2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்றார். அப்போதிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு என்பது நீடித்துக்கொண்டே வருகிறது. ஆளுநர் உரையின் சில பக்கங்களை வாசிக்காமல் தவிர்த்தல், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறுதல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தல், மாநில அரசின் கொள்கைகளை விமர்சித்தல் என ஆர்.என் ரவி அவ்வப்போது சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே அவர் அவையைவிட்டு வெளியேறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மாநில அரசு மற்றும் ஆளுநர் மாளிகை என இரு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் வேறு சில மாநிலங்களிலும் இதுபோன்று ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையேயான மோதல் போக்கு என்பது நீடித்துக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து சற்று விரிவாக காணலாம்.
சட்டப்பேரவையில் என்ன நடந்தது?
ஆண்டுதோறும் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரானது தொடங்கியது. காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்கியது. உரையை வாசிக்க சென்ற ஆளுநர், சட்டப்பேரவை துவங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் உரையில் தவறான தகவல்களும், பாரபட்சமான அரசின் கருத்துக்களும் இடம்பெற்றிருப்பதாகக் கூறி உரையை வாசிக்காமலேயே அமர்ந்தார்.
தமிழக சட்டப்பேரவையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்
அவரைத்தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி இழப்பீடு நிறுத்தத்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிக்காதது, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். உரைக்கு பிறகு தொடர்ந்து பேசிய சபாநாயகர், ஆளுநர் தேசிய கீதம் வாசிக்காததை ஒரு குறையாக சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் இருக்கும். தமிழகத்தில் பெரிய மழை, வெள்ளம் வந்தபோது கூட நிதி அளிக்கப்படவில்லை. சாவர்க்கர் மற்றும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு தமிழக சட்டமன்றம் சற்றும் குறைந்ததல்ல என்றார். அவர் இப்படி சொன்னவுடனே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். அதன்பிறகு ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்த உரைகளும் அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என சட்டப்பேரவை விதி 17ஐ தளர்த்தி மூத்த அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் நிறைவேற்றினார்.
கடந்த ஆண்டே தமிழக அரசால் வழங்கப்பட்ட அறிக்கையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்திருந்தார் ஆளுநர். இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஆண்டே பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் தற்போது முழு உரையையும் வாசிக்காமல் சென்றது பெரும் பிரளயத்தையே கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், பிப்ரவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையை மாநில அரசு அனுப்பியதாகவும், அப்போதே ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் வாசிக்கவேண்டுமென கோரிக்கை வைத்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆளுநர் உரையானது மத்திய அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை சொல்வதாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, தகவல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தவறான கருத்துக்களை சொல்வதாக இருக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறது. மேலும் ஆளுநரின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரித்துவிட்டது. மேலும் ஆளுநரை, சாவர்க்கர் மற்றும் கோட்சேவை பின்பற்றுபவர் என்றும் சபாநாயகர் கடுமையாக விமர்சித்தார். அதனால் அவை கண்ணியத்தை கருதி ஆளுநர் வெளியேறினார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என் ரவி
ஆனால் மாநில அரசின் அறிக்கை வந்ததும் ஆளுநர் டெல்லி சென்றதாகவும், இதுகுறித்து அங்கு கலந்துரையாடியதில், சில தகவல்களை படிக்காமல் விட்டால் கடந்த முறையைபோல சர்ச்சையாகும், எனவே முழுமையாக படிக்காமல் விட்டுவிடலாம் என முடிவெடுத்து தவிர்த்திருக்கலாம் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியாயினும், ஆளுநரின் இந்த செயல் எதிர்ப்பை தெரிவிப்பது போன்றே இருப்பதாகவும், உரையின் சில அம்சங்கள் ஏற்புடையதாக இல்லையென்றால் அவற்றை தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
பிற மாநிலங்களில் ஆளுநர்களுடனான மோதல்
