இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களாகவே தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு எதிரான கண்டனங்கள் நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்திருக்கிறார் ஒரு வட இந்திய சாமியார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம், அவர் தெரிவித்த ஒரு கருத்துதான். அப்படி என்ன பேசினார் உதயநிதி? அவர் தெரிவித்த கருத்து ஏன் பலரின் கோபத்தையும் தூண்டியிருக்கிறது? சனாதனம் என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

சனாதன ஒழிப்பும் உதயநிதியின் பேச்சும்

செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருப்பதற்கு வாழ்த்துகள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றையெல்லாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் காரியம்.


சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி

சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் என்பது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தமே நிலையானது. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான். ஆனால் இங்கு எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்கவேண்டும். இதற்காக உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட கழகமும்” என்று பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்து மதத்திற்கு எதிராக அவர் பேசியுள்ளதாக கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், சனாதனத்தை பின்பற்றுகிற இந்துக்களை இனப்படுகொலை (Genocide) செய்யச் சொல்கிறார் என்பது போன்ற கருத்துக்களையும் முன்வைத்தனர்.

குற்றச்சாட்டுகளும் உதயநிதியின் பதிலும்

குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த அமித் மால்வியா, சனாதனத்தை பின்பற்றும் 80% இந்தியர்களை ஒழிக்க உதயநிதி அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “`இந்தியா’ கூட்டணியின் இரண்டு மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசுகிறார்கள். நீங்கள் சனாதன தர்மத்தை முடிவுக்கு கொண்டுவரத் தயாரா?” என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்துக்கு எதிராக இழிவாகப் பேசியிருக்கிறார். சனாதன தர்மத்தை தொற்றுநோய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது, சனாதனத்தை பின்பற்றும் இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுப்பதுபோல இருக்கிறது. சனாதனத்தின் மீதான வெறுப்பை உதயநிதி வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்றுள்ள அவர் மத உணர்வுகளைத் தூண்டுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. சனாதனத்தை பின்பற்றுகிற எனது மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியிருக்கிறார். எனவே அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்” என்று டெல்லி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்த உதயநிதி, “நான் பேசும்போதே இதுகுறித்து நிறையப்பேருக்கு வயிற்றெரிச்சல் வரும் என்று நினைத்தேன். நான் சொன்னதுபோலவே நடந்திருக்கிறது. சனாதன கோட்பாடுகளைத்தான் நான் விமர்சித்தேன். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்கவேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இனப்படுகொலை செய்ய நான் அழைப்பு விடுத்ததாகக் கூறுவது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது. சமீபத்தில் திராவிடத்தை ஒழிக்க வேண்டும், கம்யூனிசத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசினார்கள். அதற்காக திமுகவினரை கொலை செய்வதாக அர்த்தமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமித் மால்வியாவின் X தளப் பதிவை மேற்கோளிட்டு அதற்கு பதிலளித்திருக்கிறார் உதயநிதி. அதில், நான் சனாதனத்தை பின்பற்றுகிறவர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கவில்லை. சாதி, மதத்தின் பெயரில் சனாதன கோட்பாடுகள் மக்களை பிரிக்கின்றன. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.

நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.


உதயநிதியின் படத்தை எரித்த வட இந்திய சாமியார்

சாமியாரின் அறிவிப்பும் உதயநிதியின் நையாண்டியும்

இதற்கிடையே, உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதுமுள்ள பாஜக மற்றும் ஹிந்துத்துவாவை பின்பற்றுகிறவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது. அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா என்ற சாமியார், உதயநிதி சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி இருக்கிறார். அவருடைய தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மேலும் உதயநிதியின் படத்தை கத்தியால் குத்தி கிழித்து தீவைத்து எரித்தார். 100 கோடி மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவின. இது தொடர்பாக பேசிய உதயநிதி, “என் தலையை சீவ பத்து கோடி ரூபாய் எதற்கு? 10 ரூபாய் சீப்பு போதுமே; நானே சீவிக்கொள்வேன்” என்று நக்கலாக பதிலளித்தார்.

இருப்பினும், `இந்தியா’ கூட்டணியிலுள்ள பிற கட்சியினரும் உதயநிதிக்கு எதிர்ப்புக்காட்டுவதாக தெரிகிறது. இப்படி நாடே கொதித்தெழுகிற சனாதன கோட்பாடு என்ன சொல்கிறது? அதுகுறித்து பார்க்கலாம்.

சனாதனம் என்றால் என்ன?

