இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் தேதிகளும் அறிவித்தாகிவிட்டன. கட்சிகள் கூட்டணிகளை சேர்ப்பதிலும், பிரசாரங்களில் ஈடுபடுவதிலும் முனைப்புக் காட்டி வருகின்றன. பாஜக ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் கட்சிகளை சேர்க்க, காங்கிரஸ் மறுபுறம் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும் தொகுதி பங்கீடுகளையும் அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படி தேர்தல் களம் நாளுக்குநாள் சூடுபிடித்துக்கொண்டே போகிறது. தமிழகத்தை பொருத்தவரை திமுக, பாஜக உட்பட பெரும்பாலான கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அறிவித்துவிட்டன. குறிப்பாக தெலங்கானா ஆளுநராக பதவிவகித்த தமிழிசை சௌந்திரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கிடையே ஒரேமாத கால இடைவெளிக்குள் பிரதமர் மோடி மூன்றுமுறை தமிழகத்திற்கு வந்து போயுள்ளார். நாடு முழுவதும் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் பாஜக தமிழகத்தை குறி வைக்கிறதா? என்ற கேள்வி தற்போது அதிகரித்துவருகிறது. நடக்கவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வியூகம் என்ன? திமுகவுடனான கூட்டணி காங்கிரஸுக்கு கைக்கொடுக்குமா? என்பது பற்றியெல்லாம் இக்கட்டுரையில் சற்று அலசலாம்.

எங்கெங்கு எப்போது தேர்தல்?

மொத்தம் 543 மக்களவை தொகுதிகளைக் கொண்ட இந்தியாவில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து 18-வது மக்களவைக்கான தேர்தல் தொடங்குகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களிலும், ஏப்ரல் 26ஆம் தேதி 13 மாநிலங்களிலும், மே 7ஆம் தேதி 12 மாநிலங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாநிலங்களிலும், மே 20ஆம் தேதி 8 மாநிலங்களிலும் மே 25ஆம் தேதி 7 மாநிலங்களிலும் கடைசியாக ஜூன் 1ஆம் தேதி 8 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியே அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. ஒருசில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


தேர்தல் பணியில் மும்முரம் காட்டும் இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள்தான் அதிக தொகுதிகள் கொண்டவையாக இருக்கின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல் தொகுதிகள் மற்றும் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்களையும், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகளையும் நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.

இதன்கூடவே, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகம். தேர்தல் ஆணையத்தின் தரவுப்படி, நமது நாட்டில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சரி, தேர்தல் விதிமுறைகள் மற்றும் தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒருபுறம் பரபரப்பாக செயல்பட அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் வேட்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் நிலை என்ன?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தனது கட்சி கூட்டணிகள் குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் அறிவித்துவிட்டது திமுக. பல ஆண்டுகளாக தேசிய கட்சியான காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துவரும் திமுக இந்த தேர்தலிலும் அதையே பின்பற்றுகிறது. இந்த முறை 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம்காணுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியிலிருக்கும் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரமும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்தமுறை திமுக வெற்றிபெற்ற கடலூர், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளை இந்தமுறை கூட்டணிக்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. அதேபோல் விசிக மற்றும் மதிமுக கட்சிகள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்ட நிலையில் தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளன. திமுக சார்பில் வட சென்னையில் கலாநிதி வீராசாமியும், தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதியும், ஸ்ரீபெரும்புதுாரில் டி.ஆர்.பாலுவும், நீலகிரியில் (தனி) ஆ.ராசாவும், துாத்துக்குடியில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இதுபோன்ற தெரிந்த முகங்களைத்தவிர, 11 புதியவர்களுக்கு திமுகவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ராகுல்காந்தியுடன் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழகத்தில் தேர்தல் பணியில் திமுக

தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பா?

தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடும் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, அண்ணாமலை தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை அதிகரித்தே தீருவேன் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக இந்தமுறை கூட்டணியை முறித்திருக்கிறது. அதற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுதான் என்று கடந்த ஆண்டே அதிமுக தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் தமிழகத்தில் பாஜக தனக்கென தனி பெரும்பான்மையை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துவருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை. அதற்காகவே ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தினார். யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போதுகூட அதிமுக தலைவர்களை உயர்வாக பேசினார். அதனால் மோடிக்கு அதிமுகவுடனான கூட்டணி தேவை என விமர்சித்தனர் அரசியல் வல்லுநர்கள். இதனிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய விளவங்கோடு எம்.பி. விஜயதரணி பாஜகவில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து ‘பெரிய தலைகள்’ பாஜகவில் இணையப்போவதாக தம்பட்டம் அடித்தார் அண்ணாமலை. குறிப்பாக, திருப்பூரில் பிரதமர் மோடியின் வருகையன்று பெரிய சம்பவம் இருக்கிறது என அவர் கூறியதால் எந்த கட்சியிலிருந்து யார் பாஜகவில் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் அடுத்த நாள் தான் கூறியதைப்போல அண்ணாமலையே குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை. மாறாக எல். முருகனும், வானதி சீனிவாசனும்தான் அங்கு வந்து பதில் சொல்லமுடியாமல் தவித்து பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமளித்தனர். சரி தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்ற கேள்விதானே இப்போது எழுகிறது. ஆம் சம்பந்தம் இருக்கிறது. அண்ணாமலை கூறியதைப் போல திராவிடக் கட்சிகளிலிருந்து ‘பெரிய தலைகள்’ பாஜகவில் இணையாவிட்டாலும், தமிழகத்தில் பாஜகவிற்கான வரவேற்பும், அக்கட்சியின் வளர்ச்சியும் திராவிடக்கட்சிகள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி கலந்துகொண்ட திருப்பூர் கூட்டத்திலும், கன்னியாகுமரி கூட்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள்கூட்டம் அலைமோதியது.

