
இந்தியா என்பது பல்வேறு ஜாதி, இனம், மொழி மற்றும் மதத்தினர் வாழக்கூடிய ஒரு கூட்டு சமுதாய பூமி. இங்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமே தவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இதுவரை எடுக்கப்பட்டதில்லை. இதற்கு ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்புகளும் அதே அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. தற்போது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பானது இந்திய அரசியல்களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏனெனில் இந்த கணக்கெடுப்பானது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்புகள் எங்கிருந்து தொடங்கியது? இதன் முக்கியத்துவம் என்ன? சிலர் அதை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து சற்று விரிவாகக் காணலாம்.
கணக்கெடுப்பு எங்கிருந்து தொடங்கியது?
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலத்தில்தான் முதன்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது 1865ஆம் ஆண்டு இந்தியாவின் வட மேற்கு மாகாணத்தில் ஆங்கிலேயர்களால் மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அந்த கணக்கெடுப்பு இந்தியா முழுக்க நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து 1872-இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும் அதில் அப்போதைய வங்க தேசத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை. அதன்பிறகு 1881-இல்தான் முதன்முறையாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 1941 வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மக்கள் தொகை கணக்கிடப்பட்டாலும் இரண்டாம் உலகப்போரின் காரணமாக கடைசி கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறவில்லை. என்னதான் மக்கள்தொகையை கணக்கிட்டாலும் ஜாதி, மதம் மற்றும் இனங்களை கணக்கிட இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு கணக்கெடுப்பின்போதும் இதில் மாற்றம் இருந்ததே அதற்கு காரணம். மேலும் ஒவ்வொரு முறையும் ஜாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது பிரிட்டிஷ்காரர்களுக்கு சவாலாக இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பானது நடத்தப்பட்டாலும், ஜாதிவாரியான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற காரணங்களுக்காக மட்டுமே பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களின் கணக்கு எடுக்கப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோரின் கணக்கானது எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை இந்த கணக்கெடுப்பு குறித்த விவாதங்கள் எழும்போதும் அதற்கு எதிர்ப்புகளும் எழுந்துவந்தன. ஏனெனில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில்கூட உயர் மற்றும் அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடானது உயர் ஜாதியினருக்கே அதிகம் கிடைக்கிறது என்ற புகார்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இந்நிலையில் ஒருவழியாக பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது ஏன்?
பொதுவாக பீகார் மாநிலம் என்றாலே ஜாதி, மத கலவரங்கள் மற்றும் அடக்கு ஒடுக்குமுறைகள் நிறைந்த மாநிலம் என்ற பெயர் உண்டு. மேலும் அங்கு பொருளாதார மந்தநிலை நிலவுவதால் நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக செல்கின்றனர் பீகார் மக்கள். பீகாரில் உயர் ஜாதியினர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ்குமாரின் வருகைக்கு பிறகே அங்கு சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உரிமையும் அங்கீகாரமும் வழங்கப்பட்டன.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்துவருகிறது. இருப்பினும் இந்த கணக்கெடுப்பை நடத்துவதில் பாஜக அரசுக்கு உடன்பாடில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த நிதீஷ்குமார் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். அதன்பிறகு பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டார். இந்த கணக்கெடுப்பு முடிவானது காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டது. அந்த தரவுகளின் அடிப்படையில் பீகாரின் மக்கள் தொகை 13,07,25,310 என தெரிய வந்துள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 27.12 சதவீதமும், பட்டியலினத்தவர் 19.65 சதவீதமும், பழங்குடியினர் 1.68 சதவீதமும், இட ஒதுக்கீடு இல்லாத உயர் ஜாதியினர் சுமார் 15.52 சதவீதமும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் உயர் ஜாதியினரில் பிராமணர்கள் 3.6%, ராஜபுத்திரர்கள் 3.4%, பூமிஹார்ஸ் 2.8% மற்றும் காய்ஸ்தர்கள் 0.6%.
இந்த எண்ணிக்கையை வைத்து பார்த்தோமானால் பீகாரில் அரசுத் துறை மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் உயர் ஜாதியினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். குறிப்பாக அரசுப்பதவிகளில் இருக்கும் பிராமணர்கள் மற்றும் காயஸ்தர்களின் எண்ணிக்கை தங்கள் மக்கள் தொகை சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக இருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் ‘இந்தியா’ கூட்டணி - எதிர்க்கும் பாஜக
இந்த கணக்கெடுப்பின் முக்கியத்துவம் என்ன?
இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அரசுப்பணிகள் மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு போன்றவை முறையாக பின்பற்றப்படுகிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சமூக நீதி அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து, உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை ஒழித்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கும் அரசு மற்றும் அதிகார வேலைகளில் இட ஒதுக்கீடு கிடைக்க திராவிட மற்றும் சமூக நீதி இயக்கங்கள் எப்படி வழிவகை செய்ததோ அதை இனி பீகாரிலும் காண இயலும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். இந்த கணக்கெடுப்பின் தாக்கத்தால் பீகாரின் அரசியல் மற்றும் அரசு கட்டமைப்புகளில்கூட மாற்றங்கள் நிகழலாம் என்று யூகிக்கப்படுகிறது. குறிப்பாக, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பீகார் அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முறையான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘INDIA’ ஆதரவு தெரிவிக்கும் நிலையில் ஆளும் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதேபோன்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு பிற மாநிலங்களிலும் நடத்தப்பட்டால் அரசியல் மற்றும் அரசுப்பணிகளில் கட்டாயம் மாற்றங்கள் நிகழும்.