சனாதனம் குறித்து ஆன்மிகவாதிகள் தனியார் செய்தி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை. அதற்கும் சாதிய படிநிலைகளால் ஆன சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை. சனாதனம் என்பது ஒரு பழமையான பண்பாடு, ஒரு வாழ்வியல் நெறிமுறை. தாய் - தந்தை மற்றும் இறைவனை மதிக்கவேண்டும். அனைவரிடமும் அன்புடன் இருக்கவேண்டும். சனாதனத்தின் நீட்சிதான் இந்துமதம். அதில் சாதி என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்ததுதான்” என்கிறார் ஒருவர்.


சனாதன கோட்பாடு

ஆனால் “சனாதனம் முழுக்க முழுக்க ஆரியர்களின் வாழ்வியல் முறை. அதற்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய ஒன்றியத்திலுள்ள மக்களுக்கே எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வாழ்வியல் நெறிமுறை என்றுதான் பேசுவார்கள். ஆனால், அதில்தான் அவர்கள் வர்ணாசிரம அடிப்படையில் மக்களைப் பிரிப்பார்கள். அவர்கள் அதை சொல்லமாட்டார்கள். இதை சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம், மனு தர்மம் என எந்தவகையில் கூறினாலும் அது மனித குலத்திற்கு எதிரானதுதான்” என்கிறார் மற்றொருவர்.

“பழமையான வாழ்வியல் முறையை பின்பற்றினால் ஆர்.என் ரவி தமிழ்நாடு ஆளுநராக இருக்கமுடியாது. பிரதமர் மோடி அந்த பொறுப்புக்கு வந்திருக்க முடியாது. நெருப்பு மேல்நோக்கியே சுடர்வதும், நீர் கீழ்நோக்கியே பாய்வதும் எப்படி மாறாத இயற்கைவிதியோ அப்படி இவ்வாறுதான் வாழவேண்டும் என்று வலியுறுத்துவதே சனாதன தர்மம். ஆனால் இந்த வாசகமே அறிவியல் உண்மைக்கு மாறானது” என்கிறார் மற்றொருவர்.

சனாதனம் குறித்து 1916ஆம் ஆண்டு பனாரஸில் உள்ள மத்திய இந்து கல்லூரியின் நிர்வாகக்குழு சார்பில் வெளியிட்ட ஆய்வு நூலில், சனாதனம் ஆரிய மதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதன தர்மம் என்பது நித்யா மதம். பண்டைகால சட்டம். அது ஆண்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வேத மற்றும் புனித நூல்களை மையப்படுத்தியது. இந்த மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இதுதான் ஆரிய இனத்தினருக்கு கொடுக்கப்பட்ட முதல் மதம் என அந்த ஆராய்ச்சி நூல் குறித்த அறிமுகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.


'இந்தியா’ கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலும் பாஜக யுக்தியும்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பேசியதில் தங்களுடைய கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிட்டன. இந்தக் கூட்டணியின் முக்கிய அங்கம் திமுக. எனவே ஆளும் அரசானது இந்த கூட்டணிக்கு எதிராக மக்களை திசைதிருப்ப உதயநிதியின் பேச்சை ஒரு ஆயுதமாக கையிலெடுத்திருக்கிறது. குறிப்பாக, இந்தியா கூட்டணியானது இந்து மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்க முயற்சிக்கிறது. அதனாலேயே இந்தியா முழுவதும் ஆங்காங்கே உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துவருகின்றன. உதயநிதியின் பேச்சு யாருடைய நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் எதிராக இல்லை எனவும், இனப்படுகொலையோடு அவரது பேச்சை ஒப்பிடுவது பாஜகவின் அறியாமையைக் காட்டுகிறது எனவும் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதற்கு மத்திய அமைச்சர்கள் பதிலளிக்கவேண்டும் என பிரதமர் மோடி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சனாதன கோட்பாடுகளை ஒழிக்கவேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்; ‘இனப் படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்ணினத்திற்கு எதிரான ‘சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உ.பி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக உதயநிதி மீது வழக்குப் போட்டுள்ளனர். சனாதன போர்வையை போர்த்தி பிரதமர் குளிர்காய நினைக்கிறார்” என்று சாடியுள்ளார். உதயநிதியின் கருத்தில் இந்தியா கூட்டணியிலுள்ள மம்தா பானர்ஜி உட்பட பலருக்கும் நாட்டமில்லை என்ற கருத்துகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சனாதனம் குறித்த இந்த சர்ச்சை, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Updated On 18 Sep 2023 6:51 PM GMT
ராணி

ராணி

Next Story