இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கையாள்வதற்காக, சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்து, அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது மகளிர் ஆணையம். பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தலையாய பணியைச் செய்து வருகிறது. குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான துன்புறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இவ்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமாரி விஜயகுமார் நமக்களித்த பேட்டி இதோ…

மகளிர் ஆணையத்தின் பணிகள் என்ன?

பெண்களுக்கான சட்டங்களைப் பாதுகாத்து வரும் முக்கியமான பணியைச் செய்கிறது மகளிர் ஆணையம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களுக்கான சில திட்டங்களை அரசுக்குப் பரிந்துரை செய்கிறோம். அதுமட்டுமின்றி, குடும்ப வன்கொடுமை, வரதட்சிணைக் கொடுமை, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் போன்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்த விவகாரங்களைப் பரிசீலித்து, தகுந்த நடவடிக்கைகளை இந்த ஆணையம் எடுத்து வருகிறது.

மகளிர் ஆணையத்தின் நோக்கம் என்ன?

டெல்லியில் தேசிய மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதுபோல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில மகளிர் ஆணையங்கள் இயங்கி வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த மகளிர் ஆணையங்களின் முக்கிய நோக்கமாகும்.


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மகளிர் ஆணையம் என்ன மாதிரியான உதவிகளைச் செய்து வருகிறது?

பெண்ணையோ இல்லை பெண்ணின் உடல் உறுப்புகளையோ உற்றுப் பார்ப்பது, சைகை செய்தல், ஆபாசப் படங்களை காட்டுவது போன்ற பாலியல் சீண்டல்கள் அனைத்தும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வரும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முன்பெல்லாம் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை வெளியில் சொல்லவே பெண்கள் அஞ்சி நின்றனர். அது குடும்பத் தகராறாக இருந்தாலும்கூட . ஆனால் இன்று பெண்கள் துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். மகளிர் ஆணையத்துக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ வந்து புகார் அளிக்கின்றனர்.

மகளிருக்கு எதிராக நடக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுக்க, காவல் துறையுடன் இணைந்து மகளிர் ஆணையம் செயல்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களுக்குள்ளேயே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எப்படிப்பட்ட விழிப்புணர்வு இருக்கவேண்டும்?

இரவு நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் SOS என்ற காவல் துறை செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. இது பெண்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களும் இந்த செயலியை அவசியம் வைத்திருக்கவேண்டும். 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,000 முதல் 1,200 மனுக்கள் வரை மகளிர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 2022-ஆம் ஆண்டில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகளிர் ஆணையங்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இதற்குக் காரணம்.

SOS செயலியை எப்படிப் பயன்படுத்துவது?

இந்தச் செயலியை அனைத்துப் பெண்களுமே தங்கள் கைபேசியில் ப்ளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்கள் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், அந்தச் செயலி வழியே கைபேசியில் ஒரு பட்டனை அழுத்துதல் அல்லது கைபேசியை அசைப்பதன் மூலமாக காவல்துறையினருக்கு தகவல் அனுப்பலாம். அதன்மூலம் காவல்துறையினர் அப்பெண் இருக்கும் இடத்திற்கே சென்று அவரை மீட்க முடியும்.


சைபர் க்ரைம்கள் அதிகம் நடக்கிறதே… இதை எப்படிச் சமாளிப்பது?

இணையத்தின் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தகவல்கள் தினம்தினம் திருடப்பட்டு வருகின்றது. அவ்வாறு திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு மிரட்டல்கள் வருவதாக நிறைய பெண்கள் புகார்கள் அளிக்கின்றனர். எனவே பெண்கள் இதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சைபர் க்ரைம் மற்றும் காவல் துறையின் உதவியை நாடுதல் அவசியமாகும். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல் நிலையத்தில் சைபர் க்ரைம் அதிகாரி ஒருவர் இருப்பார். காவல்நிலையம் செல்ல அஞ்சும் பெண்கள், 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.


பெண்கள் மறுவாழ்வுத் திட்டம் என்றால் என்ன?

பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மட்டுமின்றி வருமானத்துக்கு வழியின்றித் தவிக்கும் பெண்களும் மகளிர் ஆணையத்தின் உதவியை நாடி வருவார்கள். அவர்களை அரசால் நடத்தப்படும் ஹோம்களில் சேர்த்து, சமூக நலத்துறையோடு இணைந்து அளிக்கப்படும் தையல் பயிற்சி போன்ற கைத்தொழில்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து தருகிறோம். இதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டவும் வழிகாட்டுகிறோம்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி எண்கள் (ஹெல்ப்லைன் எண்கள்) என்னென்ன?

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தொலைபேசி எண்: 044- 2859 2750, மின்னஞ்சல் முகவரி: chairsewtn@yahoo.com. பெண்கள் பாதுகாப்புக்கான கட்டணமில்லா உதவி இணைப்பு எண் 181. குழந்தைகளுக்கான கட்டணமில்லா உதவி இணைப்பு எண் 1098.

Updated On 1 Aug 2023 5:04 PM IST
4SubEditor

4SubEditor

Next Story