பரப்பான உலகில் இன்றைய தலைமுறையினர் அதிகளவில் சமூக வலைதளங்களை சார்ந்துதான் இருக்கின்றனர். தினம் தினம் புதுப்புது செய்திகளை அறிந்துகொள்ளவும், நன்கு அறிந்த மற்றும் புதிய முகங்களோடு தொடர்பில் இணையவும் இந்த ஊடகங்கள்தான் உதவியாக இருந்து வருகிறது. மேலும் செய்திகள் ஒருபுறம் பரப்பப்பட்டாலும் மறுபுறம் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சில சமூக வலைதள அரசியல் விமர்சகர்களின் கருத்துகளும், அதுகுறித்த விமர்சனங்களும் காட்டுத்தீயாய் மக்களிடையே பரவுவதும் வழக்கமாக ஒன்றாக இருக்கிறது. இங்கு பல விமர்சகர்கள் சமூகம், மதம், அரசியல், பெரியார் கொள்கைகள் குறித்த கருத்துகளை தைரியமாகவும் மிகத் தெளிவாகவும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க ஒரு சமூக வலைதள விமர்சகராக இருப்பவர் ஹரிஹரன். மென்பொருள் பட்டதாரியாக இருக்கும் இவர் பெரியார் கொள்கைகள், சமூகம், பெண்ணியம், அரசியல் குறித்த கருத்துகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவரோடு நடத்திய ஒரு உரையாடல் பின்வருமாறு...
1. தமிழகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் இருக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் என்னென்ன?
உலகளவில், மதரீதியாகவும் சரி; கலாசாரம் மற்றும் நாகரிக ரீதியாகவும் சரி, ஆண்களே ஆண்களின் நலனுக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு கட்டமைப்புதான் இவை அனைத்தும். தமிழகத்தில் மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா இடங்களிலுமே அதிகளவில் ஆண்கள் அதிகாரத்தில் இருப்பதும், சாதி, மத, கலசாரக் கோட்பாடுகளும்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது.
பெண்கள் மீதான மதங்களின் திணிப்பு
2. தற்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சியானது சரியான வழியில்தான் நடக்கிறதா?
நான் முழுவதுமாக திமுக கட்சியைச் சேர்ந்தவன்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் தேர்தல் சமயங்களில் திமுக கட்சிக்காக பல இடங்களில் பிரசாரங்களும் செய்துள்ளேன். திமுக, ஆட்சியைத் தொடங்கிய நாளிலிருந்தே ஏராளமான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பெண்களுக்கு இலவசப் பேருந்துத் திட்டம், மாத உரிமைத் தொகைத் திட்டம் போன்ற பெண்களுக்கு பலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். இவை ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஏராளமான கோரிக்கைகளும், குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக ஆணவக் கொலை, சாதிய ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை என்பது தமிழகத்தில் அதிகளவில் அரங்கேறி வருவது வழக்கமாக உள்ளது. ஆணவக் கொலைக்காக இருக்கும் சட்டங்கள் போதாது. இங்கு ஆணவக் கொலைக்கான சிறப்பு சட்டங்களின் சட்டத்திற்கான தேவையும் அவசியமாக இருக்கிறது.
‘மீ டூ’ மற்றும் பெண்கள்
3. இந்தியாவிலும் சரி; தமிழ்நாட்டிலும் சரி ‘மீ டூ’ இயக்கத்தின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது?
பெரியளவிலான தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால் அந்த இயக்கமானது பெரியளவில் இருந்திருக்க வேண்டிய ஒன்றாகும். பிரபலங்களாக இருந்தாலும் கூட சில சமயங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான தீர்வுகள் அவர்களுக்கு சரிவர வழங்கப்படுவதில்லை. ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலத்தை அந்தப் பெண்ணே அன்றே வெளிவந்து சொல்லவேண்டும் என்று எண்ணுவது முட்டாள்த்தனமான ஒன்று. ஆனால் இன்றும் ‘மீ டூ’ இயக்கத்தில் பெண்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தயங்குகிறார்கள்.
4. இந்திய மற்றும் தமிழ் சினிமாத்துறையில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்?
சினிமாவில் பெண்களுக்கு உரிய அதிகாரம் சரிவர கிடைக்க வேண்டும் என்றால், முதல் நமது சமூகத்தில் பெண்களுக்கு உரிய உரிமைகளும், அதிகாராங்களும் சரிவர கிடைப்பதுதான் சினிமாத்துறையில் பெண்களின் சித்தரிப்புகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாகும். மேலும் இந்த சினிமாத்துறையில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.
சினிமாத் துறையில் பெண்கள் சித்தரிப்பு
ஏனென்றால் அது அதிகப்படியான மக்களை எளிதில் சென்றடையும். அதிலும் குறிப்பாக இங்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகம். அதாவது ரஜினி, கமல், விஜய் போன்ற தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களிலும்கூட ஆணாதிக்கம் நிறைந்த வாக்கியங்களும் இடம்பெறத்தான் செய்கிறது. ஆனால் தற்போது அந்த சூழலில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இயக்குநர்கள் வரிசையில் வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், ஞான வேல்ராஜா என சிலர் சாதிரீதியாக மட்டும் இல்லாமல் பெண்களை இப்படித்தான் திரையில் சித்தரிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றனர்.
5. சனாதனம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?
பெரும்பாலான மக்கள் சவர்னாஸ், அதாவது சாதி அமைப்பையும், வர்ண அமைப்பையும் ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கு சில சமூக கட்டுப்பாடுகள் இருக்கிறது. கோவில் கருவறைக்குள் செல்ல தடை, சாதிவாரியாக தெருக்களுக்குள் செல்ல இருக்கும் தடைகளாக இருக்கட்டும்; இவை அனைத்துமே இதிகாசப் புராண வேதங்களால் நடத்தப்பட்ட திணிப்புகள்தான் சனாதனம்.
சமூகத்தின் மீதான சனாதன தாக்கம்
6. சமூகத்தின் வளர்ச்சி குறித்த உங்களுடைய கருத்து என்ன?
அறிவியல்ப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் அந்த சமூகத்தின் வளர்ச்சியும் இருக்கிறது. ஒருவரது சுய அடையாளத்தை புரிந்துகொண்டாலே இந்த சமூகத்தில் இருக்கும் பல சிக்கல்களுக்கு நம்மால் தீர்வு காண இயலும். ஒரு சமூகம்தான் அடிமையாகத்தான் இருக்கிறேன் என்பதனை உணராத வரையில் மட்டுமே மிகவும் பின்தங்கிய நிலையில் வளர்ச்சி இன்றி இருக்கும்.