தொழில்நுட்பங்கள் இயற்கைக்கு ஒத்த செயற்கைகளை வழங்கி வந்தாலும் அது எதுவும் இயற்கைக்கு நிகராகாது. இன்றைய வேகமான உலகத்தில் இயற்கையை ரசிக்க மட்டுமல்ல இயற்கையின் தேவையையும் மனிதன் மறந்து வருகிறான். ஆனால் இன்னும் இயற்கையை நேசிக்கும் இயற்கையோடு தொடர்பை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்லுக்குடி மக்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அப்படி என்ன செய்கிறார்கள்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்லுக்குடி கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தங்களது முழுநேரத் தொழிலாக நர்சரி தோட்டங்களை அமைத்து பராமரித்து வருகின்றனர். இதுவே இக்கிராமத்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
நர்சரி தோட்டம்
நர்சரி என்பது ஒரு செடியையோ அல்லது விதையையோ உற்பத்தியாக்கி பராமரித்து வரும் இடமாகும். நர்சரி தோட்டங்களில் பதியம் போடுதல், விதைகளை சேகரித்து பராமரித்தல், நாற்றங்கால்களை உருவாக்குதல், அதை தொட்டிகளில் மாற்றி வேரூன்ற செய்தல் என தாவரங்களை குழந்தைகளை போன்று பேணி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்லுக்குடி கிராமத்தை சுற்றிலும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நர்சரி தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்கள் அவ்வூரில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன.
கல்லுக்குடி கிராமத்தில் இயங்கும் நர்சரி தோட்டம்
சாராயம் காய்ச்சிய கிராமத்தில் நர்சரி தோட்டங்கள்
கல்லுக்குடி கிராம மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வறுமையில் உழன்று வந்தனர். அதனால் வறுமையிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக சாராயம் காய்ச்சி விற்கத் தொடங்கினர், அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிட்டியதைத் தொடர்ந்து அதையே தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்தத் தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. சாராயம் காய்ச்சுவதை நிறுத்துவதற்காக கல்லுக்குடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, “அரசாங்க சட்டத்திற்கு விரோதமாக சாராயம் காய்ச்சுவதும் விற்பனை செய்வதும் தவறு” என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட மக்கள், “இந்தத் தொழிலையும் கைவிட்டால் எங்களது வாழ்வாதாரத்திற்கு வழிதான் என்ன?” என்ற கேள்வியை காவல்துறை முன்வைத்தனர்.
சாராயம் காய்ச்சுதல்
இந்த பிரச்சினை காவல்துறை மூலமாக ஆட்சியர் கவனத்திற்கு சென்றது. 1991-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத் கிராம மக்களின் பிரச்சினையை தீவிரமாக அலசி ஆராய்ந்து அதை தீர்க்கும் வகையில் அம்மக்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் கடனுதவி பெற ஏற்பாடு செய்து தந்தார். இப்படியாக கிடைத்த கடனுதவியைக் கொண்டு கிராம மக்கள் தங்கள் ஊரில் நர்சரி தோட்டங்களை அமைக்கத் தொடங்கினர். ஆட்சியரின் இந்தத் திட்டம் கல்லுக்குடி கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது. அவர்களின் வறுமை நிலை மாற வழிவகுத்தது.
கல்லுக்குடி கிராமத்திலுள்ள நர்சரி தோட்டங்கள்
நர்சரி தோட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக 2001-இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பு கல்லோலிகர், நர்சரி கார்டன்களுக்கு போர்வெல் அமைத்துக் கொடுத்தார். அதே ஆண்டில் சுமார் 200 வீடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட நர்சரி தோட்டமானது, தற்போது கிராமத்தில் இருக்கும் 350 வீடுகளில் 300– க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பிரதான தொழிலாக மாறியிருக்கிறது. இந்த நர்சரி தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான பூச்செடிகள், மரக்கன்றுகள் மற்றும் அழகுச்செடிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சிக்கல்களும் சவால்களும்
இன்றைய சூழலில் நர்சரி தோட்டத்தை பராமரிப்பது எளிதானதாக இல்லை. ஆரம்பகட்டத்தை போலில்லாமல் தற்போது காலநிலை மாற்றம், மணலின் விலையேற்றம், நீர் பற்றாக்குறையால் விலைக்கு தண்ணீர் வாங்குதல் போன்றவை தங்களுக்கு பெரும் சவால்களாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி அரசுடைமை வங்கிகளில் இருந்து கடனுதவி எளிதில் கிடைப்பதில்லை என்றும், தனியார் வங்கிகளில் கிடைக்கும் கடனுக்கான வட்டி விகிதம் வருமானத்தை மிஞ்சிய செலவாக இருப்பதாகவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி கிராமத்தின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி மட்டுமே இருப்பதால், அடுத்த நிலை கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரிமளம் என்ற ஊருக்கு நடந்து சென்று கல்விக்கற்க வேண்டி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டாலும், மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அங்கலாய்கின்றனர் கல்லுக்குடி கிராம மக்கள்.
விலையேறிய மணல் மற்றும் தண்ணீர் வற்றிய குளம்
இந்த கிராமத்திலுள்ள ஒரு நர்சரி தோட்டத்தின் உரிமையாளர் அடைக்கலம் தெரிவிக்கையில், “எங்களோட அன்றாட பசியைப் போக்கிக் கொள்ள இந்த நர்சரி எங்களுக்கு வழிகாட்டுகிறது. வருமானம் பெரியளவில் இல்லையென்றாலும் கடனில்லாமல் எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். இதையே அடுத்த தலைமுறையினர் தொடர்ந்து செய்வாங்கன்னு எந்த நிச்சயமும் கிடையாது. எனவே அரசாங்கம் இதற்கு முன்னுரிமை கொடுத்து எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தால் எங்களுடைய கிராமம் நல்ல வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்.
ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, மறுபக்கம் அடிப்படை வசதியற்ற கிராமம்
ஒருபுறம் நாட்டில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் மற்றொருபுறம் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. கல்லுக்குடி கிராம மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?