்க என்ன காரணம்?

என்னதான் ஒருபுறம் ரயில்வே துறை மேம்பாட்டுக்கான திட்டங்களும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வந்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. சமீப காலமாக ரயில் தடம் புரள்தல், பரமாரிக்கப்படாத தண்டவாளங்கள், ரயில் பெட்டிகளில் பழுது மற்றும் ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் விபத்துகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் சூர்யநாக்ரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து, ஆலப்புழா - கண்ணூர் பயணிகள் ரயில் தீவைப்பு, சென்னை - பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து, கோரமண்டல் என்க்ஸ்பிரஸ் - பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்றும் மோதி விபத்து மற்றும் கொல்லம் - புனலூர் விரைவு ரயில் சிலிண்டர் வெடி விபத்து என 5 பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. என்னதான் ரயில்வேயில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பொருட்களை கொண்டுசெல்வதை தடுக்க முடிவதில்லை என்பது பலரையும் அச்சத்திற்குள்ளாகுகிறது.


மோசமான ரயில் விபத்துகள்

இந்த ஆண்டின் மேஜர் விபத்துகள்

பொதுவாக இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதால் விபத்து நிகழ்வதுண்டு. ஆனால் ஒடிசாவில் ஜூன் மாதம் 3 ரயில்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய கோர விபத்தில் 288 உயிர்கள் பறிபோயின. ரயில் பெட்டிகள் ஒன்றன்மீது மற்றொன்று ஏறி நசுங்கியதில் பல உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்து போய் நாட்டையே நிலைகுழையச் செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நின்றுகொண்டிருந்த கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெட்டியே தீப்பற்றி எரிந்தது. ஆன்மிக சுற்றுலா சென்ற 60 பயணிகள் இருந்த அந்த ரயிலில் சட்டவிரோதமாக பயணிகள் கொண்டுவந்த சிலிண்டரை பற்றவைத்தபோது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. குறிப்பாக ரயில் பெட்டியின் கதவுகளை பூட்டிவிட்டு ரயிலுக்குள்ளேயே சமைத்துள்ளனர். இந்த விபத்தில் 9 பேர் பலியானதும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


ஒடிசா ரயில் விபத்து

2021- 22ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் 34 ரயில் விபத்துகளும், 2022-23 ஆம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை ௪௮ ஆகவும் அதிகரித்திருப்பதாக தி இந்து நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரயில் விபத்துகளுக்கான காரணிகள் பல இருந்தாலும் அவற்றில் முதலிடம் வகிப்பது தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததுதான். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக ஏப்ரல் 2017 - மார்ச் 2021க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெற்ற ரயில்வே விபத்துகள் குறித்த ஃபெடரல் ஆடிட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி பாதை விலகியிருத்தல், இயந்திரக்கோளாறு, ரயில் பெட்டி பழுது, அதிவேகம் மற்றும் ஓட்டுநரின் கவனமின்மை போன்றவையும் விபத்துகளுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

என்ன சொல்கிறது ரயில்வே?

ரயில்கள் தடம்புரள்வதால் 70% விபத்துகளும், தீவிபத்தால் 14% விபத்துகளும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் 8% விபத்துகளும் நிகழ்வதாக ரயில்வே துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க 110-130 கி.மீ வேகத்தில் ரயில்கள் செல்லும் தண்டவாளங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பராமரிக்கப்பட வேண்டும்.


முறையாக பராமரிக்கப்படாத தண்டவாளங்கள்

இந்திய ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தப்படும் உலோகமானது வெயில் காலங்களில் விரிவடையும் தன்மையும், குளிர்காலங்களில் சுருங்கும் தன்மையும் கொண்டது. இதனாலேயே விரிசல்கள் ஏற்படுகின்றன. தவிர, தண்டவாளங்களை மாற்றும் ஸ்விட்சுகளில் ஏற்படும் உராய்வை தடுக்கவும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பணிகள் முறையாக நடைபெறுவது உறுதிபடுத்தப்படும் என ரயில்வே தெரிவித்திருக்கிறது. மேலும் விபத்துகள் குறித்து ரயில்வே கவலைகொள்வதாகவும் அலட்சியப்போக்கை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

நிலவை ஆய்வுசெய்ய சந்திராயன் 3-ஐ அனுப்பி உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இந்தியா. இதனிடையே சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோளை அனுப்பும் முயற்சியிலும் இஸ்ரோ இறங்கியிருக்கிறது. இப்படி உலகளவில் சாதனை புரிந்துவரும் இந்தியா, தினந்தோறும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையின் மேம்பாட்டுக்கு போதிய கவனம் செலுத்தாதது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Updated On 5 Sept 2023 12:05 AM IST
ராணி

ராணி

Next Story