இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அரசியல் தலைவர்கள் என்றாலே அவர்களுக்கு பாதுகாப்பு பலமாக இருக்கும். அதிலும் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு பல அடுக்குகளாக பாதுகாப்பானது வழங்கப்படும். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதுகாப்பு அந்தஸ்து என்பது சற்று கூடுதலாகவே இருக்கும். பொதுவாக தமிழகத்தில் முதலமைச்சர்களுக்கு கோர்சல் மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுடன் உரையாடுவதிலும், அவர்களுடன் சகஜமாக பழகுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் அவர் ஆட்சி பொறுப்பேற்றபோதே பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் நிறுத்தவேண்டாம் என உத்தரவிட்டார். பிறகு தனக்கான கான்வாய் பாதுகாப்பை குறைப்பதாக அதிரடியாக அறிவித்தார். அதன்படி 12 முதல் 13 வாகனங்களிலிருந்து பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 6ஆக குறைக்கப்பட்டது. என்னதான் பாதுகாப்பு ஒருபுறம் இருந்தாலும், தினசரி வாக்கிங், சைக்கிளிங், ஜிம் என அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தனது பழைய கார் ஒன்றை முதலமைச்சரே ஓட்டிச்செல்ல, மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த காரில் அமர்ந்து அவருடன் ஜாலியாக பயணம் செய்தார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகின. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாகனங்கள் குறித்தும், அவரது பயணங்கள் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.


சமூக ஊடகங்களில் வைரலான மு. க ஸ்டாலினின் புகைப்படங்கள்

மு.க ஸ்டாலினின் கார் காதல்!

மு.க. ஸ்டாலின் ஒரு பயணப் பிரியர் என்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அளித்த ஒரு நேர்க்காணலில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட பயண காதலர் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் அவர் முதலமைச்சரான பிறகு தனக்கென ஒரு SUV காரை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் மேலும் சில சொகுசு கார்களையும் பயன்படுத்தி வந்தார். ஸ்டாலினுக்கு விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்வதைவிட காரில் பயணம் செய்வதுதான் மிகவும் பிடித்தமானதாம்.

இவர் திமுக இளைஞரணியில் இருந்தபோதிருந்தே, தமிழகம் முழுவதும் காரில் பயணித்துதான் கட்சி பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். அதிலும் குறிப்பாக, எப்போதெல்லாம் அப்படி அரசியல் பிரசாரங்களுக்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் தனது ஓட்டுநரை இருக்கையில் அமர வைத்துவிட்டு, தானே காரை ஓட்டிச் செல்வாராம். ஆனால் அரசியலில் முக்கியப் பொறுப்புகளை ஏற்ற பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக கார் ஓட்டாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம், தனக்கு மிகவும் பிடித்த பழைய மாடல் காரான ஃபியட் பத்மினி காரை முதலமைச்சரே ஓட்டிச்சென்ற வீடியோ சமூக ஊடங்களில் வைரலானது. உடல்நலக்குறைவால் ஒருவார காலமாக ஓய்வெடுத்த முதல்வர், தான் வழக்கமாக வாக்கிங் செல்லும் பகுதிக்குச் செல்ல தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டிலிருந்து காரை தானே ஓட்டிச்சென்றார். அந்த காரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட 4 பேர் அவருடன் பயணித்தனர். முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கூறுகையில், “திருமணமான புதிதில் தன்னை அமரவைத்து, அவரே காரை ஓட்டிச்செல்வார்” என்று தனது நினைவலைகளை பகிர்ந்தார்.


மு. க ஸ்டாலினின் கார்கள்

மு.க. ஸ்டாலின் பயன்படுத்திய கார்கள் - ஓர் தொகுப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியல் காரணங்களுக்காக செல்லும்போது டொயட்டோ பிராடோ என்ற எஸ்யூவி காரை பயன்படுத்துகிறார். இதன் விலை சுமார் ஒரு கோடி ரூபாய். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதே காரைத்தான் பயன்படுத்தினார். இதுதவிர, ஸ்டாலின் சென்னை சாலைகளில் பயணிக்கும்போது லாண்ட் ரோவர் டிஃபென்டர் என்ற சொகுசு காரைத்தான் பயன்படுத்துகிறார். சாலை மார்க்க பயணங்களில் ஆர்வம்கொண்ட ஸ்டாலின், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அரசியல் சுற்றுப்பயணங்களின்போது, டெம்போ டிராவலர் வேன் மற்றும் பென்ஸ் வேன் போன்றவற்றையும், மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேனையும் பயன்படுத்துகிறார். இதுபோன்ற பிரசார வேன்களில் நீண்ட தூர பயணங்களின்போது ஓய்வெடுக்க பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். மேலும் டெம்போ டிராவலர் வேன்களில் 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பயணம் செய்யும்படியான வசதிகளும் இருக்கும்.

இதுதவிர, முன்பெல்லாம் பிரசாரங்களின்போது பேண்ட் - ஷர்ட்டில்தான் வலம்வருவார் ஸ்டாலின். இப்படி இருப்பதன்மூலம் தன்னை இளைஞராகவே உணர்வதாக அவர் தெரிவித்தார். மேலும், ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது ஆட்டோ, சைக்கிள், ஸ்கூட்டர், டிராக்டர், பஸ் மற்றும் மாட்டுவண்டி என அவர் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தது அப்போதைய செய்திகளில் வைரலானது.


உதயநிதியின் கார்கள்

உதயநிதி ஸ்டாலினின் கார் கலெக்‌ஷன்ஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் மகனும், தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் எப்போதும் விலையுயர்ந்த கார்களையே பயன்படுத்துகிறார். அமைச்சர் ஆவதற்கு முன்பு ஹம்மர் எஸ்யூவி என்ற விலையுயர்ந்த வெளிநாட்டு காரை அவர் பயன்படுத்தினார். அதுதவிர, ரூ. 80 லட்சம் மதிப்புடைய BMW x5 கிராஸ் ஓவர் மாடல் கார், ரூ. 1.50 கோடி மதிப்புடைய மஸராட்டி க்ரான் டூரிஷ்மோ, ரூ. 1 கோடி மதிப்புடைய போர்ஷே கேயன் எஸ்யூவி போன்ற கார்களையும் அவர் பயன்படுத்தி வந்தார். இவைதவிர, அமைச்சராக பொறுப்பேற்ற பின், அரசால் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் அரசு இலச்சினை பொருத்தப்பட்ட டொயோட்டோ சொகுசு காரில் தற்போது வலம்வருகிறார் உதயநிதி. இதனால், அப்பாவைப் போலவே மகனும் கார்களின்மீது பிரியம் கொண்டவராகத்தான் இருக்கிறார் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. எது எப்படியாயினும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனக்கென எத்தனை கார்களை சொந்தமாக வைத்துள்ளார் என்பது அடுத்த தேர்தல் வேட்புமனு தாக்கலின்போதுதான் தெரியவரும்.

Updated On 12 Dec 2023 12:13 AM IST
ராணி

ராணி

Next Story