இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்று நமது நாட்டின் 77-வது சுதந்திர தினம். நாட்டின் சுதந்திரத்திற்காக உதிரம் சிந்தி அரும்பாடுபட்டு போராடியவர்கள் பலர். பாலகங்காதரத் திலகர், லாலா லஜபதிராய், மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை எனப் பலர் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஆண்களின் பங்கு மட்டும்தான் இருந்ததா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. போராட்டக் களத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்கும் சமமாக இருந்தது என்பதே உண்மை. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உரிமைகளையும் உடைமைகளையும் இழந்து சுதந்திரத்தை மீட்டெடுத்த விடுதலை போராட்ட வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்க சிலரைப் பற்றிய ஒரு சிறிய பதிவு இதோ:

வீரமங்கை வேலுநாச்சியார்

சுதந்திர இந்தியாவிற்கான போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து குரல் கொடுத்த முதல் பெண் வீராங்கனை வேலுநாச்சியார்தான். 1730-ஆம் ஆண்டு பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், தமது இளமைப் பருவத்திலேயே குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், களரி போன்ற பயிற்சிகளில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார். 1746-ஆம் ஆண்டு வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையை ஆண்ட முத்துவடுகநாதரை மணமுடித்தார். இவர்களுக்கு வெள்ளை நாச்சியார் என்ற பெண் குழந்தையும் பிறந்தது. சிவகங்கைச் சீமையை சிறப்புடன் ஆண்டு வந்த முத்துவடுகநாதரிடம் கப்பம் கட்ட வலியுறுத்தி உத்தரவிட்டார் ஆற்காடு நவாப் முகமது. கப்பம் கட்ட மறுத்த முத்துவடுகநாதர் மீது ஆங்கிலேயர் உதவியுடன் நவாப் படையெடுக்கத் தொடங்கினார். இறுதியில் காளையார்கோவிலில் இருந்த முத்துவடுகநாதரை வீழ்த்தி காளையார்கோவிலைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் வேலுநாச்சியாருக்குத் தெரியவர மிகுந்த கோபமுற்றார். மருது சகோதரர்களின் ஆலோசனையின்படி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட யுத்திகளை வகுத்தார். எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்கையை வாழ்ந்த இவர் பல்வேறு இடங்களில் இருந்து படைகளைத் திரட்டி 1780-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த படைகளை மூன்றாகப் பிரித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மும்மனைத் தாக்குதல் நடத்தி வெற்றிக் கனியை எட்டிப்பிடித்தார். பின்னர் சிவகங்கை கோட்டையைக் கைப்பற்றிய வேலுநாச்சியார், அங்கிருந்த பிரிட்டீஸ் கொடியை கீழிறக்கி, இந்திய நாட்டுக் கொடியை பறக்கவிட்டார்.


‘வீரமங்கை’ வேலுநாச்சியார்

குயிலி

ராணி வேலுநாச்சியாரின் ராணுவத் தளபதியாக இருந்தவர் குயிலி. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நடந்த ஆங்கிலேயருக்கு எதிரான பிரச்சாரங்களில் தீவிரமாகக் கலந்துகொண்டார் குயிலி. கிழக்கிந்தியக் கம்பெனியின் கோட்டையைத் தாக்கமுற்பட்டபோது வேலுநாச்சியாரின் நான்காயிரம் பெண்கள் பிரிட்டீஷ் பீரங்கிகளால் கொள்ளப்பட்டனர். குயிலி ஒரு இராணுவத் தளபதியாக உடலில் நெய் மற்றும் எண்ணெய் தடவிக்கொண்டு, தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுதக் களஞ்சியத்தில் குதித்து வீர மரணம் அடைந்தார். பரவலாக பலராலும் அறியப்படாதவராக இருந்தாலும்கூட, குயிலி அன்று செய்த செயல் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் மகத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.


குயிலி

தில்லையாடி வள்ளியம்மை

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு பிரிட்டீஷாரால் விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து 1913-இல் காந்தியடிகள் அறப்போராட்டங்களை நடத்தினார். இளம்வயதிலே வள்ளியம்மையின் மனதில் காந்திஜியின் சொற்பொழிவுகள் ஆழமாகப் பதிந்து விடுதலைக் கனலை மூட்டின. தொடர்ச்சியாக விடுதலைப் போராட்டங்களில் அவரும் பங்கேற்கத் தொடங்கினார். தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து மகளிர் சத்தியாகிரகப் படை அணி திரண்டது. அவர்களுக்கு உதவும் விதமாக தம்மால் இயன்ற தொண்டுகளை செய்து வந்தார். `சொந்த கொடி கூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?’ என்ற ஆங்கிலேயர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக, தனது சேலையைக் கிழித்து அவரின் முகத்தில் விட்டெறிந்த வள்ளியம்மை, “இதுதான் எங்கள் தேசியக் கொடி” என்ற தனது தைரியமான பேச்சால் அந்த ஆங்கிலேயரை மிரளச் செய்தார்.


தில்லையாடி வள்ளியம்மை

சுகாதாரமற்ற சிறை வாழ்க்கையாலும், சிறுவயதிலேயே சிறைக்குச் சென்று அங்கு கடுமையான பணிகளைச் செய்ததாலும், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ஆங்கில அரசு அவரை விடுவிக்க முடிவு செய்தது. விடுதலையாக மறுத்த வள்ளியம்மை தனது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகே வெளியே வந்தார். பின்னர் பத்து நாட்கள் நோயுடன் போராடிய வள்ளியம்மை, 1914- ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்று உயிர்நீத்தார்.

சரோஜினி நாயுடு

கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் என்ற பெருமைக்குரியவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு. 1905-ஆம் ஆண்டு வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார். காந்தி மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோரின் கைதுக்குப் பின் தர்ணா போராட்டத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.


சரோஜினி நாயுடு

1915 முதல் 1918 வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண்ணுரிமை மற்றும் தேசப்பற்று குறித்த பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1925- ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைடெடட் ப்ரொவின்சஸின் ஆளுநராகப் பதவியேற்றார்.

அம்புஜம்மாள்

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் அன்னை கஸ்தூரி பாயின் எளிமையான வாழ்கையால் ஈர்க்கப்பட்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அம்புஜம்மாள். பிற்போக்கு சிந்தனைகளுடைய குடும்பத்தில் பிறந்தாலும் தனது சுயத்தை உணர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுப்பட்டவர். விடுதலைக்காக இவர் பங்கேற்ற போராட்டங்கள் ஏராளம். வை.மு.கோதைநாயகி, ருக்மணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் அம்புஜம்மாள். பாரதியாரின் பாடல் வரிகள் மூலம் மக்களிடையே தேசப்பற்றை வேரூன்றச் செய்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புக்கூறும் விதமாக அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியலில் ஈடுபட்டார். அதற்காக சிறை சென்றார்.


அம்புஜம்மாள்

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படும் அம்புஜம்மாள் தனது தந்தையின் பெயரோடு காந்தியடிகள் பெயரையும் இணைத்து `சீனிவாச காந்தி நிலையம்’ என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். இவரது எளிய வாழ்க்கையும், விடுதலைப் போராட்டமும் மக்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Updated On 21 Aug 2023 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story