பொதுவாகவே மத்தியில் வேறு கட்சியும், மாநிலத்தில் வேறு கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது கருத்து மோதல்கள் ஏற்படும். மேலும் மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் அவர்களுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு கீழ்ப்பட்டே ஆளுநர்கள் இயங்கவேண்டிய சூழலும் இருக்கிறது. இதனாலேயே ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இடையே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதல்கள் ஏற்படுகின்றன. தற்போது மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மத்தியில் ஆட்சியில் புரியும் பாஜக ஆட்சியில் இல்லை. எனவே இந்த நான்கு மாநிலங்களிலுமே ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் என்பது நேரடியாகவே நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கேரள சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியபோது அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், 62 பக்க உரையை தவிர்த்துவிட்டு, கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். வெறும் 4 நிமிடங்களே அவருடைய உரை இடம்பெற்றது. இந்நிலையில் தமிழக ஆளுநர் முழு உரையையும் வாசிக்காமல் தவிர்த்திருப்பது மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பனிப்போரை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - மே.வ. முதல்வர் மம்தா பானர்ஜி - கேரள முதல்வர் பினராயி விஜயன் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஆளுநர்கள் அவையின் கண்ணியத்தையும் தனது பொறுப்பையும் கெடுப்பதாகவும், உரையில் தவறு இருந்தால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாமே தவிர, ஆளுநர் அதனை வாசிக்காமல் நிராகரிப்பது உரிமை மீறல் எனவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் ஆளுநர்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டால்தான் மத்திய அரசு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்கும். இதுபோன்று மத்திய அரசுக்கு ஆளுநர்கள் ஆதரவாக நிற்கும்போது அது மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மாநிலங்களின் ஆளுநர்கள் தங்களை மத்திய அரசின் ஏஜெண்டுகள் போன்று நினைத்துக்கொள்வதால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துதல், கோப்புகளை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டல் போன்ற மோதல் போக்குகள் ஏற்படுகின்றன என்கின்றனர்.
ஏற்கனவே ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு
இந்நிலையில் ஏற்கனவே ஆளுநர் ஆர்.என் ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. குறிப்பாக, மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தது. ஆரம்பத்தில் அரசியல் ரீதியான அணுகுமுறையை ஆளுநரிடம் கையாண்ட தமிழக அரசு பின்னர் சட்டரீதியான தனது அணுகுமுறையை மேற்கொண்டது. 2020 முதல் 2023 இறுதிவரை அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் மாநிலத்தின் அன்றாட நிர்வாகத்தையே அவர் முடக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட வழக்கு மனுவில், சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கும் கால வரம்பை உச்ச நீதிமன்றமே நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு
மேலும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வழக்கும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆளுநர்கள் நெருப்புடன் விளையாடுவதாக கடுமையாக சாடியது உச்ச நீதிமன்றம். மேலும், பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடமுடியாது எனவும் கூறியது. அதன்பிறகும், தமிழக அரசு அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டமசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. இவருக்கு ஆதரவாக பாஜக கட்சியினரும் இவருடைய இந்த போக்கை கண்டித்து மாநிலத்தின் ஆளும் கட்சியினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் எதற்கும் ஆளுநர் செவி சாய்ப்பதாக இல்லை.
சட்ட மசோதாக்கள் விவகாரம் தவிர, திமுகவின் செயல்பாடு, கொள்கைகள் குறித்தும் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆளுநர். தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும் என்று பேசியும் சர்ச்சையை கிளப்பினார். இவருக்கு கண்டனம் தெரிவித்து பல திமுக தலைவர்கள் பேசிவந்தனர். மேலும் இவருடைய சனாதன கோட்பாடுகள், திராவிடத்தை விமர்சித்தல் போன்றவையும் தமிழக அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மத சார்பற்ற நாட்டில் இருந்துகொண்டு குறிப்பிட்ட மதத்தை போற்றி பேசி பிறரை புண்படுத்துவதாகவும் கூறினர் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் கடந்த ஆண்டே பேரவையில் விதியை மீறிய ஆர்.என் ரவி, இந்த ஆண்டும் அதற்கும் ஒரு படி மேலே சென்றுவிட்டார். இதனால் அவர் தமிழக சட்டப்பேரவையை மட்டுமல்ல; தனது ஆளுநர் பதவியையும் மதிக்கவில்லை என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.