இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் சுமார் 1500 இஸ்ரேலியர்களும், 8000 -க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 3000க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் முயற்சியில் காஸாவின் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு ஐ. நா உட்பட பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த போரானது சர்வதேச மனித உரிமை சட்ட மீறல் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும், ஹமாஸை ஒழித்துக்கட்டும் வரை ஓயமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் - ஓர் சுருக்கம்

2021 ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு பாலஸ்தீனர்கள்மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவைத்திருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திடீரென ஹமாஸ் அமைப்பினர் பலத்த பாதுகாப்புமிக்க இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், நாட்டுக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கானவர்களை பணையக்கைதிகளாகப் பிடித்துச்சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அடுத்த நாளிலிருந்து இஸ்ரேல் காஸா மீது சரமாரி தாக்குதலை நடத்திவருகிறது.


இஸ்ரேலால் பாதிப்படைந்த காஸாவின் நிலை

பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினாலும், காஸாவை பொருத்தவரை அது கீழ் மற்றும் மேல் என இரு அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மேற்பகுதியில் பொதுமக்கள் வாழ்வதாகவும், அடிப்பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி தங்கள் சாம்ராஜ்யத்தை கட்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஹமாஸ் அமைப்பினரின் இடங்களை முற்றிலும் அழிப்பதே தங்கள் நோக்கம் எனவும், கடைசி ஹமாஸ் ஆள் இருக்கும்வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் எனவும் இஸ்ரேல் உறுதியாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஆயுதம் ஏந்திய வீரர்களை காஸா எல்லையில் நிறுத்தி தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இதனால் காஸாவில் கிட்டத்தட்ட 9000 பேர் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதல் இன்றுவரை தொடர்ந்துவருகிறது. மேலும், காஸாவுக்கு செல்லும் குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், உணவுப்பொருள், மின்சாரம் மற்றும் மருந்துப் பொருட்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்திருக்கிறது இஸ்ரேல்.


காஸா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு தயார் - இஸ்ரேல்

காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் படைகள் கடந்த சில நாட்களாக தரைவழி தாக்குதலை நடத்திவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஹமாஸ் படைக்கு எதிரான போரானது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளதாகவும், இது மிகவும் சவாலானதாகவும், நீண்ட போராகவும் இருக்கப்போகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் காஸாவிலுள்ள ஹமாஸ் படையினரின் இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே காஸாவுக்கு செல்லும் அடிப்படை வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், இணைய மற்றும் தகவல் தொலைதொடர்பு சேவைகளையும் முடக்கிவிட்டது இஸ்ரேல். அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து தரைவழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல், மேலும் தனது நடவடிக்கைகளை விரிவாக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

உடனடி போர் நிறுத்த தீர்மானம்

ஹமாஸ் அமைப்பினரைவிட பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால், உடனடி போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவர ஐ.நா வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பிற்கு 120 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியா உட்பட 45 நாடுகள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் கூறுகையில், “காஸா மீதான இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு தாக்குதல் மனித உரிமை சட்டம் மீறல். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயர கூறிவிட்டு அங்கேயும் குண்டுவீசுவது ஏற்கத்தக்கதல்ல.


இஸ்ரேல் - காஸா விவகாரம் குறித்து ஐ.நா தீர்மான வாக்கெடுப்பு

கடந்த 56 வருடங்களாக தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வன்முறை தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் காஸா மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஹமாஸின் திடீர் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அதற்காக பாலஸ்தீன பொதுமக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

அன்டோனியா குட்ரெஸின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், அவர் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தியது. இந்நிலையில் காஸா மக்களின் நிலைகண்டு, போரை நிறுத்தும் முயற்சியில் சீனா, ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் ஈடுபட்டாலும், அமெரிக்கா மற்றும் அதனை தழுவிய நாடுகள் அந்த முயற்சியை முறியடித்துவிட்டன. இந்நிலையில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்தில், காஸா மீதான போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும், அந்த மக்களுக்கு தண்ணீர், உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் வழக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - காஸா விவகாரத்தால் உலக பொருளாதாரம் பாதிப்படையும் அபாயம்

இந்த தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காதது குறித்து கூறுகையில், “இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை. பயங்கரவாதத்துக்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது. பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த உலகம் விலைபோகக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறது. மேலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் காஸா மக்களுக்கு உதவிகளை வழங்க நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். வன்முறையை தவிர்த்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தி அமைதியான சூழல் உருவாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உலக நாடுகள் நேரடியாக மற்றும் மறைமுகமாக பங்கேற்றிருக்கும் இந்தச் சூழல் உலக பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்? பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க, அமெரிக்காவால் முடியாத பட்சத்தில் கத்தாரின் உதவியை நாடியிருக்கிறது இஸ்ரேல். அமெரிக்காவைவிட வலிமை மிக்கதா கத்தார்? என்பது குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

Updated On 7 Nov 2023 12:28 AM IST
ராணி

ராணி

Next Story