என்னதான் அண்ணாமலை எதிர்பார்த்ததைப் போல பிற தலைவர்கள் பாஜகவில் இணையாவிட்டாலும், அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி, தங்கமணி மற்றும் வேலுமணி போன்றோர் பாஜகவுடன் நெருக்கம் காட்டுகின்றனர் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இது பாஜகவிற்கு தமிழகத்தில் கிடைத்திருக்கிற மிகப்பெரிய மறைமுக ஆதரவு என்றே சொல்லலாம். தவிர சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் இணைத்திருக்கிறார். அதேபோல் அதிமுகவிலிருந்து பிரிந்துசென்ற ஓபிஎஸ்ஸும் தனது ஆதரவு பாஜகவுக்குத்தான் என்று தெரிவித்துவிட்டார். அவருடன் அமமுகவும் இணைந்துகொண்டது.


தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையின்போது மற்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

இவைதவிர இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 தொகுதிகளும், பிற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

பிற கட்சிகளிலிருந்து ஆட்களை பாஜக விலைகொடுத்து வாங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், மோடியின் சிறப்பான ஆட்சியால் கவரப்பட்டுத்தான் எல்லா கட்சியிலிருந்தும் தங்களது கட்சியில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது பாஜக. ஆனால், குறிப்பிட்ட கட்சிகளில் ஆண்டாண்டு காலமாக இருந்தும் எதிர்பார்த்த பதவிகளும், அங்கீகாரங்களும் கிடைக்காததாலேயே பாஜகவில் சேர்கிறார்கள் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை அதிகரிப்பதையே நோக்கமாக கொண்டு பாஜக செயல்பட வேண்டும் என டெல்லி தலைமை அறிவுறுத்தி இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகைபுரிவது அவருடைய நோக்கத்தை வெளிப்படையாக தெரிவிப்பதுபோல் இருப்பதாலோ என்னவோ, கடைசியாக கோவையில் நடந்த பாஜக கூட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் சேரவில்லை. மேலும் அழைத்து வரப்பட்டவர்களும் பாதிக் கூட்டத்திலேயே வெளியேறிய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகின. என்னதான் வட மாநிலங்களில் பாஜகவுக்கு அதீத வரவேற்பு அளிக்கப்பட்டாலும் தென்மாநிலங்களை பொருத்தவரை அது எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான். குறிப்பாக, தமிழகம் பாஜகவுக்கு ஒரு புரியாத புதிர் போன்றே இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஆனால் தேசிய அளவில் பாஜக கூட்டணி வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்கின்றன கருத்துக்கணிப்புகள். இருப்பினும் பாஜகவுக்கு தமிழகத்தின்மீது எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனாலேயே தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்திரராஜன், தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளார்.


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் தமிழிசை சௌந்திரராஜன்

ஆளுநர் பதவியை இதற்காகத்தான் ராஜினாமா செய்தேன் - தமிழிசை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்திரராஜன் எப்போது பாஜகவில் இணைந்தாரோ அப்போது இருந்துதான் தமிழகத்தில் பாஜக என்ற கட்சி குறித்தே பேச ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு எங்கு சென்றாலும் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற அவரது ஒற்றை கூற்றுதான் காரணம் என்றே சொல்லலாம். இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வின் கனிமொழியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் தமிழிசை. ஆனால் அதே ஆண்டு அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே அம்மாநில முதலமைச்சராக இருந்த சந்திர சேகர ராவுக்கும் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. தொடர்ந்து புதுச்சேரிக்கும் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி சாத்தியம் என பலமாக யோசனை நடத்திவந்த பாஜக, தமிழிசை பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை. குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கஷ்டமான முடிவுதான் இது. ஆனால் அதை இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். ஒரு சாதாரண தொண்டனாக இருந்து மூன்றாவது முறை பிரதமர் மோடி ஆட்சியமைக்க அண்ணாமலையின் கரங்களை வலுபடுத்துவேன். எனது கடுமையான உழைப்பு பாஜகவுக்கு இருக்கும். தேர்தலில் நிற்கவேண்டும் என்ற ஆசையை கட்சியிடம் தெரிவித்திருக்கிறேன். மக்கள் பணி செய்யவேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தமிழகத்தில் தாமரை உயர்ந்துகொண்டே செல்கிறது. தமிழகத்தில் பாஜக மிக அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது” என்று கூறினார்.

இந்நிலையில், தென் சென்னையில் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார் தமிழிசை செளந்திரராஜன். உயர் அரசுப்பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இதுபோன்று தேர்தல்களில் போட்டியிடுவது இது முதன்முறை அல்ல; தமிழகத்தில் எப்படியாவது அதிக இடங்களை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கில், தலைமை சொல்லித்தான் தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். எது எப்படியாயினும், தேர்தல் முடிவுகள் இதற்கான பலனை வெளிப்படையாக தெரிவிக்கும். அதுவரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Updated On 1 April 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story